உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.2 படிப்போம்

தமிழரின் அறிவியல் சிந்தனை

தமிழரின் வாழ்வில் அறிவியலுக்கு மிகச்சிறந்த இடம் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும், தாம் கண்டறிந்த அறிவியல் உண்மைகளைத் தமது நூல்களில் குறித்து வைத்துள்ளனர். பல நூற்றாண்டிற்கு முன்பே உயிர்ப்பாகுபாடு குறித்த செய்தி, தமிழரின் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. இதன் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார்.

நம்மைச் சுற்றிப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. அவற்றையெல்லாம் அறுவகைக்குள் அடக்கிக்காட்டினார் தொல்காப்பியர். இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக, அவரது கூற்று விளங்குகிறது.

மெய் (உடல்), வாய், மூக்கு, கண், காது ஆகிய ஐந்தும் ஐம்பொறிகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வைந்தும் ஐம்புலன்களுக்கு உரியவை. அவை,

1. கண் - பார்த்தல்
2. காது - கேட்டல்
3. வாய் - சுவைத்தல்
4. மூக்கு - நுகர்தல்
5. மெய் (உடல்) - உணர்தல்

ஆகிய உணர்வுகளைக் கொண்டுள்ளன. அத்தகைய ஐம்புலன் அடிப்படையில், தொல்காப்பியர் உயிர்களைப் பாகுபடுத்தியுள்ளார்.

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு நூற்பா பின்வருமாறு,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே“

(தொல்.மரபு. நூ. 1526)

எனத் தொல்காப்பியர், புலன் உணர்வுகளால் உயிர்களை அழகாகப் பாகுபடுத்தியுள்ளார். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவுடன் மனத்தால் பகுத்தறியக்கூடிய பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவையும் சுட்டிக்காட்டியுள்ளார். இஃது, அவருடைய ஆற்றல்மிகு சிந்தனையின் விளைவே ஆகும். இத்தகைய சிந்தனைகள், வளரும் அறிவியல் அறிஞர்களுக்குச் சிறந்த சான்றுகளாக அமையும்.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் ஒரு பெட்டகமாகத் தொல்காப்பியத்தில் அறிவியல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

இன்றைய தாவரவியல் செய்திகளுடன் இணைத்து ஆராயும்போது பழந்தமிழர், அறிவியல் நோக்கில் ஆராய்ந்து சிந்தித்த கருத்துகளை ஒப்புமைப்படுத்தலாம். இவற்றை உலகெங்கும் பரவச்செய்தால் தமிழரின் அறிவியல் சிந்தனை அனைவராலும் அறியப்படும்.

பொருள் அறிவோம்

1. பாகுபாடு - பிரிவு
2. ஐம்பொறிகள் - ஐந்து உறுப்புகள்
3. ஐம்புலன்கள் - ஐந்து உணர்ச்சிகள்
4. பகுத்தறிவு - நன்மை, தீமை என ஆராயும் அறிவு
5. சிந்தனை - எண்ணம்

வினாக்களுக்கு ஏற்ற விடையை எழுதுக.

தொல்காப்பியம்

தொல்காப்பியர்

ஆறு

மூன்றறிவு என்பது நுகர்தல் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

தொல்காப்பியர் ஐம்புலன் அடிப்படையில் உயிர்களைப் பாகுபடுத்தியுள்ளார். ஐம்புலன் அறிவுடன் மனத்தால் பகுத்தறியக் கூடிய பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவையும் மனிதனுக்கு சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொல்காப்பியர் கூறும் ஆறு அறிவுகளை கீழ்வரும் பாடல் விவரிக்கிறது.

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே“

இத்தொல்காப்பியப் பாடலில் ஆறு அறிவு குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.