உகரம்
(முதல் பருவம்)
உணவு, உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதமாகும். தமிழர்களின் நிலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அவர்களின் உணவுகள் வேறுபடுகின்றன. பெரும்பாலும் சோறும் காய்கறிகளும் கறியும் விரும்பி உண்டனர். இவை மட்டுமின்றி, சிறு தானியங்களையும் உணவில் மிகுதியாகப் பயன்படுத்தினர்.

|
தமிழர்கள், இயற்கை உணவு முறையினைப் பின்பற்றினர். இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். அதனால், உடல் நலத்தையும் உளநலத்தையும் போற்றிப் பாதுகாத்தனர். அவர்களுக்கு உணவே மருந்தாக அமைந்தது. பழங்காலம்முதல் உணவை மருத்துவ முறையிலே சமைக்கின்றனர். சமையலில் இஞ்சி, மஞ்சள், மிளகு, சீரகம், கொத்துமல்லி, பூண்டு முதலியவற்றிற்குக் குறிப்பிடத்தக்க முக்கியப் பங்கு உண்டு. இவை ஒவ்வொன்றும் மருத்துவக் குணம் கொண்டவை. தமிழர்கள் தம் உணவில் அறுசுவைக்கும் முதன்மை அளித்தனர். |
நம் வீடு தேடி வருகின்ற விருந்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை இன்முகத்தோடு வரவேற்று, உணவளித்து மகிழ்வர். இதுவே தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாகும். அனிச்ச மலர் மிகவும் மென்மையானது. அதனை மோந்து பார்த்தாலே வாடிவிடும். அதுபோல, தம்மை வரவேற்பவரின் முகம் சிறிது மலர்ச்சியின்றி இருந்தாலும், விருந்தினர் மனம் வருந்தும் என்பதைத் திருவள்ளுவர், “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்று கூறியுள்ளார். விருந்தோம்பல், தமிழரின் தலைசிறந்த பண்பாகும். எனவேதான், ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்றார் ஔவையார்.
தமிழர்கள், வறுமை நிலையிலும் விருந்தோம்பல் பண்பினைக் கடைப்பிடித்தனர். இதனை இலக்கியப் பாடல்கள்வழி அறியலாம். பெரியபுராணத்தில் ஒரு நிகழ்வு. இளையான்குடி மாறனாரின் வீட்டிற்கு இரவு நேரத்தில் விருந்தினர் ஒருவர் வந்தார். மாறனார் அவரை வரவேற்று உணவளிக்க நினைத்தார். ஆனால், வீட்டில் உணவுப் பொருள்கள் ஏதும் இல்லை. மாறனாரும் அவரது மனைவியும் என்ன செய்வது என்று சிந்தித்தனர். மாறனார் உடனே சென்று, காலையில் தான் விதைத்த நெல் மணிகளை ஒரு கூடையில் அள்ளி வந்தார். அதற்குள் அவர் மனைவி, வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரைகளைப் பறித்துச் சமைத்தார். பின்பு, மாறனார் கொண்டு வந்த நெல்மணிகளைச் சுத்தம் செய்து அரிசியாக்கிச் சமைத்தார். இவ்வாறு சமைத்த உணவினை, விருந்தினருக்கு அளித்து மகிழ்ந்தனர் என்னும் கருத்தமைந்த பாடல்கள் பெரியபுராணத்தில் உள்ளன.
தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவு அளிப்பது, தமிழரின் மரபாகும். தமிழர்கள், வலக்கையால் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்கள். அதனால், வாழை இலையின் விரிந்த பகுதியை வலது பக்கம் வருமாறு அமைத்து உண்பர். தமிழர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்கள். அமெரிக்காவிலும் வேறுசில நாடுகளிலும் ‘வாழையிலை விருந்து விழா’வைத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். |
|
இக்காலத்தில் உணவிலும் உண்ணும் முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பதப்படுத்திய ஆயத்த உணவுகளும், விரைவு உணவுகளும் புழக்கத்தில் உள்ளன. இருப்பினும் தமிழர்களின் அடிப்படையான உணவுப் பழக்க வழக்கங்கள் பெரிதும் மாற்றமின்றித் தொடர்கின்றன.
நொறுங்கத் தின்றால் நூறு வயது
தானத்தில் சிறந்தது அன்ன தானம்
சீரகம் இல்லா உணவு சிறக்காது
| 1. | அறுசுவை | - | ஆறு சுவை (இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு) | ||
| 2. | தலைசிறந்த | - | முதன்மையான | ||
| 3. | தலைவாழை | - | வாழையிலையின் நுனிப் பகுதி | ||
| 4. | சம்மணமிட்டு | - | கால்களை மடித்து உட்காருதல் | ||
| 5. | விருந்தினர் | - | புதிதாய் வருபவர் | ||
| 6. | புழக்கத்தில் | - | நடைமுறையில் |
மனிதர்களுக்கு உணவு, உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதமாக விளங்குகிறது.
தமிழர்கள், இயற்கை உணவு முறையினைப் பின்பற்றினர். இயற்கையோடு இயைந்த பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். அதனால், உடல் நலத்தையும் உளநலத்தையும் போற்றிப் பாதுகாத்தனர். அவர்களுக்கு உணவே மருந்தாக அமைந்தது. பழங்காலம் முதல் உணவை மருத்துவ முறையிலே சமைக்கின்றனர். சமையலில் இஞ்சி, மஞ்சள், மிளகு, சீரகம், கொத்துமல்லி, பூண்டு முதலியவற்றிற்குக் குறிப்பிடத்தக்க முக்கியப் பங்கு உண்டு. இவை ஒவ்வொன்றும் மருத்துவக் குணம் கொண்டவை. தமிழர்கள் தம் உணவில் அறுசுவைக்கும் முதன்மை அளித்தனர்.
தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவு அளிப்பது, தமிழரின் மரபாகும். தமிழர்கள், வலக்கையால் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்கள். அதனால், வாழை இலையின் விரிந்த பகுதியை வலப்பக்கம் வருமாறு அமைத்து உண்பர். தமிழர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்கள். அமெரிக்காவிலும் வேறுசில நாடுகளிலும் கூட வாழையிலை விருந்து விழாவைத் தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.