உகரம்
(முதல் பருவம்)
| ரெமோ | : | மோஜோ! வணக்கம். | |
| மோஜோ | : | வணக்கம். . . ரெமோ! | |
| ரெமோ | : | மோஜோ!… நாளை எனக்கு ‘நூலகம்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி இருக்கிறது. அது தொடர்பாகச் சில செய்திகள் வேண்டும் சொல்வாயா? | |
| மோஜோ | : | ஓ… சொல்வேனே! | |
| ரெமோ | : | புத்தகம் என்றால் என்னவென்று சொல், மோஜோ? | |
| மோஜோ | : | புது அகத்தை உருவாக்கக் கூடியவை, புத்தகங்கள். நமக்குப் புறத்தில் மாற்றம் வேண்டுமெனில் அகத்தில் மாற்றம் வேண்டும். அதற்கு மிக எளிய வழி புத்தகம் படித்தல்தான் | |
| ரெமோ | : | ஓ... அப்படியா? சரி. . . புத்தகத்தின் சிறப்பைப் பற்றி அறிஞர்கள் கூறியுள்ளதைச் சொல். | |
| மோஜோ | : | ‘உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல, மனத்துக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு‘ என்றார் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச்சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். 'புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது' என்றார் சிசரோ. 'நல்ல நூலைப் போல, சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை' என்றார் அறிஞர் அண்ணா. | |
| மோஜோ | : | மிக நல்ல கருத்துகள் மோஜோ… சரி நூலகம் என்றால் என்ன? | |
| ரெமோ | : | அறிவை வளர்க்கும் புத்தகங்களைக் கொண்டிருப்பதே நூலகம். | |
| மோஜோ | : | நூலகத்தைப் பற்றிக் கூடுதல் செய்திகள் கொடு மோஜோ. . . | |
| ரெமோ | : | சொல்கிறேன்... நூலகம், புத்தகங்களைப் பாதுகாத்து அனைத்துத் தலைமுறைக்கும் அறிவைக் கடத்தும் ஊடகமாகச் செயல்படுகிறது. அது, நாம் அறிந்திராத பல செய்திகளைத் தனக்குள் வைத்துள்ளது. | |
| மோஜோ | : | அருமை. . . அருமை. . . மோஜோ… உலகில் உள்ள சிறந்த சில நூலகங்களைப் பற்றிச் சொல். | |
| ரெமோ | : | சொல்கிறேன் ரெமோ . . . . உலகின் மிகப்பெரிய நூலகம், பிரிட்டிஷ் நூலகம் (British Library). இங்கு, 3000 ஆண்டுகால வரலாற்றுப் பழைமையான புத்தகங்கள் மட்டுமின்றி தற்காலத்திற்கேற்ற மின்நூல்களும் உள்ளன. |
| ரெமோ | : | அப்பாடியோ . . .? அப்படி என்றால் எவ்வளவு பெரிய நூலகமாக இருக்கும்? அடுத்த நூலகம் பற்றிச் சொல். | |
| மோஜோ | : | தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் (Library of Congress) என்ற நூலகம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இது, சுமார் 110 மில்லியன் புத்தகங்களைக் கொண்டுள்ளது. |
| ரெமோ | : | சரி மோஜோ… சிறுவர்களுக்குச் சிறப்பான நூலகம் ஏதேனும் இருப்பின் கூறுவாயா | |
| மோஜோ | : | ஓ … ஏராளமாக உள்ளனவே. அவற்றுள், செர்ரிடோஸ் மில்லினியம் நூலகம் (The Cerritos Library), கலிஃபோர்னியாவின் செர்ரிடோஸ் நகரத்தில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கான பிரிவு மிகவும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக, அமெரிக்காவிலுள்ள பிரெண்ட்வுட் நூலகமும் அத்தகையதே. | |
| ரெமோ | : | கேட்கவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது மோஜோ. | |
| மோஜோ | : | மற்றுமொரு சிறந்த நூலகம், மயிங்கா. இது, மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மயிங்கா என்ற நகரில் உள்ளது. நகரின் முதல் நூலகமும் ஒரே நூலகமும் இதுதான். காது கேளாத குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நூலகம் இதுவாகும். |
| ரெமோ | : | அடடா... சிறப்பு. சரி, மோஜோ. . . ஆசியாவிலுள்ள நூலகங்களைப் பற்றிச் சொல்கிறாயா? | |
| மோஜோ | : | சொல்கிறேன். . . சீனாவின் தேசிய நூலகம் (National Library of China) பெய்ஜிங்கில் அமைந்துள்ளது. இது, அழகிய கட்டட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. பல ஆயிரம் மின்நூல்களைக் கொண்டுள்ளது. |
| ரெமோ | : | அப்படியா? சரி மோஜோ. . . இந்தியாவில் உள்ள நூலகங்களைப் பற்றிச் சொல்... | |
| மோஜோ | : | ஆசியாவின் மிகப் பழைமையான நூலகம் இந்தியாவில் உள்ளது. அதுதான், சரசுவதி மகால் நூலகம் (Saraswathi Mahal Library). தமிழ்நாட்டின் தஞ்சாவூரிலுள்ள இந்த நூலகத்தில், அரிய வகை ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்கு தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் காகிதக் குறிப்புகளும் உள்ளன. இந்த நூலகத்தின் சிறப்பைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் ஓர் அருங்காட்சியகமும் அங்கேயே உள்ளது. |
| ரெமோ | : | ஓ…… இது, நம் அறிவுச் செல்வங்களைப் பாதுகாக்கும் இடம் என்று சொல். | |
| மோஜோ | : | ஆமாம் ரெமோ. மற்றொரு நூலகத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேள். தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் (Anna Centenary Library). இது, ஆசியாவின் பெரிய நூலகங்களுள் ஒன்று. |
| ரெமோ | : | அண்ணா நூற்றாண்டு நூலகமா? அதைப்பற்றி விளக்கமாகச் சொல். | |
| மோஜோ | : | சொல்கிறேன். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை. அவர், நூல்கள் கற்பதில் மிகுந்த விருப்பம் உடையவர். எனவே, அவர் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" தொடங்கப்பட்டது. | |
| ரெமோ | : | இந்த நூலகத்தைப் பற்றிய, கூடுதல் செய்திகளைச் சொல் மோஜோ. | |
| மோஜோ | : | பல்வேறு துறையைச் சார்ந்த ஐந்து இலட்சம் நூல்கள் இங்கு உள்ளன. இது “உலக இணைய மின்நூலகத்துடன்” (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. நூலகக் கட்டடத்தில், 8 தளங்கள் உள்ளன. இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இந்நூலகம் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வருகை தருகிறார்கள். | |
| ரெமோ | : | அப்படியா மோஜோ … முதலில் அங்குச் சென்று வரவேண்டும். | |
| மோஜோ | : | சென்று வா ரெமோ … மிக அருமையாக இருக்கும். நூலகம் பற்றி உனக்குத் தேவையான செய்திகள் கிடைத்துள்ளனவா ரெமோ? | |
| ரெமோ | : | கூடுதலாகவே செய்திகள் கிடைத்துவிட்டன. நாளை பேச்சுப்போட்டியில் எப்படி அசத்துகிறேன் பார் … நன்றி மோஜோ… | |
| மோஜோ | : | நன்றி ரெமோ. |
| 1. | ஒப்பானது | - | இணையானது | ||
| 2. | ஏராளமாக | - | நிறைய | ||
| 3. | ஆச்சரியம் | - | வியப்பு | ||
| 4. | கூடுதல் | - | மிகுதி | ||
| 5. | அசத்துதல் | - | சிறப்பாகச் செயல்படுதல் |
சிக்மண்ட் ஃப்ராய்ட், ‘உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல, மனத்துக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு’ என்று புத்தகத்தின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார்.
மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மயிங்கா என்ற நகரில் மயிங்கா நூலகம் அமைந்துள்ளது. இது காது கேளாத குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நூலகம் ஆகும்.
ஆசியாவின் மிகப்பழமையான நூலகம் சரசுவதி மகால் நூலகம். தமிழ்நாட்டின் தஞ்சாவூரிலுள்ள இந்த நூலகத்தில், அரிய வகை ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்கு தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் காகிதக் குறிப்புகளும் உள்ளன. இந்த நூலகத்தின் சிறப்பைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.
ரெமோ நூலகம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் பங்கேற்கிறான்.
உலகின் மிகப்பெரிய நூலகம், பிரிட்டிஷ் நூலகம்.