உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.2 படிப்போம்

செம்மொழித்தமிழ்

கவியரசி ஏழாம் வகுப்பில் படிக்கிறாள். அன்று, வகுப்பாசிரியர் ‘செம்மொழித்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுமாறு கூறினார். அனைவரும் ஆர்வத்துடன் எழுதினர்.

கவியரசி எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆசிரியர் அவள் எழுதிய கட்டுரையைப் படிக்குமாறு கூறினார். கவியரசியும் மகிழ்ச்சியுடன் படிக்கத் தொடங்கினாள். மொழி நம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த உதவும் ஒரு கருவி. உலகில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் சில மொழிகள் தொன்மை, தனித்தன்மை, உயர்சிந்தனை ஆகிய தகுதிகளைப் பெற்று இருக்கின்றன. அத்தகைய மொழிகள் செம்மொழிகள். தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், கிரேக்கம், எபிரேயம், பெர்சியன் மற்றும் அரபிக் ஆகிய எட்டும் உலகச் செம்மொழிகள். இந்தியமொழிகளில் தமிழைத் தொடர்ந்து சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கும் இந்திய அரசு செம்மொழித் தகுதி வழங்கியுள்ளது.

தமிழ் மிகவும் தொன்மையான மொழி. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் எனத் தமிழ்மொழி முத்தமிழாய் விளங்குகின்றது. தமிழில் இலக்கிய, இலக்கணங்கள் மிகுதியாக உள்ளன. தமிழின் தொன்மையை முதன்முதலில் உலகமறியச் செய்தவர் கால்டுவெல் ஆவார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் ஆகிய இருவரும் தனித்தமிழ் வளர்த்தனர். தேவநேயப்பாவாணர் செம்மொழிக்குரிய பண்புகளைக் கூறியுள்ளார்.

தமிழால் ஈர்க்கப்பட்ட அயல்நாட்டு அறிஞர்களும் தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர். அவர்களுள் ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்று உலகம் முழுதும் தமிழ்மொழி கொண்டாடப்படுகின்றது. காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கன்னித்தமிழாய் விளங்குகின்றது; கணித்தமிழாய் ஒளிர்கின்றது. தமிழின் சிறப்பை உணர்ந்து நாமும் தமிழைக் கற்போம். அதன் இலக்கியங்களைப் படித்துச் சுவைத்து மகிழ்வோம் எனக் கவியரசி, தான் எழுதிய கட்டுரையைப் படித்து முடித்தாள். மாணவர்கள் அனைவரும் கைகளைத் தட்டித் தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பொருள் அறிவோம்

1. தொன்மை - பழைமை
2. முத்தமிழ் - மூன்று தமிழ் (இயல், இசை, நாடகம்)
3. செம்மொழி - செம்மையான மொழி

விடை காண்போம்

கவியரசியின் வகுப்பாசிரியர் ‘செம்மொழித்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுமாறு கூறினார்.

மொழி தம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த உதவுகிறது.

உலகச் செம்மொழிகளாகக் கூறப்படும் மொழிகள் மொத்தம் எட்டு. அவை தமிழ், சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், கிரேக்கம், எபிரேயம், பெர்சியன் மற்றும் அரபிக் ஆகும்.

வதமிழின் தொன்மையை முதன்முதலில் உலகமறியச் செய்தவர் கால்டுவெல் ஆவார்.

செம்மொழிக்குரிய பண்புகளைக் கூறியவர் தேவநேயப்பாவாணர்.