இகரம்
(இரண்டாம் பருவம்)
(ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார். மாணவர்கள் எழுந்து வணக்கம் செலுத்த, ஆசிரியரும் வணக்கம் செலுத்துகிறார்.)
ஆசிரியர் | : | அன்புக் குழந்தைகளே! இன்று நாம் மிகவும் தேவையான ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளப்போகிறோம். |
கவின் | : | நாங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளோம். |
ஆசிரியர் | : | சொல்கிறேன். அதற்கு முன்னால் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன். பதில் சொல்கிறீர்களா? |
வனிதா | : | ஓ! சொல்வோமே. |
ஆசிரியர் | : | நம் கண்களில் எதிர்பாராமல் தூசி விழுந்தால் என்ன செய்யவேண்டும்? |
நவீன் | : | நான் சொல்கிறேன். கண்ணைத் தேய்க்கவேண்டும். அப்போதுதான் தூசி வெளியே வரும். |
ஆசிரியர் | : | தவறு, நவீன். அப்படிச் செய்யக்கூடாது. ஒரு கையில் தண்ணீரை அள்ளித் தூசி விழுந்த கண்களை கழுவி தூய்மை செய்யவேண்டும். சரி. நம் காதுகளையும் மூக்கையும் எப்படித் தூய்மை செய்யவேண்டும்? |
விஷால் | : | கூர்மையான பொருள்களைக்கொண்டு தூய்மை செய்யக்கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். |
ஆசிரியர் | : | சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அதுசரி, நீங்கள் ஒருநாளைக்கு எத்தனை முறை பல் துலக்குவீர்கள்? |
கண்ணன் | : | நான் இரண்டுமுறை பல் துலக்குவேன். |
மாதவி | : | நான் உணவு சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் பல் துலக்குவேன். |
ஆசிரியர் | : | நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள். ஆனால், சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பீர்களா? |
மணி | : | எங்கள் அப்பா ஒவ்வொரு முறையும் செய்யச் சொல்வார். நானும் வாய் கொப்பளிப்பேன். |
ஆசிரியர் | : | நல்லது. பள்ளி முடிந்ததும் எத்தனை பேர் விளையாடச் செல்வீர்கள்? ஓ, எல்லாருமே விளையாடுவீர்களா? விளையாடி முடித்தபின் என்ன செய்வீர்கள்? |
நவீன் | : | நான் வீட்டுப்பாடம் செய்வேன். |
வேலு | : | என் அம்மா சிற்றுண்டி தருவார். நான் சாப்பிடுவேன். |
ஆசிரியர் | : | சரி, சரி. ஆனால் விளையாடி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் எத்தனை பேர் கைகால்களைச் சுத்தம் செய்வீர்கள்? அட, யாரும் கை தூக்கவில்லையே? |
ஆனந்தி | : | ஏன் சுத்தம் செய்ய வேண்டும் ? |
ஆசிரியர் | : | நாம் விளையாடும்போது அழுக்குகள் நம் கைகளிலும் கால்களிலும் படிகின்றன. நகங்களில் அழுக்கு சேர்கிறது. அதே அழுக்குக் கையுடன் உணவு சாப்பிட்டால், நம் வயிற்றுக்குத்தான் கெடுதல். வேறென்ன? நம்மைத்தேடி அழையா விருந்தாளியாக நோய் வரும். |
மணி | : | இனிமேல் கைகால்களைக் கழுவிவிட்டு மற்ற வேலைகளைச் செய்கிறோம். |
ஆசிரியர் | : | இதுவரை உடல் தூய்மைபற்றிப் பேசினீர்கள். அதுபோல, நம் உள்ளத்தையும் தூய்மையாக வைக்கவேண்டும் அல்லவா? |
வனிதா | : | அது எப்படி என்று சொல்லுங்கள். |
ஆசிரியர் | : | பொறாமை, கோபம், புறம் பேசுதல் போன்ற தீய எண்ணங்களை அகற்ற வேண்டும். அன்பு, அடக்கம், வாய்மை பேசுதல், பெரியோரை மதித்தல் ஆகிய நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். புரிந்து கொண்டீர்களா? |
மாணவர்கள் | : | நன்றாகப் புரிந்துகொண்டோம். இனி, உடலை மட்டுமின்றி, உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். |
ஆசிரியர் | : | “உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்“ எனக் கவிமணி தேசிக விநாயகனார் பாடியதை மறக்காமல் நினைவிற் கொள்வோம். |
1. | தூசி | - | அழுக்கு | |
2. | சுத்தம் | - | தூய்மை | |
3. | பொறாமை | - | பிறரிடம் உள்ளது தன்னிடம் இல்லை என்பதை பொறுத்துக் கொள்ளாமை | |
4. | கோபம் | - | சினம் | |
5. | புறம் பேசுதல் | - | ஒருவரைப் பற்றி இல்லாததைச் சொல்லுதல் |
ஆசிரியர், மாணவர்களுடன் உடல் தூய்மையைப் பற்றிக் கலந்துரையாடினார்.
கண்களில் தூசி விழுந்தால், ஒரு கையில் தண்ணீரை அள்ளித் தூசி விழுந்த கண்களைக் கழுவி தூய்மை செய்ய வேண்டும்.
விளையாடும்போது அழுக்குகள் கைகளிலும் கால்களிலும் படிகின்றன. நகங்களில் அழுக்கு சேர்கிறது. அதே அழுக்குக் கையுடன் உணவு சாப்பிடும்போது நோய் உண்டாகிறது. எனவே விளையாடிவிட்டு வந்தபின் கைகாலைத் தூய்மை செய்ய வேண்டும்.
அன்பு, அடக்கம், வாய்மை பேசுதல், பெரியோரை மதித்தல் ஆகிய நல்ல பழக்கங்கள் உடல்நலத்திற்குத் தேவையான பண்புகள் ஆகும்.
பொறாமை, கோபம், புறம் பேசுதல் போன்றன உளநலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பண்புகள் ஆகும்.