உகரம்
(முதல் பருவம்)
| அமைச்சர் | : | வணங்குகிறேன் அரசே! |
| அரசர் | : | வணக்கம் அமைச்சரே, நம் மக்களிடம் புதிதாக வரி வசூலிக்க வேண்டுமென்று கூறினேன் அல்லவா. அது எந்த நிலையில் உள்ளது? |
| அமைச்சர் | : | (அமைச்சர் பதில் ஏதும் கூறாமல் இருக்கிறார்.) |
| அரசர் | : | அமைச்சரே, என்ன பதிலையே காணோம்? வரி வசூலித்தீரா இல்லையா? |
| அமைச்சர் | : | அரசே, சற்றுப் பொறுங்கள். சென்ற மாதம்தான் புதிதாக வரி சுமத்தினீர்கள். இப்போது உடனடியாக மற்றொரு வரி என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? |
| அரசர் | : | அமைச்சரே, நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டியது உம் பொறுப்பு எதிர்க்கேள்வி கேட்காதீர். |
| அமைச்சர் | : | (அமைச்சர் மெதுவாகத் தலையசைக்கிறார்.) |
| அரசர் | : | அமைச்சரே, வாருங்கள். நகர்வலம் சென்று வருவோம். |
| அமைச்சர் | : | இதோ வருகிறேன், அரசே. |
(இருவரும் குதிரை மீதேறிச் செல்கின்றனர். நகரத்தைக் கடந்து, காட்டுப் பகுதி வழியே செல்லும்போது சற்றத்தொலைவில் ஒரு யானை இருப்பதைப் பார்க்கின்றனர்.)
| அரசர் | : | அமைச்சரே, அதோ பாருங்கள். காட்டு யானை. |
| அமைச்சர் | : | ஆம், அரசே. நன்கு வளர்ந்த யானை. ஆனால், அஃது என்ன செய்கிறது பாருங்கள். |
| அரசர் | : | என்ன செய்கிறது? அந்நிலத்தில் விளைந்துள்ள உணவுப்பயிரைத் தானே மேய்கிறது. |
| அமைச்சர் | : | சரியாகச் சொன்னீர்கள், அரசே. ஆனால், நன்கு உற்றுக் கவனியுங்கள். அதன் வாயில் போகும் உணவைவிட, அதன் காலில் மிதிபட்டு அழிவது அதிகமாக இருக்கிறதே! |
| அரசர் | : | அட, ஆமாம். அந்த முரட்டு யானைக்கு யார் எடுத்துச் சொல்வது? |
(இருவரும் அரண்மனைக்குத் திரும்புகின்றனர். வழியில், அரசரின் பட்டத்து யானையைக் காண்கின்றனர்.)
| அமைச்சர் | : | அரசே, அதோ பாருங்கள். நம் பட்டத்து யானை எத்தனை அழகு! அதன் தந்தங்களைப் பாருங்கள். பிறை நிலை போல உள்ளனவே! அஃது, உணவுப் பொருளைக் கொஞ்சம்கூட வீணாக்காமல் உண்கிற அழகைக் காணுங்கள். |
| அரசர் | : | அட, ஆமாம். யானைப்பாகன் கவளம் கவளமாக உணவைக் கொடுக்க, அது சிந்தாமல் சிதறாமல் உண்கிறதே! |
| அமைச்சர் | : | ஆம். அரசே. நம் பட்டத்து யானை இப்படி உணவு உண்டால், சிறுநிலத்தில் விளைந்த நெல்லும் அதற்குப் பலநாள் உணவாகும். |
| அரசர் | : | உண்மைதான் அமைச்சரே. |
(இதைக் கூறிய அரசர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் நினைத்ததை அமைச்சர் புரிந்து கொண்டார்.)
| அமைச்சர் | : | ‘அரசே! நாம் கண்ட நிகழ்வு. எனக்கு ஒரு பாடலை நினைவூட்டுகிறது. |
| அரசர் | : | ஆமாம் அமைச்சரே! அந்தப் பாடல் புறநானூற்றில் உள்ளது. மக்களை வருத்தி, அவர்களிடமிருந்து அதிகமாக வரி வசூலித்தால், அவர்களும் துன்பப்படுவர். நாட்டிலும் வளம் குறையும். அவ்வாறின்றி, மக்களின் நிலையறிந்து முறையாக வரி வசூலித்தால், அவர்களும் மகிழ்ச்சி கொள்வர். நாடும் நலம்பெறும் என்பதை நானும் அறிந்துள்ளேன். இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. இனி, மக்களைத் துன்பப்படுத்தாமல் சிறந்த முறையில் ஆட்சி செய்வேன். |
| அமைச்சர் | : | நல்லது, அரசே. வாருங்கள், அரண்மனைக்குச் செல்வோம். |
| 1. | அண்டை நாடு | - | அருகிலுள்ள நாடு | ||
| 2. | வரி வசூலித்தல் | - | வரி ஈட்டுதல் | ||
| 3. | கட்டளை | - | ஆணை | ||
| 4. | தொலைவில் | - | தூரத்தில் | ||
| 5. | கவளம் | - | யானைக்குக் கொடுக்கப்படும் உணவுருண்டை |
காட்டு யானை நிலத்தில் விளைந்துள்ள உணவுப்பயிரைத் தானே மேய்கிறது. மேலும் அதன் வாயில் போகும் உணவைவிட, அதன் காலில் மிதிபட்டு அழிவது அதிகமாக இருக்கிறது.
அரசின் பட்டத்து யானை அழகானது. அதன் தந்தங்கள் பிறை நிலா போன்று உள்ளது.
மக்களை வருத்தி, அவர்களிடமிருந்து அதிகமாக வரி வசூலித்தால், அவர்களும் துன்பப்படுவர். நாட்டிலும் வளம் குறையும். அவ்வாறின்றி, மக்களின் நிலையறிந்து முறையாக வரி வசூலித்தால், அவர்களும் மகிழ்ச்சி கொள்வர். நாடும் நலம் பெறும். எனவே மக்களைத் துன்பப்படுத்தாமல் சிறந்த முறையில் ஆட்சி செய்யவேண்டும் என்று அரசனுக்கு அறிவுறுத்தப்பட்டது.