இகரம்
(இரண்டாம் பருவம்)
ஓர் ஊரில் குமரன் என்பவன், தன் பெற்றோருடன் வசித்து வந்தான். ஒரு நாள், அவனுடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. குமரன் கதவைத் திறந்தான். அங்கு மூவர் நின்று கொண்டிருந்தனர். நீங்கள் யார்? என்று குமரன் கேட்டான். ஒருவர், நான்தான் ‘செல்வம்‘ என்றார். மற்றொருவர், நான்தான் ‘வெற்றி‘ என்றார். மூன்றாவதாக இருப்பவர், நான்தான் ‘அன்பு‘ என்றார். மூவரும் ‘நாங்கள் உள்ளே வரலாமா?‘ என்று கேட்டனர். குமரனுடைய தந்தை, ‘அனைவரும் வாருங்கள்‘ என்று கூறினார். ‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமாட்டோம். யாராவது ஒருவர் மட்டுமே வரமுடியும். உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’என்று மூவரும் கூறினர்.
குமரனின் தந்தை ‘வெற்றியை அழைத்தால் வெற்றியடையலாம்‘ என்றார். குமரனோ, ‘செல்வத்தை அழைத்தால் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம்’ என்றான். ஆனால், குமரனின் தாய் ‘அன்பை அழைக்கலாம், அன்புதான் அனைவருக்கும் தேவை. அன்பிருந்தால் அங்கு எல்லாம் இருக்கும்’ என்றாள். தந்தையும் மகனும் ஏற்றுக்கொண்டனர். பின்னர், மூவரும், ‘அன்பு‘ நீங்கள் உள்ளே வாருங்கள்‘ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அன்பு உள்ளே வர, தொடர்ந்து வெற்றியும், செல்வமும் புன்முறுவலுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
1. | பெற்றோர் | - | தாய், தந்தை | |
2. | ஏற்றுக்கொண்டனர் | - | ஒப்புக்கொண்டனர் | |
3. | புன்முறுவல் | - | மென்மையாகச் சிரித்தல் |
குமரன் வீட்டிற்கு வெற்றி, செல்வம், அன்பு ஆகிய மூன்று பேரும் வந்தார்கள்.
குமரனின் தந்தை வெற்றிக்கு முதன்மை அளித்தார்,
தந்தை கூறியதைக் கேட்டு, குமரன் செல்வத்தை அழைத்தால் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம் எனக் கூறினான்.
மூவருள் மிகவும் இன்றியமையாதவர் எனக் கூறப்பட்டவர் அன்பு.
அன்புதான் அனைவருக்கும் தேவை. அன்பிருந்தால் அங்கு எல்லாம் இருக்கும் என்றாள். எனவே குமரனின் தாய் அன்பை அழைத்தாள்.