உலக உயிர்களின் துன்பத்திற்குக் காரணமான பன்னிரு
சார்புகளை விளக்கும் வகையில் இரண்டு வட்ட வடிவ விளக்கப்
படங்கள் சுட்டப்படுகின்றன. அப் படங்கள் ஊழ் வட்டம்
அல்லது ஊழ் மண்டிலம் என்று அழைக்கப் படுகின்றன.
மாணவர்களே! இப்படத்தை நன்கு கவனியுங்கள். முதலில்
உள்ள பெரிய வட்டத்தில் பன்னிரண்டு நிதானங்களின்
பாலிமொழிப் பெயர்களும் அவற்றிற்குக் கீழே அவற்றின் தமிழ்ப்
பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 1 என்ற
எண் இடப்பட்ட இடத்தில் அவிஜ்ஜை என்பது முதல் நிதானத்தின்
பாலி மொழிப் பெயர். அதற்குக் கீழே அதன் தமிழ்ப் பெயர்
பேதைமை தரப்பட்டுள்ளது. இதுபோலவே பிறவற்றையும் படித்துப்
பாருங்கள்.
அதற்கு அடுத்த உள் வட்டத்தில் நான்கு கண்டங்கள்
தரப்பட்டுள்ளன. முதல் கண்டத்திற்கு இரண்டு நிதானங்கள்
இரண்டாம் கண்டத்திற்கு ஐந்து நிதானங்கள். மூன்றாம்
கண்டத்திற்கு மூன்று நிதானங்கள். நான்காம் கண்டத்திற்கு
இரண்டு நிதானங்கள். அதாவது நான்கு கண்டங்களில்
பன்னிரண்டு நிதானங்களும் அடைபட்டுள்ளன.
இவற்றின் முதல் மற்றும் நான்காம் கண்டங்கள் சிறியவை.
மூன்றாம் கண்டம் சற்றுப் பெரிதானது. இரண்டாம் கண்டம்
மிகவும் பெரிதானது.
அதற்கு அடுத்த உள்வட்டம் (மிகச்சிறிய வட்டம்) நோய்,
காரணம் என்று குறிக்கப்பட்டுள்ளது. நோய்கள்தாம்
பெரும்பகுதியை நிரப்பி உள்ளன.
இங்ஙனம், மேற்காட்டிய படம் பன்னிரு சார்பு, நான்கு
கண்டம், மூன்று சந்தி, நோய், காரணம் ஆகியவற்றைக்
காட்டுகிறது.
அன்பார்ந்த மாணவர்களே! மேலே உள்ள படத்தை
உற்றுப் பாருங்கள். இப்படத்தில் மூன்று காலம், குற்றம், வினை,
பயன் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
இறந்த காலம், எதிர்காலம் ஆகிய இரண்டு வட்டங்கள்
மிகக் குறுகியவை. நிகழ்காலம்என்ற வட்டம் மிகப் பெரியது.
இறந்த காலமும், எதிர் காலமும் நம் கையில் இல்லை.
நிகழ்காலம் மட்டுமே நம்கையில் உள்ளது. எனவே, நிகழ்காலச்
செயல்களில் நாம் கவனமாக ஈடுபட வேண்டும்.
இறந்த காலத்தில் ஓர் உயிர் செய்கின்ற செயல்களின்
அடிப்படையில் (பேதைமை, செய்கை) உயிர்களின் (உணர்வு,
அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, கருமத்
தொகுதி) அமைகின்றன.
உயிர்களின் நிகழ்காலத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்பவே
எதிர்காலத் தோற்றம், வினைப்பயன் ஆகியவை ஏற்படுகின்றன.
எனவே, உலக உயிர்களின் இன்ப துன்பங்களுக்கு
நிகழ்காலச் செயற்பாடுகள் பெரிதும் காரணமாகின்றன. அதனால்
பரிநிர்வாணம் (வீடுபேறு) பெற இப்பன்னிரு சார்புகளிலிருந்து
உயிர்கள் விடுபட வேண்டும்.
மேலே காட்டிய இரண்டு படங்களும் உலக உயிர்கள்
வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிச் சுழலுவதைச் சுட்டிக் காட்டும்
வகையில் அமைந்துள்ளன.
|