உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.2 படிப்போம்

கீழடி நம் தாய்மடி

நற்றமிழ்த் தொலைக்காட்சி நேயர்கள் அனைவருக்கும் கல்விக்கரசியின் இனிய வணக்கம். இன்றைய சிறப்புப்பார்வை நிகழ்ச்சியில் கீழடி அகழாய்வு குறித்து நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.

தமிழ்மக்களைத் தரணியில் உயர்த்திய தனிச்சிறப்புமிக்க தளம்; அதுவே கீழடி ஆய்வுக்களம்.

நமக்குக் கீழடி ஆய்வுக்களத்திலிருந்து நேரடியாகச் செய்திகளை வழங்க, நம் செய்தியாளர் அறிவுச்செல்வன் நம்முடன் இணைந்துள்ளார். அவரிடம் செய்திகளை விரிவாகக் கேட்போம்.

கல்விக்கரசி : வணக்கம் அறிவுச்செல்வன். இப்போது நீங்கள் இருக்கும் இடம்பற்றிக் கூறுங்கள்.
அறிவுச்செல்வன் : வணக்கம் கல்விக்கரசி. நான் தற்போது கீழடி அகழாய்வுக் களத்தில் உள்ளேன். இது, தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும், மதுரைக்கு மிக அருகில் உள்ளது.
கல்விக்கரசி : நல்லது அறிவுச்செல்வன். நீங்கள் நிற்கும் இடத்தில் வளையங்கள் அடுக்கி வைத்ததுபோல் உள்ளன! அவை பற்றிக் கூறுங்கள்.
   
அறிவுச்செல்வன் : நீங்கள் காண்பது, உறைகிணறு! இது, சுடுமண் உறைகளால் (வளையங்களால்) ஆனது. பொதுவாக, மணற்பாங்கான பகுதிகளில் மணல் கிணற்றினுள் சரியாமல் இருக்க, இதுபோன்ற கிணறு கட்டப்படுவதுண்டு. அதனை ஒட்டி காண்பது சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்.
கல்விக்கரசி : சுடுமண் உறைகள், சுட்ட செங்கற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்களா? அருமை. மேலும் தகவலைப் பகிருங்கள்.
அறிவுச்செல்வன் : இங்கே பாருங்கள். பானையும் பானை ஓடுகளின் குவியலும் கிடைத்துள்ளன. இவற்றைக் காணும்போது இங்கு, பானை செய்யும் தொழிற்கூடம் செயல்பட்டிருக்கலாம் என அறியமுடிகிறது.
கல்விக்கரசி : அப்படியா! வேறு என்னென்ன பொருள்கள் கிடைத்துள்ளன?
அறிவுச்செல்வன் : இங்கு, அணிகலன்கள் கிடைத்துள்ளன. பெண்கள் அணியும் தங்கத்தாலான அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தாலான வளையல் துண்டுகள் ஆகிய பொருள்கள் கிடைத்துள்ளன.
   
தங்கத்தாலான அணிகலன்கள்
கண்ணாடி மணிகள்
கல்விக்கரசி : உழவுத்தொழில் தொடர்பான பொருள்கள் எவையேனும் கிடைத்துள்ளனவா?
அறிவுச்செல்வன் : ஆம். உழவு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, நெசவுத் தொழில் நடந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
கல்விக்கரசி : அவற்றைப் பற்றிச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.
அறிவுச்செல்வன் : விலங்குகளின் எலும்புத்துண்டுகள் கிடைத்துள்ளன. அவை அங்குப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளுக்கானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகியவற்றை உழவுத்தொழிலுக்குப் பயன்படுத்தி இருக்கலாம். மேலும், நெசவுத்தொழிலுக்குப் பயன்பட்ட தக்களி போன்ற பொருள்களும் கிடைத்துள்ளன.
கல்விக்கரசி : அக்கால மக்களின் எழுத்தறிவு எப்படி இருந்தது? அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளனவா?
   
நூல் நூற்கும் தக்களிகள்
எலும்புக் கருவிகள்
அறிவுச்செல்வன் : கிடைத்துள்ளன. இங்குக் கிடைத்த பானை ஓடுகளில் கீறல்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன. எனவே, அக்காலத்திலேயே மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என அறியமுடிகிறது. உலகின் தொன்மையான மக்கள்சமூகமாகத் தமிழ்மக்கள் விளங்கினர். இவ்வுண்மையைக் கீழடி அகழாய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
கல்விக்கரசி : கீழடியிலிருந்து நேரடியாகத் தகவல்களை வழங்கியமைக்கு நன்றி அறிவுச்செல்வன். நேயர்களே! கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. கூடுதல் செய்திகளுடன் மீண்டும் உங்களைச் சந்திப்பேன். நன்றி! வணக்கம்!

பொருள் அறிவோம்

1. தரணி - உலகம்
2. தொன்மை - பழைமை
3. திறம் - திறமை
4. தக்களி - நூல் நூற்கப் பயன்படும் ஒரு கருவி
5. பறைசாற்றும் - வெளிப்படுத்தும்

கீழடி தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுகிறது.

3. மணற்பாங்கான பகுதிகளில் கிணற்றினுள் மணல் சரியாமல் இருக்க உறை கிணறு கட்டப்படுகிறது.

கீழடியில் பெண்கள் அணியும் தங்கத்தாலான அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்தாலான வளையல் துண்டுகள் ஆகிய பொருள்கள் கிடைத்துள்ளன.

திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகியவற்றின் எலும்புத்துண்டுகள் உழவுத் தொழிலுக்கு கிடைத்த சான்றுகள் ஆகும்.