இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.2 படிப்போம்

தன்னிகரில்லாத் தாரா

பேராசிரியர் செழியன் : வெற்றி! வெற்றி! என் 40 ஆண்டு கனவு இன்று நனவாகிவிட்டது
: இனிய தாரா! என் அரிய கண்டுபிடிப்பு நீ! இனிப் பிறர் பேசுவதை உன்னால் உணரமுடியும்.
: சுற்றுச்சூழல் தொழில்நுட்பக் கண்காட்சியில் உன்னை அறிமுகப்படுத்தப் போகிறேன். உன் பெருமையை அனைவருக்கும் உணர்த்துகிறேன்.
: அழகிய இயந்திரப் பொம்மையைப் பாருங்கள். இதன் பெயர் தாரா. இதன் சிறப்பு என்ன தெரியுமா? பிறர் பேசுவதைப் புரிந்துகொள்ளும்.
நிகழ்ச்சி அமைப்பாளர் : மகிழ்ச்சி, ஐயா! உங்களுடைய அரிய கண்டுபிடிப்பை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
பேராசிரியர் செழியன் : நானும் மிக ஆவலுடன் இருக்கிறேன். அதோ, அந்த மரத்தில் பறவைகள் உள்ளன. அவை என்ன பேசுகின்றன என்பதை என் தாரா கூறுகிறதா எனப் பார்ப்போம்.
தாரா : எல்லாரும் கேளுங்கள். அந்தப் பறவைகள் என்ன பேசிக் கொண்டன தெரியுமா? “மனிதர்கள் காடுகளின் அருமை தெரியாமல் அவற்றை அழிக்கின்றனர். நம் இருப்பிடமே இதுதான் என்பதை எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ?” என்று பேசின.
பார்வையாளர்கள் : ஆ! என்ன ஆச்சரியம்! இந்த இயந்திரப் பொம்மை பேசுகிறதே!
பேராசிரியர் செழியன் : தாரா பேசியதை அனைவரும் கேட்டீர்களா? மரங்கள் என்ன பேசுகின்றன எனத் தாரா கூறுகிறதா பார்ப்போம்.
தாரா : “மழை பெய்வதற்கு நாம் காரணமாக இருக்கிறோம். மனிதர்களுக்குத் தூய காற்றும் இனிய கனிகளும் நாம் தருகிறோம். ஆனால், இவர்கள் நம்மை அழிக்க நினைக்கிறார்களே” என்று கூறின.
நிகழ்ச்சி அமைப்பாளர் : சிறப்பு, மிகச் சிறப்பு. தங்களுடைய அரிய கண்டுபிடிப்பை நாங்கள் அனைவரும் கண்டு வியக்கிறோம். தாவரங்கள், பறவைகள் ஆகியன பேசுவதைத் தாராவால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மனிதர்கள் பேசுவது, தாராவுக்குப் புரியுமா?
தாரா : ஓ! நன்றாகப் புரியும். இதோ பாருங்கள். அந்தப் பார்வையாளர், மற்றவரிடம் என்ன கூறினார் தெரியுமா? “இந்த இயந்திரப் பொம்மை பேசியதைக் கேட்டாயா? அது, சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது. நாம் இனிமேலும் இயற்கையை அழியவிடாமல் காப்போம்” என்று கூறினார். அவர் இப்படிப் பேசினாரா, இல்லையா? என்று அவரையே கேளுங்கள்.
பார்வையாளர்கள் : தாரா கூறியது உண்மைதான். நான் தான் அப்படிக் கூறினேன். உண்மையிலேயே பேராசிரியரின் கண்டுபிடிப்பு மிகச் சிறப்பு. (அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டுகின்றனர்.)

பொருள் அறிவோம்

1. ஆச்சரியம் - வியப்பு
2. ஆவல் - விருப்பம்
3. இருப்பிடம் - வாழ்விடம்

விடை காண்போம்

தாரா

பேராசிரியர் செழியன்

இயந்திர பொம்மையை உருவாக்கியது.

“மனிதர்கள் காடுகளின் அருமை தெரியாமல் அவற்றை அழிக்கின்றனர். நம் இருப்பிடமே இதுதான் என்பதை எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ?“ என பறவைகள் பேசியதாகத் தாரா கூறியது.

இயந்திரப் பொம்மை ”சுற்றுச்சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்க இயற்கையை அழியவிடாமல் காப்போம்” என்று நமக்கு அறிவுறுத்துகிறது.