பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு
திருமுறைகளாகத்
தேவாரப் பாடல்கள் தொகுக்கப் பெற்றன. பின்
எட்டாம்
திருமுறையாக மாணிக்கவாசகரின்
பாடல்கள் தொகுக்கப்
பெற்றன. இறைவனை அவர் போற்றிப் பாடிய பாடல்கள்
திருவாசகம் எனத்
தொகுக்கப் பெற்றன. இவர் தன்னைத்
தலைவியாக நினைத்துக் கொண்டு
சிவபெருமானைத்
தலைவனாக எண்ணிப்பாடிய அகப்பொருட்
பாடல்கள்
திருக்கோவையார் என்ற
நூலாகத் தொகுக்கப் பெற்றது.
இவருடைய வரலாற்றைக் கடவுள்
மாமுனிவர் பாடிய
திருவாதவூரார் புராணம் என்ற நூலும், பரஞ்சோதி
முனிவர்
பாடிய திருவிளையாடற் புராணமும், திருஉத்தரகோச
மங்கைத்
தலபுராணமும், திருப்பெருந்துறைத் தலபுராணமும்
குறிப்பிடுகின்றன.
செந்தமிழ் மணிவார்த்தைகளால்
இறைவனைப் பாடிய
காரணத்தால் மணிவாசகர் என அழைக்கப்பட்டார். பாண்டிய
நாட்டுத் திருவாதவூரில்
பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள்
பற்றித் தெரியவில்லை. அரிமர்த்தன
பாண்டியனிடம்
அமைச்சராய் இருந்தவர். ஒருமுறை பாண்டிய மன்னன்
தந்த
பொருளைக் கொண்டு படைக்குரிய
குதிரைகளை
வாங்குவதற்காகக் கீழைக் கடற்கரைக்குப்
புறப்பட்டார்.
ஆனால் வழியில் திருப்பெருந்துறை
என்ற திருத்தலத்தில்
குருந்த மரத்தடியில் ஞானாசிரியராக
இருந்த இறைவன் இவரை
ஆட்கொண்டு இவருக்குச் சிவஞானத்தை
அருளினார்.
அப்போதே இவர் துறவுபூண்டு தவம் மேற்கொண்டார். தான்
குதிரை வாங்கக் கொண்டு வந்த பொன்னைக்
கொண்டு
அங்கேயே இறைவனுக்குக் கோயில் கட்டினார். அதனால்
பாண்டியன் அளித்த தண்டனைக்கு ஆளானார்.
சிவபெருமான் நரியைப் பரியாக்கி
(குதிரை), பரியை
நரியாக்கிப் பிட்டுக்கு மண் சுமந்து இவருடைய பெருமையை
உலகிற்கு உணர்த்தினார். பின்னர் அமைச்சர் பணியிலிருந்து
நீங்கி இறைத்தொண்டில் முழுமையாக
ஈடுபட்டார்.
திருத்தலங்கள் தோறும் சென்று இறைவனைப்
பாடினார்.
இறுதியில் இவர் தில்லையில் இறைவனுடன்
இரண்டறச்
சோதியில் கலந்தார் என்பன இவரின்
வரலாற்று
நிகழ்ச்சிகளாகும். இவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிப் பல்வேறு
கருத்துகள் உண்டு. இவர் தேவார ஆசிரியர்கள் மூவருக்கும்
முற்பட்டவர் என்றும் பிற்பட்டவர் என்றும்
இருவேறு
கருத்துகள் உள்ளன. இருப்பினும் சைவ இலக்கிய வரலாற்று
ஆசிரியர் க. வெள்ளைவாரணர் அவர்கள் கருத்துப்படி
கி.பி. 792 முதல் 835 வரை வாழ்ந்த வரகுணபாண்டியனின்
ஆட்சிக்காலமே இவருடைய காலம் என்று ஏற்கலாம்.
இவர்
32 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கூறுவர்.
3.2.1 திருவாசகம்
திருவாசகத்திற்கு
உருகாதார் ஒருவாசகத்திற்கும்
உருகார் என்ற பழமொழி இன்றும் வழங்கப் பெற்று வருகிறது.
திருவாசகம் என்ற பெயர் திருவுடைய சொற்களால் ஆகிய
அருள்நூல் எனப் பொருள் தருவதாகும். திருவாசகம்
51
தலைப்புகளைக் கொண்ட பதிகங்களில் 659 பாடல்களைக்
கொண்டதாகும். திருவாசகத்தில் உள்ள பதிகங்களில்
10
பாடல்கள் அமைந்த பதிகங்களும் உண்டு. பத்திற்கு மேற்பட்ட
பாடல்களைக் கொண்ட பதிகங்களும் உள்ளன. ஒவ்வொரு
பதிகத்திற்கும் உள்ள தலைப்புகள் பதிகத்தில் அமைந்துள்ள
சொற்றொடரையோ, பொருட் பகுதியையோ அடிப்படையாகக்
கொண்டவையாகும்.
முதல் நான்கு பதிகங்கள்
நூலிற்குரிய பாயிரம்போல்
அமைந்துள்ளன. சிவபுராணம், கீர்த்தித்
திருஅகவல்,
திருவண்டப்பகுதி, போற்றித்திரு அகவல்
என்பன
அப்பதிகங்களாகும். ஆசிரியப்பாவின்
பாவகையில்
அமைந்தவை. அவை நூற்றுக்கு மலோன அடிகளையும்
பெற்றுள்ளன. இப்பதிகங்களில் இறைவனுடைய பழமையான
வரலாறும், பெருமைகளும், உயிர்களின்
தன்மைகளும்,
மலங்களின் பிணிப்பும் கூறப்பெற்றுள்ளன.
திருச்சதகம் என்ற பதிகம் பத்துத்
தலைப்புகளையும் நூறு
பாடல்களையும் கொண்டதாகும். நீத்தல் விண்ணப்பம் என்ற
பதிகம் 50 பாடல்களை அந்தாதி முறையில்
பெற்றதாகும்.
திருவெம்பாவை, பாவைப் பாடல்கள் என்ற சிற்றிலக்கியத்தில்
முதன்மையானதாகும். இதுபோல ஒவ்வொரு திருப்பதிகத்திற்கும்
தனித்தனிப் பெருமை உண்டு. அவற்றை விரிக்கின் பெருகும்.
திருவாசகத்தில் மகளிர் விளையாட்டுகள் பல குறிக்கப் பெற்று
அவற்றின் மூலமாக இறைவனின்
பெருமைகள்
கூறப்பெறுகின்றன.
திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம்,
திருத்தெள்ளேணம்,
திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருப்பொன்னூசல்
ஆகிய திருப்பதிகங்கள் சிறுமியர்
அல்லது மகளிர்
விளையாட்டுகளின் அமைப்பைப் பெற்று இறைவனுடைய
புகழைப் போற்றுகின்ற பதிகங்களாகும்.
அதுபோலப் பத்து என்ற எண்ணிக்கையைக்
குறிப்பிடும்
பதிகங்களும் உண்டு. அன்னைப்பத்து,
குயில்பத்து,
செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, குழைத்த
பத்து, அச்சப்பத்து, பிடித்தபத்து, அற்புதப்பத்து
என்பன
போன்ற பதிகங்களைக் குறிப்பிடலாம்.
பத்துப் பாடல்களில்
குறைந்த பதிகங்களும் உண்டு.
திருப்படையெழுச்சி என்ற பதிகம் இரண்டே பாடல்களைக்
கொண்டதாகும். பண்டாய நான்மறை, ஆனந்தமாலை என்ற
பதிகங்கள் ஏழு பாடல்களைப்
பெற்றவையாகும்.
திருப்படையாட்சி என்ற பதிகத்தில் எட்டுப்
பாடல்கள்
அமைந்துள்ளன. திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களில்
தனக்கு ஞானாசிரியராக எழுந்தருளி இறைவன் அருளியதைப்
பெருமையாக மாணிக்கவாசகர் பாடியுள்ளார். “அத்தன் எனக்கு
அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே” என்று அச்சோப்
பதிகத்தில் அவர் கூறியுள்ளதைக் குறிப்பிடலாம். தன்னுடைய
வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகத்தில் பல இடங்களில்
மணிவாசகர் குறிப்பிட்டுச் செல்கிறார். இறைவன்
நரியைப்
பரியாக்கியதைப் பற்றியும், பிட்டுக்கு மண் சுமந்ததைப் பற்றியும்
பல திருப்பதிகங்களில் அவர் குறிப்பிடுவன வரலாற்றிற்குரிய
சான்றுகள் ஆகும். திருவாசகப் பாடல்கள் அனுபவப் பாடல்கள்
என்று சமய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவையாகும்.
தத்துவக் கொள்கைகள் மிக எளிமையாகத்
திருவாசகப்
பாடல்களில் காணப் பெறுகின்றன. சைவத் தத்துவங்களைக்
குறிப்பிடுகின்றவர்கள் திருவாசகப் பாடலை மேற்கோளாகக்
காட்டாமல் இருக்க இயலாது.
இன்றையச் சைவ
உலகில் திருவாசக நூலை
முழுமையாக ஒரே நாளில் ஓதுகின்ற முற்ற
ஓதல் வழக்கமும்
பரவலாகக் காணப்படுகின்றது. நாள்தோறும் திருக்கோயில்களில்
இறைவனின் வழிபாட்டில் தேவாரம் பாடும் அறிஞர்களால்
பாடப்பெறுகின்ற பஞ்சபுராணப் பாடல்களில் திருவாசகமும்
ஒன்று. திருவாசகம் பிற சமயத்தாரையும் ஆட்கொண்ட அரிய
நூலாகும். எடுத்துக் காட்டாகக் கிறித்தவ மதப்
பாதிரியார்
ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில்
மொழி
பெயர்த்ததைக் குறிப்பிடலாம்.
3.2.2 திருக்கோவையார்
‘பாவை
பாடிய வாயால் கோவை பாடுக’ என்று
தில்லை நடராசர் அருளியதால் பாடப்பெற்ற நூல்
என்ற
பெருமையை உடையது திருக்கோவையார்,
அதனால்
திருச்சிற்றம்பலக் கோவையார்
என்றும் அழைக்கப் பெறும்.
மணிவாசகர் பாட இறைவன் அந்தணனாக வந்து தோன்றி
ஏட்டில் எழுதிக் கொண்டார் என்ற பெருமையும் உண்டு.
அகப்பொருள் துறைகளைப் பொருள் தொடர்பு அமையும்
வண்ணம் கோவையில் அமைத்துப் பாடப்பெறும் சிற்றிலக்கியம்
கோவை இலக்கியம் ஆகும். கோவை
இலக்கியங்கள்
கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடப்பெறுவது மரபு.
25
பகுதிகளில் 400 பாக்கள் இடம் பெறுவதும்
மரபாகும்.
இத்தகையமரபுகளுக்கு முதன்மையாக அமைந்தது மணிவாசகர்
பாடிய திருக்கோவையார் ஆகும். 400 பாடல்களுக்கும் 400
அகத்துறைத் தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு பாடலின்
பொருளையும் தொகுத்துக் ‘கொளு’ என்று கூறப்பெறுகின்ற
இரண்டுஅடிப் பாடல்களும் உள்ளன. இவற்றை அமைத்தவர்
யார் என்பது தெரியவில்லை.
திருக்கோவையாரில் மணிவாசகர்
தம்மைப்
பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பாடியிருக்கிறார். தன்னுடைய
காதலனாகத் தில்லைச் சிற்றம்பலத்தானைப்
படைத்துக்
கொண்டுள்ளார். எனவே திருக்கோவையார் மானிடப் பெண்
ஒருத்தி சிவபெருமான் மீது காதல் கொண்டு பாடிய
நூலாக
அமைந்துள்ளது. இவ்வாறு பாடுவதைத் தமிழ்
இலக்கண
நூல்கள் ‘கடவுள் மாட்டு மானிடப்
பெண்டிர் நயந்த
(ஆசைப்பட்ட) பக்கம்’ என்று
குறிப்பிடுகின்றன.
திருக்கோவையாருக்கு, உரையாசிரியர்களில் ஒருவரான
பேராசிரியரின் உரை உள்ளது. இவ்வுரையின் மூலம் ஒவ்வொரு
பாடலுக்கும் தத்துவப் பொருளும் கிடைக்கிறது. அப்பொருளை
ஆராய்ந்து பார்த்தால் திருக்கோவையார் என்பது அகத்துறை
நூல் மட்டும் அல்ல, மிகச் சிறந்த
சைவ தத்துவநூல்
என்பதையும் உணரலாம்.
இத்தமிழ்க் கோவையில்
இடம்பெற்று உரையாடுகின்ற
தலைவி, தோழி, செவிலி, பாங்கன் ஆகிய
அனைவரும்
தில்லையம்பலத்தானிடம் பேரன்பு கொண்ட பக்தர்களாகவே
அமையப் பெற்றுள்ளனர். மேலும்
இந்நூலுக்குக்
‘கிளவித்தலைவன்’ என்ற அமைப்பில் பாடல்தோறும் காதல்
தலைமகன் ஒருவன் குறிக்கப் பெறுகின்றான்.
அத்துடன்
பாடல்தோறும் தில்லைச் சிற்றம்பலத்தானின் பெருமையும்
குறிக்கப் பெறுகிறது. எனவே திருக்கோவையாரில் பாட்டுடைத்
தலைவனாகத் தில்லைச் சிற்றம்பலத்து இறைவனும், கிளவித்
தலைவனாகச் சிவபக்தி பூண்ட ஒருவனும் அமைகின்றனர்.
கிளவித் தலைவன் ஆன்மாவின் இயல்பை உணர்த்துபவனாக
அமைகின்றான். அவனைக் காதலிக்கின்ற
தலைவியின்
இயல்புகள் எல்லாம் இறைவனது
இயல்புகளாகவும்
கூறப்படுகின்றன. பாடல்களில் வரும்
தலைவி
சிற்றம்பலம்போல வருணிக்கப்படுவதால் தலைவியின் இயல்புகள்
இறைவனின் இயல்புகளாகச் சொல்லப்படுகின்றன. மேலும்
இக்கோவைக்குப் பேரின்பப் பொருளாகிய முக்திப் பொருள்
நிலையிலும் உரை கூறுதல் உண்டு. இவ்வாறு பலவித நோக்கில்
திருக்கோவையாருக்குப் பொருள் காணப் பெறுவதால் சைவ
சித்தாந்தப் பொருள் அமைப்பில்
திருக்கோவையார்
அமைந்திருக்கிறது எனலாம். |