5.5 தொகுப்புரை | ||||||||||||||||
அற்புதத் திருவந்தாதி சைவத் திருமுறைகள் 12இல் 11ஆம் திருமுறையில் வைத்துப் போற்றப்படும் சிறப்புடையது. ஒரு பெண் அடியார் இயற்றிய சிறப்பிற்குரியது. பெண்ணின் பெருமையும் சிறப்பும் மதிப்பும் உணர்த்தக் கூடியது காரைக்காலம்மையாருடைய அற்புதத் திருவந்தாதி. இந்நூலில் சைவ நெறியாகிய அன்பு நெறிக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையே வடிவாய் இருக்கும் சிவபெருமானுடைய திருவுருவச் சிறப்பு, திருவருட் சிறப்பு ஆகியன இந்நூலில் பேசப்படுகின்றன. இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்
காரைக்காலம்மையார். ஒப்பற்ற தலைவனாம் சிவபெருமானின் சிறப்பினைப் பாடும் அம்மையின்
அன்புள்ளமும் விருப்பமும் வேண்டுகோளும் இந்நூலில் காணலாம். கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும் சிவபெருமான் எளிமையே வடிவானவன். இயற்கையை
உடலாகக் கொண்டவன். எங்கும் வியாபித்திருப்பவன்.
அவனுடைய திருவருள் திறம் மக்களின் பிறவிப் பிணியைத்
தீர்க்கக் கூடியது. அவன் திருவடியினைப் போற்றாமல் நாம்
காலத்தை வீணே கழிக்கலாகாது. அவனைப் போற்றுவதும் அவன்
திருவடியை வணங்குவதும் நாம் பெற்ற இப்பிறவிக்குப் பயனாகும்.
அந்தாதித் தொடையில் அமைந்த இவ்வற்புதத்
திருவந்தாதியில் காரைக்காலம்மையாரின் உணர்வுகளையும் அதன்
அடியில் உள்ள உறுதிப் பாட்டினையும் உணர முடிகிறது.
கற்பனை நயத்தைச் சுவைக்க முடிகிறது. கவிதைச் சிறப்பினை
அறிய முடிகிறது. சிற்றிலக்கியங்களில் அற்புதத் திருவந்தாதி
அற்புதமான நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
|