பூங்குடி, அழகிய கிராமம். அங்குதான் அருண் பிறந்தான். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழா எப்பொழுது வரும் என்று ஏக்கத்தோடு காத்திருப்பான். ஏனெனில், அப்போதுதான் அவனுடைய அப்பா அவனைப் பூங்குடிக்கு அழைத்துச் செல்வார். பொங்கல் விழா போகி, தைப்பொங்கல், உழவர் திருநாள், காணும் பொங்கல் என்று நான்கு நாள் நடைபெறும். தெருக்கள்தோறும் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்கும். வீட்டின் வாசலில் வண்ண வண்ணக் கோலங்கள் போடப்பட்டிருக்கும். அவை, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அருண் தன் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, நண்பர்கள் என்று எல்லாரிடமும் அன்பாய்ப் பேசி மகிழ்ந்திருப்பான்.