1.3 சிறுகதையில் உத்திகள் இலக்கியத்தில் உணர்ச்சியைக் கருத்தாக மாற்ற உதவும் வடிவங்கள் அனைத்தும் உத்திகள் எனப்படுகின்றன. சிறுகதை, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் திறம்பட அமையச் சில உத்திகள் பின்பற்றப்படுகின்றன. சிறந்த உத்திகள் மூலமே சிறுகதைகள் புதுமை படைக்கின்றன. உத்திகள் படைப்பாளரின் தனித்தன்மையைக் காட்டுவதாயுள்ளன. இந்த உத்திகள் அனைத்தும் கதையமைப்பு, கதைமாந்தர்கள் மூலமே வெளிப்படுகின்றன. சிறுகதையில் உத்திகளைக் கீழ்க்காணும் முறைகளில் வெளிப்படுத்தலாம். அவையாவன : 1) குறிப்புமொழி சிறுகதை இலக்கியப் படைப்பு மனத்தில் நின்று நிலைப்பதற்கு அதில் இடம்பெறும் உத்திகளும் காரணமாகின்றன. உத்திகளின் மூலம் செய்திகளை எளிதாக உணரச் செய்யலாம். உத்திகள் விரிந்த சிந்தனைக்கு வழிவகுக்கின்றன. இப்பகுதியின் மூலம் படைப்பிலக்கியத்தின் ஆக்கத்திற்கு உத்திகள் துணை நிற்பதை அறியலாம். சிறுகதைகளில் மொழிநடை எளிமையாய் இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் உள்ள பல்வேறு நிலையினரும் படித்து, பயன் கொள்ளும் இலக்கியம் இது. எனவே எளிய மொழிநடையின் மூலம் மட்டுமே படைப்பாளர்கள் வாசகர்களின் மனத்தில் கருத்துகளைப் பதிக்க வேண்டும். தனித்தமிழ் நடை, பண்டித நடை ஆகியவை சிறுகதைக்குக் கை கொடுக்காது. அதற்காக இழிவழக்குடன் கூடிய நடையும் உதவாது. ஒரு பழகிய நடையுடன் கூடிய பேச்சு வழக்கு சிறுகதைகளில் இடம்பெறல் வேண்டும். இதன் மூலமே படைப்பாளனின் படைப்பிலக்கியம் வெற்றி பெற இயலும். இன்று சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இதற்குக் காரணம், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் மொழிநடையில் சிறுகதைகள் அமைந்துள்ளதே ஆகும். எனவே சிறுகதையின் மொழிநடை, உடன் இருந்து பேசுபவர்களைப் போல் அமைதல் வேண்டும். பொருள் புரியாத, கடினமான மொழிநடை கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். அனைவரும் விரும்பிப் படிக்கும் ஒரு பொதுவான நடையை உடையதாகச் சிறுகதைகள் அமைதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே உரிய மொழிநடை அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிப்பதாக இராது. எனவே அனைவருக்கும் பொதுவான ஒரு எளிய நடையே சிறுகதைப் படைப்பிலக்கியத்திற்குத் தேவையானதாகிறது. படைப்பாளன் தனக்கென்று ஒரு மொழிநடையைப் பின்பற்றும்போது அது அவனுக்குரிய தனிநடை அழகாகிறது. இந்தத் தனி நடையழகு குறிப்பிட்ட ஆசிரியருக்கே உரியதாகி, அவருடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. இலக்கிய உரைநடைக்கு ஒரு வழிகாட்டிபோல் அமைந்த திரு.வி.கலியாண சுந்தரனாரின் நடை குறிப்பிடத்தக்கது. ‘கண்டிக்குச் செல்லும் வழி நெடுக இயற்கை அன்னையின் திருவோலக்கமன்றி வேறென்ன இருக்கிறது? எங்ஙணும் மலைகள், மலைத்தொடர்கள், மலைச் சூழல்கள்; எங்ஙணும் சோலைகள், சாலைகள், கொடிகள், பைங்கூழ்கள்; எங்ஙணும் அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள். இவை யாவும் ஒன்றோடொன்று கலந்து அளிக்கும் காட்சி அன்றோ கடவுள் காட்சி.’ தமிழை மக்களின் மொழியென்று உணர்ந்து கொண்டு, அதைத் தமது நடை வளத்தால் சிறக்கச் செய்தவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி. ‘ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப்போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது. எங்கே முடிவாகிறது என்று தெரிந்து கொள்ள முடியாததாயிருந்தது. தபால் சாவடியின் தூணிலே தொங்கவிடப்பட்டிருந்த தபால்பெட்டி திக்கற்ற அநாதைபோல் பரிதாபத் தோற்றமளித்தது.’ மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் மொழியின் தனி நடை அழகினை அறியலாம். சிறுகதையின் பொருண்மையே சிறந்த கூற்று முறைக்கு அடிப்படையாகிறது. இந்தப் பொருண்மையானது செய்திகளினால் உருவாகிறது. கூற்று என்பது சிறுகதை உரைக்கும் செய்திகளைப் பற்றியதாகும். படைப்பாளர் செய்திகளைத் தாமே கூறுவது போன்றும் அமைக்கலாம் அல்லது பிறர் வாயிலாகக் கூறுவது போன்றும் அமைக்கலாம். பொதுவாக, கூற்று முறை பிறர் கூற்றாக அமையும் போதுதான் அது செய்திமுறைப் பொருத்தமும், இலக்கியச் சிறப்பும் உடையதாகிறது. சிறுகதையில் கதைமாந்தர்கள் கூற்றுக்கு உரியவர்களாகின்றனர். சிறுகதையில் குறைந்த கதைமாந்தர்கள் இடம்பெறுவதால் அனைவருமே கூற்றுக்கு உரியவராகின்றனர். இத்தகைய கூற்றுகள் எளிய நடையில் அமைதல் வேண்டும். குறைந்த, பொருள் பொதிந்த, சுருக்கமான உரையாடல்களாக இவை அமைதல் வேண்டும். 1) தன் கூற்று இதன் மூலம் கூற்றுகளின் வகைகளை அறியலாம். நனவோடை முறை என்பது வாசகர்களைச் சுண்டியிழுக்கும் ஒரு உத்தியாகவே கருதப்படுகிறது. புதினங்களிலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் காலம், இடம் ஆகியவற்றின் பின்னணியில் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கூறாமல், உள்மனத்தின் எண்ணங்களை அலையாகக் கிளப்பிவிட்ட நிலையில் அவற்றிற்குச் சொல்வடிவம் தந்தால் அதனை நனவோடை முறை என்று கூறலாம். ‘நனவோடை’ உத்தியைப் படைப்பாளன் கையாளும்போது சொல்லாட்சி நுட்பம் உடையதாக அமையும். நனவோடை உத்தியை, ‘கவர்ச்சித் திறன் சொல்லாட்சி’ என்றும் குறிப்பிடலாம். இந்த நனவோடை முறை என்பதை, பாத்திரத்தின் நினைவுப் பாதையில் மேல் மன எண்ணத்தின் செயல்பாடாகவும், பாத்திரத்தின் அடிமன எண்ணத்தின் செயல்பாடாகவும் கொள்ளலாம். இம்முறையில் கதை மாந்தர்களின் மனம் பற்றிய பல்வேறு உண்மைகளை அறிந்து கொள்ளலாம். கதை மாந்தர்களின் நிறை, குறைகளை இம்முறையில் இனம் காண முடிகிறது. கதைமாந்தர்களின் உண்மைத் தன்மையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளவும் உதவுகிறது. சில சிறுகதைகள் முற்றிலும் நனவோடை முறையிலேயே அமைந்திருப்பதையும் காண முடிகிறது. இங்ஙனம் சிறுகதைகளில் நனவோடை உத்தி என்பது புதுமைக்கு உரியதாகச் சிறப்புப் பெறுகிறது. நனவோடை உத்தியைப் பயன்படுத்தித் தமிழில் சிறுகதை படைத்தோரில் மௌனி, லா.ச.ராமாமிர்தம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
|