தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
1) | தமிழில் சொல்லாக்கச் சிந்தனைகள் குறித்து விவரிக்க. |
உலகமெங்கும் புதிய கருவிகளும், புதிய கோட்பாடுகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பதனால், அவற்றைக் குறிக்கும் சொற்களும் புதிதாய்த் தேவைப்படுகின்றன. இச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? எங்கிருந்து பிறக்கின்றன? ''தற்காலத்தில் நூலாசிரியர்கள், முக்கியமாக, விஞ்ஞான சாத்திரம் முதலியவற்றை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், பத்திராதிபர்கள் முதலியோர் புதுப்புதுப் பதங்களை இயற்றுகின்றனர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்ப்போமானால் அவர்கள் புதிய பதங்களைப் புத்தம் புதியனவாய் இயற்றுகின்றார்கள் என்று சொல்ல முடியாது'' என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. சொற்கள் புத்தம் புதியதாகப் பிறப்பதில்லை என்று குறிப்பிடும் வையாபுரிப் பிள்ளை, இரு சொற்களின் சேர்க்கையாலோ, அல்லது சொற்கள் விகாரப்பட்டோ, வினையடிகள் தாமாக நின்று அல்லது நீட்டல் முதலிய விகாரங்கள் பெற்றுப் புதிய விகுதிகள் சேர்க்கப் பெற்றோ, சொல்லாக்கம் நடைபெறுகிறது என்கிறார். தமிழில் அமைந்துள்ள சொல்லாக்க முறைகளைப் பற்றி முழுமையாகக் கூறாவிடினும், சொல்லாக்கம் பற்றிய பொதுவான அறிமுகத்தினைப் பேராசிரியர் விவரித்துள்ளார். |