இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.2 படிப்போம்

கைலாஷ் சத்தியார்த்தி

பொழுது புலர்ந்தது. இதிலென்ன புதுமை? வழக்கம்போலத்தானே விடிந்திருக்கும். ஆனால், அன்றைய பொழுது, பள்ளி செல்லாக் குழந்தைகளுக்குப் புது விடியலைத் தந்தது. புது விடியலா? அப்படி என்ன அந்தக் குழந்தைகளுக்குத் துன்பம்? யார் அதனை நீக்கினார்? அவரைப்பற்றி அறிந்துகொள்வோமா!

பேருந்து நிலையம். அலுவலகம் செல்வோர் பரபரப்பாக இங்கும்அங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர். ‘ரைட்‘, ‘ரைட்‘ போகலாம் என்று நடத்துநர் ஊதலை ஊத, ஓட்டுநர் வண்டி ஓட்டத் தொடங்கினார். அப்போது, ஒரு சிறுவன், ‘சார், சார், பேப்பர் வாங்கிக்கங்க‘ சார். என்று கெஞ்சிக் கொண்டே ஓடி வந்தான். ஜன்னலோர இருக்கையில் இருந்தவர், ஏதோ சிந்தனையில் இருந்தார். அச்சிறுவனின் குரல், அவருடைய சிந்தனையைக் கலைத்தது. இந்தச் சிறுவனுக்கு என்ன வயதிருக்கும்? இந்த வயதில் பள்ளி செல்லாமல், நாளிதழ் விற்கிறானே?‘ என்று அவர் மனம் எண்ணத் தொடங்கியது. பேருந்தும் வேகம் எடுத்தது. சிறுவனின் குரல் மெல்ல மெல்ல காற்றில் கரைந்தது.

அச்சிறுவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவர், மனம் வருந்தினார். இவனைப்போல் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று உறுதி கொண்டார். தம்மைப்போலவே எண்ணம் கொண்ட நண்பர்களுடன் இணைந்தார். பள்ளி செல்லாக் குழந்தைகளுக்குத் தேவையான பாடநூல்களை அளித்துப் பள்ளியில் சேர்த்தார். அவர்களின் படிப்புக்காகப் பொருளுதவி செய்தார்.

ஓராண்டு, ஈராண்டு அல்ல, முப்பதாண்டுக் காலமாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பதற்கு உதவுகிறார். இவரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, ‘இராபர்ட் கென்னடி மனித உரிமைகள் விருது‘ அளிக்கப்பட்டது. இவர், 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மலாலா என்ற சிறுமியுடன் பகிர்ந்து கொண்டார். இவர்தாம் கைலாஷ் சத்தியார்த்தி. இந்தியாவிலுள்ள மத்தியபிரதேசத்தில் பிறந்தவர்.

நோபல் பரிசு பெற்ற இவர் என்ன கூறினார் தெரியுமா? “குழந்தைகளின் நலனுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். குழந்தைகளே நாட்டின் எதிர்கால வளங்கள். அவர்களைக் காப்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும்“ என்றார். அவரது கூற்று, நூற்றுக்கு நூறு உண்மை. நாமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம்.

பொருள் அறிவோம்

1. புலர்ந்தது - விடிந்தது
2. புதுமை - வியப்பு
3. சேவை - தொண்டு
4. போராடுவேன் - பாடுபடுவேன்
5. நோக்கம் - குறிக்கோள்

விடை காண்போம்

பேருந்து நிலையத்தில் சிறுவன் நாளிதழ் விற்றுக் கொண்டிருந்தான்.

இந்த வயதில் பள்ளிக்குச் செல்லாமல் நாளிதழ் விற்கிறான் என்று சிறுவனைப் பற்றி பேருந்தில் இருந்தவர் நினைத்து கொண்டிருந்தார்.

பேருந்து நிலையத்தில் நாளிதழ் விற்கும் சிறுவனைப் பார்த்தபோது சிறுவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கைலாஷ் சத்தியார்த்திக்கு தோன்றியது.

கைலாஷ் சத்தியார்த்தி தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பள்ளிக்குச் செல்லாத சிறுவர்களைப் பள்ளியில் சேர்த்து தேவையான பாடநூல்களையும் பொருளுதவியும் அளித்து உதவினார்.

கைலாஷ் சத்தியார்த்தி, இராபர்ட் கென்னடி மனித உரிமைகள் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.