இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.4 தெரிந்துகொள்வோம்

உவமைத்தொடர்கள்

தாய் தன் குழந்தையைக் கண்ணை இமை காப்பதுபோலப் பாதுகாத்தாள்.
கண்ணனுக்கு ஓட்டப்போட்டியில் முதற்பரிசு கிடைக்காததால், அவன் கப்பல் கவிழ்ந்தாற்போல வருத்தமுற்றான்.
மதியும் மொழியும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் ஒற்றுமையாக இருந்தனர்.
பரிதியும் கதிரவனும் கீரியும் பாம்பும்போல எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர்.
ஆசிரியர் நடத்துகின்ற பாடம் பசுமரத்தாணிபோல மனத்தில் பதிகிறது.

உவமைத்தொடர்களும் அவை உணர்த்தும் பொருள்களும்

வ.எண் உவமைத்தொடர் உணர்த்தும் பொருள்
1 கண்ணை இமை காப்பதுபோல பாதுகாப்பு
2 கப்பல் கவிழ்ந்தாற்போல வருத்தம்
3 நகமும் சதையும்போல ஒற்றுமை
4 பசுமரத்தாணிபோல நிலைபேறு
5 கீரியும் பாம்பும்போல பகை
6 மழைமுகம் காணாப் பயிர்போல துன்பம்
7 தாயைக் கண்ட சேயைப்போல மகிழ்ச்சி
8 குடத்திலிட்ட விளக்குப்போல சிலரால் மட்டுமே அறியப்படுதல்
9 அடியற்ற மரம்போல பேரிழப்பு
10 மலரும் மணமும்போல இணைபிரியாமை
11 சூரியனைக் கண்ட பனிபோல துன்பம் விலகுதல்
12 பசுத்தோல் போர்த்திய புலிபோல ஏமாற்றுதல்
13 காட்டுத்தீயைப்போல விரைவாகப் பரவுதல்
14 அனலில் இட்ட மெழுகுபோல துயரம்
15 குன்றின் மேலிட்ட விளக்குப்போல அனைவராலும் அறியப்படுதல்