|
2.4
தலைவியின் ஆசைகள்
|
E
|
தலைவிக்குப் பல ஆசைகள் உள்ளன. அவற்றுள் தலைவனை
விட்டுப் பிரியாமல், எப்பொழுதும் அவனோடு இருக்க வேண்டும்
என்ற ஆசை முதன்மையானது. தலைவன் மீது கோபம்
கொள்ளுவதற்கும், அவனை நினைந்து வருந்தும் பிரிவுத்
துன்பத்திற்கும் காரணம், தலைவன் அவள் அருகில்
இல்லாமையேயாகும். எனவே, நேரில் பார்த்து மகிழ்வதையே
மிகவும் விரும்புகிறாள்.
|
2.4.1 கண்களின்
ஆசை
|
நெஞ்சில் நிறைந்திருப்பவன் தலைவன். எனவே,
தலைவன் பிரிந்து
சென்ற காலத்திலும், அகக் கண்ணாகிய நெஞ்சில் பதிய
வைத்திருக்கும் தலைவனைப் பற்றிய பசுமையான நினைவுகளை
எண்ணி மகிழ முடியும். நெஞ்சில் பதிந்திருக்கும் தலைவனின்
உருவத்தை மனக் கண் முன் நிறுத்திக் கண்டு களிக்க முடியும்.
ஆனால், புறக் கண்களுக்கு அந்தத் தன்மை இல்லை. தலைவன்
நேரில், கண் முன்னே வந்தால்தான் கண்களால் பார்க்க இயலும்.
இதை நன்கு அறிந்தவள் தலைவி. எனவே, தலைவனை நேரில்
பார்க்க வேண்டுமென்று விரும்புகிறாள். தன் விருப்பத்தைக்
கண்மேல் பழி சுமத்தி, நெஞ்சைப் பார்த்து,
|
கண்ணும் கொளச் சேறி நெஞ்சே இவை என்னைத்
தின்னும் அவர்க் காணல் உற்று
|

(குறள்: 1244)
| |
(கண்ணும் கொளச் சேறி = கண்ணையும் உடன்கொண்டு
சேர்வாயாக, அவர்க்காணல் உற்று = அவரைக் காணும் பொருட்டு)
என்று
கூறுகிறாள்.
நெஞ்சே!
தலைவனிடம் நீயே எப்பொழுதும் செல்கின்றாய். எம்
கண்களையும் அழைத்துக் கொண்டு செல். ஏன் என்றால், இவை,
அவரைக் காண வேண்டும் என்ற பெரும் விருப்பத்தால், என்னை
மிகவும் துன்புறுத்தும் என்று தன் நெஞ்சிடம் வேண்டுகிறாள் தலைவி.
‘தின்னும்’
என்று ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறாள்.
‘தின்னும்‘ என்றால் ‘உண்ணும்’ என்று பொருள். உணர்ச்சி
வயப்பட்டு பேசும்பொழுது, மிகையாகச் சொற்களைப் பயன்படுத்துவது
இயல்பு. தலைவனை உடனே பார்க்க வேண்டும். எப்படியாவது
பார்க்க வேண்டும் என்ற அவளது உணர்வே, ஆசையே, ‘தின்னும்’
என்னும் சொல்லாக வெளிப்படுகிறது. கண்களுக்குத் தலைவனைக்
காட்டாவிட்டால், அவை என்னை உண்டு விடும். அவை தரும்
தொல்லைகளால் நான் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவேன் என்பதே
இதன் பொருள்.
| |