உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.7 செந்தமிழ்ச்செல்வம்

குடும்ப விளக்கு

வாழை இலையின் அடி உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்துக் கறிவகைகள் – சூழ வைத்துத்
தண்ணீர் வெந்நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோறிடுமுன் மிக இனிக்கும் – பண்ணியமும்
முக்கனியும் தேனில் நறுநெய்யில் மூழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின் பால் சோறிட்டுத் – தக்கபடி
கேட்டும் குறிப்பறிந்தும் கெஞ்சியும் மிஞ்சும் அன்பால்
ஊட்டுதல் வேண்டும் தாய்போல் ஒண்டொடியே! – கேட்டுப்போ;

(பாடல் அடி, 205 – 212)

- பாரதிதாசன்

(தண்ணீர் – குளிர்ந்தநீர்; முக்கனி – மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்; பண்ணியம் – தின்பண்டம்; ஒண்டொடி – ஒளி பொருந்திய வளையலை அணிந்த பெண்)

பொருள்

ஒளி பொருந்திய வளையலை அணிந்த பெண்ணே கேள்! விருந்தினர்களுக்கு உணவளிக்கும்போது வாழை இலையின் அகன்ற பகுதி வலப்பக்கத்தில் இருக்குமாறு விரித்து வைத்துப் பரிமாற வேண்டிய உணவு வகைகளை இலையினைச் சுற்றி வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரினையும் சுடு நீரினையும் தனித்தனியே செம்பில் வைக்க வேண்டும். வெண்மையான சோறு பரிமாறுவதற்குமுன், தேனிலும் நெய்யிலும் மூழ்கவிட்ட முக்கனியான மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றுடன் இனிப்பான தின்பண்டங்களையும் வைத்து, உண்ட பிறகு பால்சோறு கொடுத்து, விருந்தினரிடம் கேட்டும் அவர்களின் குறிப்பறிந்தும் ‘சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்’ என்று கெஞ்சியும் அளவில்லாத அன்பினாலும் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

பழமொழி

தன்கையே தனக்கு உதவி

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பழக்கவழக்கம்
  2. சிறுதானியங்கள்
  3. உணவே மருந்து
  4. வாழையிலை
  5. அறுசுவை உணவு

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. தமிழர் மரபு

தரையில் உட்கார்ந்து உணவு உண்பது தமிழர் மரபு.

  1. விருந்தினர்
  2. விரைவு உணவு
  3. பழக்க வழக்கம்