இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.8 செந்தமிழ்ச்செல்வம்

விவேக சிந்தாமணி

ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித்(து) உண்மை பேசி

உப்பிலாக் கூழ்இட் டாலும் உண்பதே அமிர்த மாகும்

முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவா ராயின்

கப்பிய பசியி னோடு கடும்பசி ஆகுந் தானே.

(பாடல் – 4)

(முப்பழம் – மா, பலா, வாழை; அன்னம் – சோறு; கடும்பசி – மிகுந்த பசி)

பொருள் :

வீட்டிற்கு வரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று, அவரிடத்தே உண்மயையே பேசி உப்பில்லாத கஞ்சி அளித்தாலும் அஃது அமிழ்தம் உண்பது போலாகும். அவ்வாறின்றி, மனத்திலுள்ள வெறுப்பை முகத்தில் காட்டி, மூவகைப் பழத்தொடு பால்சோறு அளித்தாலும் அவை பசியை நீக்காமல், ஏற்கெனவே நிறைந்திருக்கும் பசியை மேலும் அதிகரித்துவிடும்.