5.7 தொகுப்புரை

    இந்திய மொழிகள் பலப்பல. அவற்றுக்கிடையே அடிநாதம்
ஆக இழையோடும் ஒற்றுமைக் கூறுகளைக் கண்டறிந்து அவற்றை
‘ஒரு குடும்பம் சார்ந்தன’வாக அடையாளப்படுத்தினர்.
அவ்வகையில் ‘திராவிட மொழிக் குடும்பம்’ ஒரு குடும்பம்
ஆகும். அதில் தமிழ் மொழி முதன்மை பெற்று இலங்குகிறது.
எல்லா மொழிகளையும் ஆய்ந்து, இவற்றின் மூலம் இவ்வாறுதான்
இருத்தல் வேண்டும் என்று அறிஞர்கள் மீட்டுருவாக்கம் செய்து,
‘மூலத் திராவிடம்’ அல்லது ‘தொல் திராவிடம்’ என்பதை
வடிவமைத்தனர். அதன் கூறுகள் தமிழில் வெகுவாகப்
பொருந்தியுள்ளன. திராவிட மொழிகளுக்கிடையே பெயர்கள்,
வினைகள், எண்ணுப் பெயர்கள், மூவிடப் பெயர்கள், சுட்டுப்
பெயர், வினாப் பெயர், வேற்றுமைகள், உருபேற்கும் முறை,
உடம்படுமெய் பெறல், சொல்லமைப்பு என்று எல்லா
நிலைகளிலும் ஒற்றுமைக் கூறுகள் காணப்படுகின்றன. திராவிட
மொழிக் கூறுகள் மிகுதியும் நிரம்பப் பெற்றுத் தமிழ்
மொழி அக்குடும்பத்தில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.


தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.
அடிச்சொற்கள் திராவிட மொழிகளில் எங்ஙனம்
உள்ளன?
2.
ஒருமை, பன்மைப் பகுப்பு எப்படி உள்ளது?
3.
தன்வினை எங்ஙனம் பிறவினை ஆக்கப்படுகிறது?
4.
சுட்டுச் சொற்கள் யாவை?
5.
மூலத் திராவிடம் (அ) தொல் திராவிடம் என்றால்
என்ன?
6.
தொல் திராவிடத்தில் உயிர் எழுத்துகள் எத்தனை?