இகரம்
(இரண்டாம் பருவம்)
ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும். அந்தச் சுவை அறுசுவை என உங்களுக்குத் தெரியும். ஆனால், அறுசுவையில் சேராத ஒரு சுவை உண்டு. அதுதான் நகைச்சுவை. அச்சுவை, நமக்கு மனமகிழ்ச்சியைத் தரும். சிலர் நகைச்சுவையாகப் பேசுவர். அவரது பேச்சு, நடந்துகொள்ளும் முறை முதலியவை நம்மைச் சிரிக்க வைக்கும். அதேபோல், நாம் காணும் சில நிகழ்வுகள், நாடகங்கள், திரைப்படங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். சில நூல்களில் இடம்பெற்றிருக்கும் உரையாடல்கள், துணுக்குகள் போன்றவைகூட நம்மை வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும். இப்படிப் படித்தவுடன், பார்த்தவுடன், கேட்டவுடன் நமக்குச் சிரிப்பை வரவழைத்தால், அதனை நகைச்சுவை என்கிறோம். நகைச்சுவையாக நடித்தே ஒருவர் உலகப் புகழ் பெற்றார். அவர்தாம், ‘நகைச்சுவை மன்னன்‘ என அழைக்கப்படும் சார்லி சாப்ளின். அவர் சிறுவயதிலேயே நாடகம் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின், திரைப்படத்திலும் நடித்தார். அவரது காலத்தில் பேசும் படங்களோ வண்ணப் படங்களோ இல்லை. அப்படி இருந்தபோதும், அவரது சைகை மொழி, நடை, உடை, பாவனை என அனைத்தும் எல்லாருக்கும் சிரிப்பைத் தந்தது. |
![]() |
இலண்டன் நகரத்தில் 1889 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் பிறந்தார். இவர், புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படக் கலைஞர். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், இசை அமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டு விளங்கினார். இருமுறை ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இங்கிலாந்து அரசு, இவரைப் பெருமைப்படுத்தும் வகையில், அஞ்சல் அட்டை வெளியிட்டுள்ளது. அதில் இவரது உருவம் அச்சிடப்பட்டிருக்கும்.
சார்லி சாப்ளின், 1977 ஆம் ஆண்டில் மறைந்தாலும் இன்றும் அவரது படங்களை அனைவரும் விரும்பிப் பார்க்கின்றனர். அப்படங்கள், நகைச்சுவையுடன் நம் சிந்தனையையும் தூண்டுகின்றன. நீங்களும் பாருங்கள். வாய்விட்டு, மனம்விட்டுச் சிரியுங்கள். உங்களுக்குள் நகைச்சுவை உணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
1. | அறுசுவை | - | ஆறு சுவை (இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு) | |
2. | நகைச்சுவை | - | மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓர் உணர்வு | |
3. | சைகைமொழி | - | உடல் அசைவுகளால் வெளிப்படுத்துதல் | |
4. | பாவனை | - | முகத்தில் பலவகை உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் |
சுவை என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அறுசுவை
நகைச்சுவை
நகைச்சுவை மன்னன்
சார்லி சாப்ளின் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படக் கலைஞர். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், இசை அமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டு விளங்கினார்.
இங்கிலாந்து அரசு, சார்லி சாப்ளினின் உருவம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டையை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.