உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.2 படிப்போம்

பாரி பட்டிமன்றம்

நடுவர் : அனைவருக்கும் வணக்கம். ” நீர்இன்று அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். மனித வாழ்வுக்கு அடிப்படை, நீர். அதனைச் சிறப்பாகத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதே, நீர் மேலாண்மை எனப்படும். நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது அந்தக் காலமா? இந்தக் காலமா? என்பதே இன்றைய பட்டிமன்றத் தலைப்பு . அந்தக் காலமே! என்ற அணியில் இருவரும், இந்தக் காலமே! என்ற அணியில் இருவரும் இங்குப் பேச வந்துள்ளனர். அவர்களுள் முதலாவதாக, அந்தக் காலமே எனப் பேச வருகிறார் மகிழ்நன்.
மகிழ்நன் : நடுவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். ‘மாமழை போற்றுதும்!.. மாமழை போற்றுதும்!’ என்கிறது சிலப்பதிகாரம். நம் முன்னோர், பருவக்காலங்களில் பெய்யும் மழைநீரை வீணாக்கவில்லை. அந்நீரை அணைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் சேமித்தனர். அவற்றைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். எனவே, ‘நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது அக்காலமே!’ என்று கூறி அமர்கிறேன். நன்றி!
நடுவர் : நம் முன்னோர் நீரைச் சேமிப்பதில் அக்கறை கொண்டிருந்தனர் என்று மகிழ்நன் பேசினார். அடுத்ததாக, ‘நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது இந்தக் காலமே!’ என்ற தலைப்பில் பேச வருகிறார் ஓவியா.
ஓவியா : ”மழை வரும் என்றே மந்திரம் செபிச்சது அந்தக் காலம்… மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது இந்தக் காலம்” என்றார் பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி. பூமியின் உயிர் நீர் மழை. அதை வீணாக்காமல், இக்காலத்தில் வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்துச் சேமிக்கிறோம். ஆகவே, காலத்திற்கு ஏற்ப இன்றுதான் நாம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறோம் என்பதை உறுதியாகக் கூறி அமர்கின்றேன் நன்றி!
நடுவர் : வான்மழை போல் பேசிய ஓவியாவிற்குப் பாராட்டுகள். அடுத்தாக, ‘நீர் மேலாண்மையில் சிறந்தது அந்தக் காலமே!’’ என்று பேசவருகிறார் மணி.
மணி : ஐயா!. . . அந்தக் காலத்தில் மக்கள், தங்கள் தேவைக்கு மட்டுமே நீரைப் பயன்படுத்தினர். ஆனால் இன்றோ, தேவைக்கும் அதிகமாகவே பயன்படுத்துகின்றனர். நீர் மேலாண்மை என்பது அதனைச் சேமிப்பது மட்டுமன்று. சேமித்ததைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் வேண்டும். அதனைச் சிறப்புறச் செய்தது அந்தக் காலமே எனக்கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.
நடுவர் : நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் நீர் மேலாண்மைதான் என்பதை அழகாகச் சுட்டிக்காட்டினார் மணி. நிறைவாகப் பேச வருகிறார் இனியன்.
இனியன் : நடுவர் அவர்களே! அன்று வயல்களுக்கு வாய்க்கால் வழியாக நீரைப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர். ஆனால் இன்றோ, சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புமுறை நீர்ப்பாசனம் போன்றவை உள்ளன. இவற்றின் மூலம், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, வேளாண்மை செய்கின்றனர். இதனால், தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடல்நீரைக் குடிநீர் ஆக்குதல், பயன்படுத்திய நீரைத் தூய்மை செய்து மீண்டும் பயன்படுத்துதல் முதலிய முறைகளும் உள்ளன. எனவே, ‘நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது, இந்தக் காலமே!’ என்று கூறி அமர்கிறேன்.
நடுவர் : இன்றைய நீர் மேலாண்மையின் சிறப்பைப் பேசிய இனியனுக்கு நன்றி. இன்று, நீரின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால்தான், நாம் நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறோம். ஆகவே, நீர்நிலைகளைப் பாதுகாப்பது நம் கடமையாகும். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். அதுவே நமக்கும் நம் தலைமுறையினருக்கும் நாம் செய்யும் சிறந்த உதவியாகும். இங்கு நம்மிடையே பேசிய நால்வரும், நீர் மேலாண்மை பற்றித் தெளிவாகக் கூறினர். நீரைச் சேமிப்பதும் சிக்கனமாகப் பயன்படுத்தவும் மிகவும் தேவை என்று வலியுறுத்தினர். அவர்களுக்கு நம் பாராட்டுகள். அந்தக் காலமோ, இந்தக் காலமோ எந்தக் காலமாக இருந்தாலும் நம் அடிப்படைத் தேவை நீர். அதனை, மேலாண்மை செய்வது மிகவும் இன்றியாமையாதது என்று கூறிப் பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

பொருள் அறிவோம்

1. அணி - குழு
2. மாமழை - அதிக மழை
3. செபிப்பது - ஓதியது
4. பாசனம் - நீர் பாய்ச்சுதல்

விடை காண்போம்

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது அந்தக் காலமா? இந்தக் காலமா?

சிலப்பதிகாரம்

முன்னோர்கள், நீரை அணைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் சேமித்தனர்.

வேளாண்மையில் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புமுறை நீர்ப்பாசனம் போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றின் மூலம், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, வேளாண்மை செய்ய முடியும். இதனால், தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது.