4.5 தொகுப்புரை | |||||||||||||||||||
புதுக்கவிதை வடிவம் என்னும் இப்பாடத்தில் உருவம், பொருண்மை, உத்திகள், நிலைபேறு ஆகிய தலைப்புகளில் உரிய செய்திகள் வகை தொகைப்படுத்தப்பட்டன. அடிவரையறை, அடியமைப்பு என்பனவற்றில் வரையறை ஏதும் இல்லை. சொற்சுருக்கம் மிக அவசியம், தொடை நயங்கள் இயல்பாக அமையலாம்; வடசொல், ஆங்கிலம், பேச்சு வழக்குச் சொல் ஆகியன இடம் பெறுவதுண்டு. அவற்றை வலிந்து புகுத்துதல் தகாது; யாப்புச் சாயல், நாட்டுப்புறப் பாடல் சாயல், வசனநடை, உரையாடல் பாங்கு என்பனவும் புதுக்கவிதை உருவ அமைப்பில் உண்டு என உருவம் பற்றிய பகுதியில் அறிந்தோம்.
பொருண்மை குறித்த பகுதியில் தனிமனிதன், சமுதாயம், வறுமை, அரசியல், இயற்கை, மத நல்லிணக்கம், உயிரிரக்கம், மனிதநேயம் எனப் பல்வேறு விதமான பொருள்களில் புதுக்கவிதைகள் இயற்றப்படுவதனைக் கண்டோம். உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் புதுக்கவிதைகள் இயற்றப்படுகின்றன. முரண், சிலேடை என மரபுக்கவிதைகளில் உள்ளவை போன்றே சில உத்திகள் அமைவதும் உண்டு. பொருளே புரியாத இருண்மை நிலையும் இதில் இடம்பெறுவதுண்டு. பாரதியாரின் வசன கவிதையும், அதையொட்டிப் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு நடைகளில் புதுக்கவிதை புனைந்தமையும், இதழ்கள் புதுக்கவிதையை வளர்த்தமையும், பிறகு படைக்கப்பட்ட புதுக்கவிதை நூல்களும், இன்றைய நிலையில் இதழ்களும், நிறுவனங்களும் புதுக்கவிதையை வளர்த்து வரும் தன்மையும் நிலைபேறு என்னும் தலைப்பின்வழி அறிந்து கொண்டோம். இவற்றின்வழிப் புதுக்கவிதைகளைப் படைக்க முயன்றால், வெற்றி நிச்சயம். |
|||||||||||||||||||
|
|||||||||||||||||||