6.4 பிறர்

    இசைத் தமிழ் ஆய்வில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி பிள்ளை, பேராசிரியர். க.வெள்ளை வாரணனார், பேராசிரியர். தனபாண்டியன், பேராசிரியர். வீ.ப.கா.சுந்தரம், பேராசிரியர். சாம்பமூர்த்தி, பி.டி.ஆர்.கமலை தியாகராஜன், முனைவர். எஸ்.இராமநாதன், முனைவர்.சேலம். ஜெயலட்சுமி, முனைவர்.எஸ்.சீதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

  • குடந்தை ப.சுந்தரேசன்

    குடந்தை ப.சுந்தரேசனார் தமிழிசை ஆய்வினை யாழ்நூல் விபுலானந்தரின் மூலம் கற்று, தமிழிசை ஆய்வு மேற்கொண்டார். இயல், இசை, இலக்கணம் நன்கு அறிந்தவராகத் திகழ்ந்ததோடு சிறந்த இசைக் கலைஞராகவும் விளங்கினார். பழந்தமிழிசை வளத்தைத் தமிழகமெங்கும் பரப்பினார். தனது மரபைப் பின்பற்றும் மாணவர் பரம்பரையை உருவாக்கினார். இசைத் தமிழ்ப் பயிற்சி நூல் முதல் ஐந்திசைப் பண்கள் என்ற நூற்களையும் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் தந்துள்ளார்.

  • பேராசிரியர் கு.கோதண்டபாணி பிள்ளை

    இசைத் தமிழின் தொன்மை வளம் பற்றிப் பழந்தமிழிசை என்ற நூலின் மூலம் வெளியிட்டார். முல்லைப் பண் பற்றி ஆராய்ந்துள்ளார். முல்லைப் பண் ஐந்து அலகுகள் கொண்டது என்றும், இதுவே பழமையானது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

  • பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்

    அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றிய பெரியவர்களுள் பேராசிரியர். க. வெள்ளைவாரணனாரும் ஒருவராவார். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவராவார். இவர் இசைத் தமிழ் என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.

  • பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன்

    பேராசிரியர் து.ஆ.தனபாண்டியன் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குடும்ப வழித் தோன்றல்களுள் ஒருவராவார். தமிழ்ப் பல்லைக்கழகத்தின் இசைத் துறைத் தலைவராகப் பணி ஆற்றியுள்ளார். தமிழ்க் கீர்த்தனையாளர்கள், குறவஞ்சி நாட்டிய நாடகம், நாட்டியப் பதங்கள், தேவார இசையமைப்புப் பற்றிய கருத்தரங்குகளை நடத்தினார். புதிய இராகங்கள், இராகங்களின் நுண்ணலகுகள், ஆபிரகாம் பண்டிதர், இசைத் தமிழ் வரலாறு தொகுதி I, II, III நூற்களை வெளியிட்டுள்ளார். இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். வானொலி மற்றும் ஒலிநாடாக்கள் மூலம் இசையமுதம் தந்துள்ளார்.

  • பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம்

    பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் இயல் தமிழ் அறிவும், இசைத் தமிழ் நுட்பமும் நன்கறிந்த தமிழிசை ஆய்வாளர் ஆவார். பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், தமிழிசையியல் என்ற சிறந்த ஆய்வு நூற்களையும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழிசைக்களஞ்சியத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். இக்களஞ்சியங்கள் தமிழிசை ஆய்விற்குப் பெருந்துணை புரியும். தாளத்தின் தன்மை, நுட்பம், கணக்கீடுகள் பற்றி மிகச் சிறப்பாக ஆய்ந்துள்ளார்.

  • பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி

    இசைப் பேராசிரியராக விளங்கிய பேராசிரியர். பி. சாம்பமூர்த்தி அவர்கள் தென்னக இசை (South Indian Music - IV) என்ற நூல்களையும், தென்னக இசை அகராதி (Dictionary South Indian Music and Musicians) என்ற தொகுதிகளையும்,இசை வரலாறு பற்றி (Great Composers and Great Musicians) என்ற நூற்களையும் சுர தாளக் குறிப்புகளுடன் கூடிய இசை நூற்களையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏறத்தாழ 50 நூற்களை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகவும், திருப்பதி வெங்கடேசுவரப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இசைப் பணிக்காக இசைப் பேரறிஞர், சங்கீத கலாநிதி, பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • முனைவர் எஸ்.இராமநாதன்

    முனைவர். எஸ். இராமநாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்னும் நூல் 1956இல் வெளியிடப்பட்டது. இது மிகச் சிறந்த இசைத் தமிழ் ஆய்வு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலில் வீணையில் உள்ள தந்திகளின் ஒலி அளவுக் கணக்குகளை வெளியிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத்துறையில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். இசைப் பேராசிரியராக கர்நாடக இசைக் கல்லூரியில் பணியாற்றினார். அமெரிக்காவில் உள்ள வெஸ்லியன்,கோல்கேட், இல்லினாய்ஸ், வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் இசைப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிலப்பதிகாரத்தில் இசை என்ற பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
சிலப்பதிகாரத்தை     உரையுடன் வெளியிட்ட ஆசிரியர் யார்?
2.
தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்ட நூல்களைக் கூறுக.
3.
கருணாமிர்த சாகரம் என்ற நூல் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது?
4.
ஆபிரகாம் பண்டிதர் முக்கியமாகக் கூற விழைந்தது எது?
5.
பண்டிதரின் குடும்பத்தார் மேற்கொண்ட ஆய்வுகள் யாவை?
6.
மதுரை பொன்னுசாமி படைத்த நூலின் பெயர் என்ன?
7.
பூர்வீக சங்கீத உண்மை உணர்த்தும் கருத்து யாது?
8.
அகில இந்திய அளவில் நடைபெற்ற இசை மாநாடு எங்கு நடைபெற்றது?