6.2 சொற்பொருள் மாற்றம்

சொல்லாக்கம் மூலம் உருவாக்கப்படும் சொற்களின் பொருளானது, நாளடைவில் மாற்றம் அடைகின்றது. புதிய சொற்களும் கூட, சுருக்கமானதாகவும் எளிமையானதாகவும் வடிவெடுக்கின்றன. உலக மாற்றம், அறிவியல் கண்டுபிடிப்பு, சொற்பொருட் பரப்பு மாற்றம், மனித உணர்வு - மனப்பாங்கு மாற்றம், சொற் கடன்பேறு, அலகுத் தொடர்களின் அலகு, தேர்ந்தெடுத்த விளக்கம் போன்றவை சொற்பொருள் மாற்றத்திற்குக் காரணமாக அமையலாம்.

பொருண்மையியலாளர்கள் (பொருளை முக்கியமானதாகக் கருதுபவர்கள்) சொற்பொருள் மாற்றத்தினுக்குப் பின்வரும் காரணங்களைக் குறிப்பிடுவர்:

(i)
மொழியியல் காரணங்கள்
(ii)
வரலாற்றுக் காரணங்கள்
(iii)
சமூகக் காரணங்கள்
(iv)
உளவியல் காரணங்கள்
(v)
அயல்நாட்டுச் செல்வாக்கு
(vi)
புதுச் சொல்லாக்கத்தின் தேவை

6.2.1 மொழியியல் காரணங்கள்

பேச்சு வழக்கில், பிற சொற்களின் தொடர்பால், சொற்பொருள் மாற்றம் நிகழ்கின்றது.

தமிழில் ‘பால்’ என்ற சொல்லின் பொருள் ‘பிரிவு’ என்பதாகும். ஆண்பால், பெண்பால் என்ற பிரிவுகள் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன. அதே ‘பால்’ என்ற சொல், உணர்வு என்ற சொல்லுடன் இணையும்போது ‘பாலுணர்வு’ என்று சொல்லாக்கம் பெறுகின்றது. இச் சொல்லாக்கம் உடலுறவு உணர்வைக் (sexual desire) குறிக்கின்றது.

6.2.2 வரலாற்றுக் காரணங்கள்

ஒரு சொல்லுக்கு இன்று வழக்கிலிருக்கும் பொருளுக்கும், முன்னர் வழங்கிய பொருளுக்குமான வேறுபாடு வரலாற்று அடிப்படையில், புறக் காரணங்களால் ஏற்படக் கூடியதாகும்.

தானியங்களை அளக்கப் பயன்படும் 'கலம்', முன்னர் மரத்தினால் செய்யப்பட்டிருந்த போது, 'மரக்கால்' என அழைக்கப்பட்டது. இன்று இரும்பு போன்ற உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பினும், பண்டைய பெயரான மரக்காலே வழங்கப்படுகிறது.

பண்டைக் காலத்தில் சமணர்கள் தங்கியிருந்த இடம் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டது. சமணர்கள் தமது பள்ளியில் எல்லோருக்கும் கல்வியைப் போதித்தனர். எனவே கல்வி கற்பிக்கப்பட்ட இடத்தினைப் பள்ளி என அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இன்று கல்விக் கூடங்கள் பள்ளி என்று அழைக்கப்படுகின்றன. எனவே பள்ளி என்ற சொல்லானது சொற்பொருள் மாற்றமடைந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம். வரலாற்று நிலையில் ஆராய்ந்தால், இச்சொற்கள் பண்டைக் காலத்தில் உணர்த்திய பொருளினின்று மாறுபட்டு, இன்று வேறு ஒரு பொருளை உணர்த்துவதனை அறிய முடிகின்றது.

6.2.3 சமூகக் காரணங்கள்

சமூக ஏற்றத்தாழ்வு, சாதிய அடுக்குமுறை, பொருளியல் மேம்பாடு, சமூக மதிப்பீடு போன்றன சொற்பொருள் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன.

முன்னர் போர் வீரன் என்ற பொருளில் வழங்கப்பட்ட ‘மறவன்’ என்ற சொல், இன்று ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பதாகச் சுருங்கியுள்ளது. பறை என்னும் கருவியை முழக்குகிறவர்கள் பறையர்கள் என்று அறியப்பட்ட நிலையானது மாற்றமடைந்து, இன்று ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பதாக உள்ளது. இழத்தலைக் குறித்த ‘இழவு’ என்ற சொல், இன்று சாவிற்கானதாக மாறியுள்ளது. சூதாடுமிடத்தினைக் குறித்த ‘கழகம்’ என்ற சொல், இன்று பேரவையைக் குறிப்பதாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறு சொற்களின் பொருள் மாற்றம் பெறுவதற்குச் சமூகமே முதன்மைக் காரணமாகும்.

6.2.4 உளவியல் காரணங்கள்

சொற்பொருள் மாற்றத்திற்கு உளவியலும் காரணமாக அமைகின்றது. விலக்கப்பட்ட சொல் வழக்குகள் பெருகிட அச்சமும் நம்பிக்கையும் அடிப்படையாக விளங்குகின்றன. தாலி அறுதலைத் 'தாலி பெருகிற்று' என்று குறிப்பிடுகின்றனர் இரவில் பாம்பு என்று சொல்லாமல் ‘நீண்டது’ அல்லது ‘நல்லது’ என்று குறிக்கும் வழக்கம் மன அச்சத்தின் அடிப்படையிலானது.

மான், தேன், கிளி, குயில் எனப் பெண்களையும், காளை, சிங்கம் என்று ஆண்களையும் உருவகப்படுத்துவது சொற்பொருள் மாற்றமாகும். இம் மாற்றத்தினுக்கு மனித மனமே மூலமாக அமைகின்றது.

6.2.5 பிற காரணங்கள்

தேவைக்கேற்பவும் சொல்லாக்கம் உருவாகிறது.

  • அயல்நாட்டுச் செல்வாக்கு
  • பிற மொழிகளில் வழங்கும் சொல்லினை அதே பொருளில் தமிழில் வழங்குதலுக்கு அயல்நாட்டுச் செல்வாக்குக் காரணமாக விளங்குகின்றது. ஆங்கிலத்தில் Star என்ற சொல் திரைப்பட நடிகரைக் குறிப்பது போலத் தமிழிலும் நட்சத்திரம் என்ற சொல் திரைப்பட நடிகரைக் குறிப்பதாக மாற்ற மடைந்துள்ளது.

  • புதுச் சொல்லாக்கம்
  • புதிய தேவைகள், சமூக நெருக்கடிகள் காரணமாக புதுச் சொல்லாக்கம் தொடர்ந்து நடைபெறுகின்றது. பிற மொழிகளிலிருந்து சொல்லைக் கடன் பெறுதலும் பழைய சொல்லை மாற்றிப் புதுப்பித்தலும் இதன்கண் அடங்கும்.

    ஏவுதல் என்ற சொல்லினின்று ‘ஏவுகணை’ எனும் சொல் உருவாக்கப்படுகின்றது. உருண்டையாக இருப்பதனைக் குண்டு என்பதால், போரில் பயன்படுத்தப்படும் Bomb 'குண்டு' என்று வழங்கப்படுகின்றது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    சொல்லாக்கம் தேவையா? மொழியியலாளர் கருத்து யாது?
    2.
    சொல்லாக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
    3.
    சொல்லாக்கம் மூலம் உருவாக்கப்படும் சொற்களின் பொருள் மாற்றம் அடையுமா?
    4.
    சொல்லாக்க முயற்சியில் அறிவியல் வளர்ச்சியின் இடத்தினை ஆராய்க.