இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.6 கேட்டல் கருத்தறிதல்

உழைப்பே உயர்வு

வியாபாரி ஒருவர் தம் கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் சென்றார். ஓடையைக் கடந்துதான் சந்தைக்குச் செல்லவேண்டும். ஒருநாள் ஓடையைக் கடக்கும்போது கழுதையின் மேல் இருந்த உப்பு மூட்டைகள் ஓடையில் விழுந்தன. அதனால் உப்பு கரைந்து எடை குறைந்தது. இதனை அறிந்து கொண்ட கழுதை, நாள்தோறும் ஓடைநீரில் மூட்டைகளை அசைத்துத் தள்ளியது, கழுதையின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டார் வியாபாரி. அதற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார். வழக்கம்போல் சந்தைக்குச் செல்லும்போது கழுதையின் முதுகில் உப்புமூட்டைகளுக்குப் பதிலாகப் பஞ்சுமூட்டைகளை வைத்தார். கழுதை மூட்டைகளை அசைத்து ஓடையில் தள்ளியது. ஓடையில் நனைந்ததால் பஞ்சுமூட்டைகள் எடை கூடின. வியாபாரியை ஏமாற்ற நினைத்துத் தன்னைத்தானே கழுதை ஏமாற்றிக்கொண்டது. எனவே, உண்மையான உழைப்பே உயர்வு தரும் எனக் கழுதை புரிந்துகொண்டது.

வினாக்கள்

வியாபாரி உப்பு விற்கும் தொழில் செய்தார்.

சந்தைக்குச் செல்ல ஓடையைக் கடந்து செல்லவேண்டும்.

உப்பு மூட்டைகள் ஓடையில் விழுந்ததால் எடை குறைந்தது.

கழுதை

உண்மையான உழைப்பு உயர்வு தரும்.

சுவைச்செய்தி

பனிமலைப்புலி

‘பனிமலைப் புலி‘ என்னும் சிறப்புப்பெயருக்குச் சொந்தக்காரர் டென்சிங் நோர்கே. அவர், 29,028 அடி உயரத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர். சிறுவயதில், அவருடைய தாயார், எவரெஸ்ட் சிகரத்தைக்காட்டி, பறவையும் பறக்க முடியாத உயரமான மலை என்று இமயமலையைக் கூறுவார். அந்த மலையில்தான் எவரெஸ்ட் சிகரம் இருந்தது. அப்போதே எப்படியாவது, அந்த சிகரத்தின் மீது ஏறிவிடவேண்டும் என்ற ஆசை டென்சிங்கிற்குத் தோன்றியது. அதனை மெய்ப்பித்தும் காட்டினார். இந்தியக்கொடியை அச்சிகரத்தின் மீது நாட்டினார். ஊக்கமும் மனஉறுதியும் இருந்தால் அனைவரும் சாதிக்கலாம்.
டென்சிங் நோர்கே