இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.2 படிப்போம்

கல்விக்கண் திறந்த காமராசர்

பள்ளி ஆண்டுவிழா. ஆசிரியர்களும் மாணவர்களும் விழாத்தலைவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது குறித்த நேரத்தில் வந்தார் தலைவர். கொடி ஏற்றியபின், மாணவர்களிடம் உரையாடினார். “படிப்பறிவு இருந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். எனவேதான், நாடு முழுவதும் ஐம்பதாயிரம் பள்ளிகளைத் திறக்க முடிவு பண்ணியிருக்கோம். குழந்தைங்க நீங்க, எவ்வளவு தூரம் நடந்து போவீங்க? நீண்ட தூரம் நடந்தா களைச்சுப் போயிடுவீங்க. அப்புறம் எப்படிப் படிக்க முடியும்? அதனால ஒரு மைல் தூரத்தில ஆரம்பப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில உயர்நிலைப்பள்ளி இருக்கணும்னு திட்டம்” என்றார். அவ்வாறு மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டிய அந்தத் தலைவரின் பெயர் காமராசர். அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவரைக் ‘கர்மவீரர் காமராசர்’ என அனைவரும் பாராட்டினர்.

காமராசர் கல்வியின் தேவையை நன்கு அறிந்திருந்தார். அதனால் இலவச மதிய உணவு, இலவசக் கல்வி, சீருடை எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மூடிக்கிடந்த பள்ளிகளைத் திறந்தார். புதிய பள்ளிகளை ஏற்படுத்தினார். அவருடைய அருஞ்செயலைக் கண்டு, மக்கள் வியந்தனர். அவரைக் ‘கல்விக்கண் திறந்த காமராசர்’ என அன்போடு அழைத்து மகிழ்ந்தனர்.

மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கும் உதவினார். பொறியியல், பொது மருத்துவம், கால்நடை மருத்துவம் சார்ந்து கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்கினார். மாணவர்கள் தம் அறிவை விரிவுசெய்யும் வகையில் பல கிளைநூலகங்களைத் தமிழ்நாட்டில் அமைத்தார். அவருடைய செயல்கள் கல்விப்புரட்சிக்குச் சிறந்த அடித்தளமாக விளங்கின.

காமராசர் தன்னலம் கருதாது பிறர்நலம் கருதினார். முதலமைச்சராய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார். கதராடையை விரும்பி அணிந்தார். தமக்கெனச் சொந்தவீடு இல்லாமல், வாடகை வீட்டிலேயே குடியிருந்தார்.

தமிழ்நாடு அரசு, காமராசரைப் பெருமைப்படுத்தும் வகையில், மதுரையிலுள்ள பல்கலைக்கழகத்திற்குக் ‘காமராசர் பல்கலைக்கழகம்’ எனப் பெயர் சூட்டியுள்ளது. 1976ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டுள்ளது. அவருடைய பிறந்தநாளான ஜூலை 15ஆம் நாள், ‘கல்வி வளர்ச்சி நாள்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.

பொருள் அறிவோம்

1. அக்கறை - கவனம்
2. களைப்பு - சோர்வு
3. கர்மவீரர் - செயல்வீரர்
4. மதிய உணவு - நண்பகல் உணவு
5. இலவசம் - விலையில்லாதது

விடை காண்போம்

காமராசர் இலவச மதிய உணவு, இலவசக் கல்வி, சீருடை எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மூடிக்கிடந்த பள்ளிகளைத் திறந்தார். புதிய பள்ளிகளை ஏற்படுத்தினார். அவருடைய அருஞ்செயலைக் கண்டு மக்கள் ‘கல்விக்கண் திறந்த காமராசர்‘ என அன்போடு அழைத்து மகிழ்ந்தனர்.

காமராசர், மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்குக் பொறியியல், பொது மருத்துவம், கால்நடை மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்கினார்.

காமராசர் எளிமையானவர். தன்னலம் கருதாது பிறர்நலம் கருதியவர்.

காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் உள்ளது.

இந்திய அரசு காமராசருக்கு மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ வழங்கி பெருமைப்படுத்தியது.