|
மனோன்மணீயத்தின் இரண்டாவது சிறப்பாக, அந்நாடகம்
பழந்தமிழ் நூற்கருத்துகளையும்
பழமொழிகளையும்
மேற்கோளாகக் காட்டுவதைக் கூறலாம்.
திருக்குறள்
திருக்குறள் கருத்துகள் இடம் அறிந்து பாத்திரப்
படைப்பின்
தன்மை அறிந்து இடம்பெறுகின்றன.
ஏறக்குறைய இருபத்தைந்து
இடங்களில் குறள் கருத்துகளைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
கையாண்டிருக்கிறார்.
முதல் நாள் போரில் தோல்வி அடைந்த சீவகன்,
வெட்கித்
தலைகுனிந்து இனி, என் உயிரை வீணே
சுமந்து திரிய மாட்டேன்
என்று கூறுகிறான்.
....................... ஓர் சிறு
மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமான்
பெருந்தகை பிரிந்தும் ஊன்சுமக்கும் பெற்றி
மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா
(அங்கம் 4 : களம் 3 : 49-53)
(ஊன் - உடல்)
என நாராயணனைப் பார்த்துச் சீவகன்
கூறுகிறான்.
இக்கருத்து,
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் : 969)
(அன்னார் - போன்றவர்)
மற்றும்
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து (குறள் : 898)
(ஓம்பும் - பாதுகாக்கும்)
ஆகிய குறள் கருத்துகளைப் பின்பற்றி எழுந்த
கருத்துகளே ஆகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள்
இவர் பழந்தமிழ் இலக்கியங்களாகிய புறநானூறு,
சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், திருவாசகம்,
திருவிசைப்பா, பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம்,
நைடதம், நளவெண்பா, திருவிளையாடற்புராணம், நீதிநெறி
விளக்கம், பட்டினத்தார்
பாடல்கள் எனப் பழந்தமிழ்
இலக்கியங்கள் பலவற்றைத்
தம் நாடகத்துள்
பயன்படுத்தியுள்ளார்.
ஒரு செவ்வியல் (Classical) நாடகத்துக்கு
உரிய
தன்மைகள் எவை என்றால்,
1) குறிப்பிட்ட நாடகம் எழுந்துள்ள மொழியின் பழமையான
உயர்ந்த எண்ணங்களை அந்த நாடகத்தினுள் சேர்த்துக் கூறுவது.
2) அதுவரை எழுந்துள்ள இலக்கியங்களின்
நேர்த்தியான
மொழி வெளிப்பாட்டைத் தம் நாடகத்தினுள் இணைப்பது.
3) பொருத்தமான பழைய இலக்கிய மேற்கோள்களை
எடுத்தாள்வது
போன்றனவாகும்.
ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமான
சேக்ஸ்பியர்
நாடகத்துள்ளும் இவற்றைக் காணலாம்.
பேராசிரியர் சுந்தரம்
பிள்ளை அவர்கள் தம் நாடகத்தை
ஒரு செவ்வியல் நாடகமாக
உருவாக்கி இருப்பதால்
இத்தகைய பழைமைக் கூறுகள்
அனைத்தையும்
நாடகத்தினுள் கொண்டு வந்துள்ளர்.
பழமொழிகள்
தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வழங்கிவரும்
பழமொழிகள்
மனோன்மணீய நாடகத்தில் ஆங்காங்கே
இடம் பெறுகின்றன.
ஏறக்குறைய அறுபதுக்கும் மேற்பட்ட
பழமொழிகள் நாடகத்தில்
இடம் பெற்றுள்ளன. கதையை வலிமைப்படுத்தவும், பாத்திரப்
படைப்பை அழகுபடுத்தவும், நாடகப் பின்னணிக்கு
மெருகூட்டவுமாகப் பல சூழல்களில்
இப்பழமொழிகள் இடம்
பெற்றுள்ளன.
காயும் பழமும்
மனோன்மணியின் மனவேறுபாட்டிற்குக் காரணம்,
அவள்
திருமணப் பருவம் அடைந்தமையால்தான் என்று
சுந்தர முனிவர்
கூறுகிறார். இதனை விளக்குவதற்கு ஓர்
அருமையான
பழமொழியைப் பயன்படுத்துகிறார். இது ஒரே
வேளையில்
பழமொழியாகவும் உவமையாகவும் அமைந்து
மனோன்மணியின்
மனக்கருத்தை வெளிப்படுத்துகிறது.
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்
புளியம் பழமும் தோடும் போலாம்
(அங்கம் 1 : களம் 4 : 167-169)
(தோடு - புளியம் பழத்தின் மேல் தோல் பகுதி)
என்று கூறி, புளியம் பழத்துக்கும் அதனைப் பற்றி
இருந்த ஓட்டுக்கும் இடையே உள்ள உறவினைக் கூறி
மனோன்மணியின் மனநிலையைப் படம் பிடித்துக்
காட்டுகிறார்.
"காய் நிலையில் புளியங்காய் ஓட்டினையும் அதனைப்
பற்றி
இருக்கும் சதைப் பகுதியையும் பிரிக்கமுடியாது; அதே
புளியங்காய் பழமாகும் பொழுது ஓட்டையும் சதைப்
பகுதியையும்
ஒட்ட வைக்க முயன்றாலும் அது ஒட்டாது.
பெண்களின்
மனநிலையும் அப்படித்தான். குழந்தைப்
பருவத்தில் அவர்களின்
சொல்லும் செயலும் பிரியாமல்
இருக்கும்; ஆனால் பருவமுற்றுக்
காதல் கொள்ளத்தகும்
மனநிலையில் அவர்களின் சொல்லும்
பொருளும் -
சொல்லும் செயலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து
நிற்கும்.
இந்த உணர்வைத்தான் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
மேலே
சுட்டிய பழமொழி மூலம் வெகு அழகாக
வெளிப்படுத்துகிறார்.
மனோன்மணீய நாடகத்தில் சாதராணச் சேவகன் முதல்
மன்னர் வரை அனைவரும் பழமொழியைப் பயன்
படுத்துகின்றனர். பழமொழி அனைத்து நிலை மக்களுக்குமான
பொதுமொழி என்பதால்தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
அவற்றை அனைத்துப் பாத்திரப் படைப்புகளிலும்
பயன்படுத்துகிறார்.
|