உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.2 படிப்போம்

தமிழர் வாழ்வில் இயற்கைக்கூறுகள்

“அம்மா, இதோ பாருங்கள். நான் தேடிய பொருள் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான், கண்ணன். அப்படி என்ன பொருளைத் தேடினான் என்று அம்மா, அவன் கையிலிருந்து பொருளைப் பார்த்தார். அஃது ஒரு படவிளக்க அட்டை, அதில், ஐவகை நில அமைப்பு என்று அச்சிட்டிருந்தது.

அம்மா : “கண்ணா, இதைத்தான் நீ தேடினாயா?”
கண்ணன் : “ஆமாம், அம்மா”
அம்மா : “இந்தப் படவிளக்க அட்டையைக் கொண்டு என்ன செய்யப்போகிறாய்?
கண்ணன் : “நான் செயல்திட்டம் செய்வதற்காக இதனைத் தேடினேன். படம் கிடைத்துவிட்டது. ஆனால், செய்திகளைத் திரட்டவேண்டுமே”
அம்மா : ஓ, அப்படியா அதைப்பற்றி நான் கூறுகிறேன். கூடுதல் செய்திகளை நாம் இணையத்தில் தேடிப் பெறுவோம்” (வீட்டிற்கு வந்தவுடன் அம்மா, கண்ணனிடம் கூறத் தொடங்கினாள்)
அம்மா : தமிழகம் மலை, காடு, வயல், கடற்கரை எனச் சூழ்ந்திருந்தது. மலை- குறிஞ்சிநிலம், காடு-முல்லைநிலம், வயல்- மருதநிலம், கடற்கரை- நெய்தல்நிலம் எனவும் பெயர் பெற்றிருந்தன. இதனால்தான், தமிழகத்தை நானிலம் என்றனர்.
கண்ணன் : அம்மா, நானிலம் என்றால் நான்கு நிலம்தானே. ஆனால், இந்தப் படவிளக்கத் தாளில் ஐவகை நில அமைப்பு என்று உள்ளதே?
அம்மா : அடடே, சரியாகக் கூறினாய், கண்ணா. ஐந்தாவதாகக் கூறப்படும் நிலம் எது தெரியுமா? மணல்-பாலைநிலம்.
கண்ணன் : அப்படியெனில், நீங்கள் முதலிலேயே ஏன் கூறவில்லை? பாலைவனம்தான் பாலைநிலமா அம்மா?
அம்மா : இல்லை கண்ணா, தமிழகத்தில் ஏது பாலைவனம்? கடுமையான கோடைக்காலத்தில் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறண்டு போகும். மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்துபோகும். அந்நிலத்தில் நடந்துசெல்வோரின் பாதங்களை வெப்பம் சுட்டெரிக்கும்.
கண்ணன் : ஓ, வளம் குறைந்த நிலம்தான் பாலைநிலமா?
அம்மா : ஆமாம், கண்ணா.
கண்ணன் : இப்போது புரிந்தது, அம்மா. அதனால்தான் பாலை என்று ஒரு நிலம் இல்லை என்று கூறினீர்களா?
அம்மா : ஆம். இப்போது ஐவகை நில அமைப்பைப் புரிந்துகொண்டிருப்பாய். ஒவ்வொரு நிலப்பகுதியிலும் வாழ்ந்த மக்கள், இயற்கையோடு எப்படி ஒன்றி வாழ்ந்தார்கள் என்று சொல்லவா?
கண்ணன் : சொல்லுங்கள் அம்மா!
அம்மா : குறிஞ்சி நிலமென்பது, மலையும் மலைசார்ந்த பகுதியும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர் ஆவர். இவர்கள் தேனும் தினைமாவும் உண்டனர்.
கண்ணன் : அப்படியா! குறிஞ்சி நிலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன். முல்லை நிலத்தைப் பற்றியும் கூறுங்களேன்.
அம்மா : காடும் காடுசார்ந்த பகுதியும்தான் முல்லை. இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் ஆவர். இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்தனர். பால் முதலிய பொருள்களைப் பயன்படுத்தியும் பிறர்க்கு விற்றும் வாழ்ந்தனர்.
கண்ணன் : மருதநிலம் பற்றியும் சொல்லுங்கள், அம்மா.
அம்மா : மருதநில மக்கள், வயல் சூழ்ந்த பசுமையான நிலப்பகுதிகளில் வாழ்ந்தனர். இவர்களை உழவர், உழத்தியர் என்பர். இவர்கள் நெல் முதலான உணவுப் பயிர்களை விளைவித்தனர்.
கண்ணன் : ஓ! அப்படியென்றால், நெய்தல் நிலம் பற்றி நானே சொல்லட்டுமா? கடற்கரைப்பகுதி என்று நீங்கள் கூறினீர்கள் அல்லவா? அதனால், கடலும் கடல்சார்ந்த பகுதியும் நெய்தல்தானே, அம்மா?
அம்மா : சரியாகச் சொன்னாய், கண்ணா. அந்நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்தவர்களைப் பரதர், பரத்தியர் என்பர். இவர்கள் மீன்களை உணவாக உண்டும் அவற்றை விற்றும் வாழ்ந்தனர்.
கண்ணன் : பாலைநிலம் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகிறேன், அம்மா.
அம்மா : பாலைநிலம் மணல் பகுதி அல்லவா, அங்கு வாழ்ந்த மக்களை எயினர், எயிற்றியர் என்பர். இவர்கள் பிறரிடம் கவர்ந்த பொருள்களைக் கொண்டு வாழ்ந்தனர்.
கண்ணன் : அப்படியா, அம்மா?
அம்மா : ஆமாம், கண்ணா! ஐவகை நில அமைப்பு பற்றி ஓரளவு அறிந்து கொண்டாய். கூடுதல் செய்திகளை மற்றொருநாள் கூறுகிறேன்.
கண்ணன் : சரிங்க அம்மா, நான் செயல்திட்டம் செய்யத் தொடங்குகிறேன்.

(கண்ணன் செயல்திட்டம் செய்யத் தொடங்க, அம்மா அவனுக்கு உதவுகிறார்.)

பொருள் அறிவோம்

1. நானிலம் - நான்கு வகையான நிலம்
2. ஆய்ச்சியர் - ஆநிரைகளை மேய்க்கும் பெண்கள்
3. கோடைக் காலம் - வெயில் காலம்

விடை காண்போம்

மலை-குறிஞ்சிநிலம், காடு-முல்லைநிலம், வயல்- மருதநிலம், கடற்கரை- நெய்தல்நிலம் எனவும் பெயர் பெற்றிருந்தன. இதனால்தான், தமிழகத்தை நானிலம் என்றனர்.

கடுமையான கோடைக்காலத்தில் முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறண்டு, மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்து பாலைவனமாக காட்சி அளிப்பது பாலை நிலம் ஆகும். பாலைநிலம் மணலும் மணல் சார்ந்த பகுதியாக விளங்குகிறது.

உழவர், உழத்தியர்

ஐவகை நில அமைப்பைக் கொண்ட படவிளக்க அட்டை.

படவிளக்க அட்டையைக் கொண்டு கண்ணன் செயல்திட்டம் செய்யத் தொடங்கினான்.