உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.2 படிப்போம்

கல்வியின் சிறப்பு

மனித வாழ்வில், ஒவ்வொரு பருவத்திற்கும் சில கடமைகள் உண்டு. அவற்றுள். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான் ‘இளமையில் கல்’ என்றார் ஔவையார். கல்வியானது, கற்பவனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அமைதல் வேண்டும். அத்தகைய கல்வியைக் கற்றுத்தரும்படி, தன் மகனின் ஆசிரியருக்கு ஆபிரகாம்லிங்கன் கடிதம் எழுதினார்.

சிறந்த கல்வி, மனித சமுதாயத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும். மக்களைச் சீர்திருத்திச் செம்மைப்படுத்தும். மனித ஆற்றலை மேம்படுத்தும். பண்பாட்டினைக் காக்கும். அறிவியலை வளர்க்கும். நாட்டுப்பற்றை உண்டாக்கும். இத்தகு ஆற்றல் கொண்ட கல்வியையே இளைய தலைமுறை பெற வேண்டும். இதனையே ஆபிரகாம் லிங்கனின் கடிதம் வலியுறுத்துகிறது. அக்கடிதத்தின் சில பகுதிகளை இப்பாடத்தில் காண்போம்.

அவன் கற்றுக் கொள்ள வேண்டும்
அனைத்து மனிதர்களும்
நேர்மையானவர் அல்லர்
அனைத்து மனிதர்களும்
உண்மையானவர் அல்லர்
என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன்னல அரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

புத்தகங்கள் என்ற புதிய உலகத்தின் வாசல்களை
அவனுக்குத் திறந்து காட்டுங்கள்.
அதே வேளையில், இயற்கையை இரசிக்கவும்
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின்
வியப்பு மிகுந்த அழகையும்
சூரிய ஒளியில் மின்னும்
தேனீக்களின் வேகத்தையும்
பசுமையான மலையில் உள்ள
மலர்களின் வனப்பையும்
இரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமை குணம் வந்துவிடாமல்
கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது
எவ்வளவோ மேலானது என்பதைப்
பள்ளியில் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

மனிதர்கள் அனைவரின் குரலையும்
அவன் கேட்க வேண்டும்; எனினும்
உண்மை என்னும் திரையில் வடிகட்டி
நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க
அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துன்பமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்
தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அதே வேளையில்
தன்னுடைய வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும்
பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன் மீதே மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும்
அப்போதுதான் மனித இனத்தின்மீது
அவன் மிகுந்த நம்பிக்கை கொள்வான்.

அவனை அன்பாக நடத்துங்கள்
ஆனால் அதிக செல்லம் கொடுத்துச் சார்ந்திருக்கச்
செய்யாதீர்கள்.
ஏனென்றால் மிகுதியான தீயில் காட்டப்படும்
இரும்பு மட்டும்தான்
பயன் மிக்கதாக மாறுகிறது.

இது மிகப்பெரிய பட்டியல்தான்.
இவற்றுள் செய்ய முடிந்ததை எல்லாம் கற்றுக்கொடுங்கள்.
அவன் மிக நல்லவன், என்னுடைய அன்பு மகன்.

பொருள் அறிவோம்

1. வனப்பு - அழகு
2. மௌனம் - அமைதி
3. வாசல் - நுழைவாயில்
4. செல்லம் - மிகுந்த அன்பு

விடை காண்போம்

புத்தகங்கள்

பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் தன்னுடைய வலிமையை மௌனமாக வெளிப்படுத்துவது பொறுமை.

ஆசிரியர், மாணவனுக்கு இயற்கையையும், வானில் பறக்கும் பறவைகளின் வியப்பு மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையில் உள்ள மலர்களின் வனப்பையும் இரசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.