இகரம்
(இரண்டாம் பருவம்)
அடர்ந்த காடு. அங்கு விலங்குகளும் பறவைகளும் வசித்தன. புறா ஒன்று, ஒரு நாள் மற்றப் பறவைகளிடம், ‘விலங்குகளுக்குத் தலைவன் இருப்பதுபோல நமக்கும் ஏன் தலைவன் இருக்கக் கூடாது?‘ என்று கேட்டது. ‘நாம் தலைவனை எப்படித் தேர்ந்தெடுப்பது?‘ என்றது குயில். அதற்குப் புறா, ‘மிக உயரமாக எந்தப் பறவை பறக்கிறதோ, அதுவே நமக்குத் தலைவன்‘ என்றது. இதனைக் கேட்ட கழுகு, ‘நான் மிக உயரத்தில் பறப்பேன். நான்தான் தலைவனாக முடியும்‘ என்றது. ‘அது எப்படி? நாம் போட்டியின் மூலமே தலைவனைத் தேர்ந்தெடுக்கலாம்‘ என்று தேன்சிட்டு கூறியது. போட்டி தொடங்கியது. வழக்கம்போல் கழுகு எல்லாப் பறவைகளையும்விட உயரமாகப் பறந்தது. ‘நான் தலைவனாகிவிட்டேன்‘ என்று கூறிக்கொண்டே அது கீழே இறங்கியது. அப்போது, அதனுடைய இறக்கையில் அமர்ந்திருந்த தேன்சிட்டு, சட்டெனச் சிறகை விரித்துக் கழுகைவிட உயரமாகப் பறக்கத் தொடங்கியது. அதனைப் பார்த்ததும் கழுகு பதறியது. அதனுடைய ஆணவம் அழிந்தது. எல்லாப் பறவைகளும் தேன்சிட்டைத் தலைவனாக ஏற்றுக் கொண்டன. ‘தலைவனாக ஆவதற்கு வலிமை மட்டும் போதாது, அறிவுக்கூர்மையும் வேண்டும்‘ என்பதைப் பறவைகள் உணர்ந்துகொண்டன.
புறா
குயில் கேட்ட வினாவுக்குப் புறா, ‘மிக உயரமாக எந்தப் பறவை பறக்கிறதோ, அதுவே நமக்குத் தலைவன்‘ என்று விடை கூறியது.
கழுகு, நான் மிக உயரத்தில் பறப்பேன் அதனால் நான்தான் தலைவனாக முடியும் என்று மற்றப் பறவைகளிடம் கூறியது.
கழுகு, தலைவனாகிவிட்டேன் எனக் கூறிக்கொண்டு கீழே இறங்கிய போது அதன் இறக்கையில் அமர்ந்திருந்த தேன்சிட்டு, சட்டெனச் சிறகை விரித்துக் கழுகைவிட உயரமாகப் பறந்து போட்டியில் வெற்றி பெற்றது.
ஒருவன் தலைவனாக ஆவதற்கு வலிமை மட்டும் போதாது, அறிவுக்கூர்மையும் வேண்டும் என்பதை பறவையின் மூலம் இந்தக் கதை உணர்த்துகிறது.
தமிழில் வழங்கும் நீதி நூல்களுள் ஒன்று ‘பழமொழி நானூறு’. இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.
1843 ஆம் ஆண்டு தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்பு நூல் ஒன்றைத், ‘திருட்டாந்த சங்கிரகம்’ என்னும் பெயரில் பெர்சிவல் என்பார் வெளியிட்டார். இந்நூலில், 1,873 பழமொழிகள் அகர வரிசையில் உள்ளன.
1897 இல் 3,644 தமிழ்ப் பழமொழிகள் கொண்ட தொகுப்பு நூலை ஹெர்மன் ஜென்சன் வெளியிட்டார். ஆங்கிலத் தலைப்புகளுடன் தொகுக்கப்பெற்ற இப்பழமொழிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளன.