உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.2 படிப்போம்

செயலிகள்

செயலி என்பது ஒரு பயன்பாடு. பொதுவாகச் செயலியானது கணினி மென்பொருளாகவோ, ஒரு நிரலாகவோ பயன்படுத்தப்படுகிறது. இச்செயலி, திறன்பேசிகளில் ஒரு மென்பொருளாகப் பயன்படுகிறது. செயலி என்பதை ஆங்கிலத்தில் APP என்பர். Application என்பதன் சுருக்கமே APP என்பதாகும். கையடக்கக் கருவிகளை இயக்குவதே செயலிகள்தாம் என்று கூறலாம். மனிதனின் தேவைகளை அறிந்து புதுப்புது செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாமல் கல்வி கற்பதற்கும் செயலிகள் உள்ளன. அவற்றுள் இரண்டை மட்டும் இங்கு அறிந்துகொள்வோம்.

சேர்த்துப் படித்தல் (Read along)

குழந்தைகள் பயன்படுத்தும் செயலிகளுள் ஒன்று ‘சேர்த்துப் படித்தல்’. குழந்தைகளுக்குக் கதையும், விளையாட்டும் மிகவும் பிடிக்கும். அவர்களுக்குப் பிடித்த வடிவத்தில் இச்செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. முதலில், கதைப்பகுதிக்குள் சென்றால் அதிலுள்ள படங்களும் எளிய சொற்களும் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். கதையைப் படிக்கப் படிக்க குழந்தைகளைப் பாராட்டுவதுடன் நட்சத்திரப் புள்ளிகளும் (Stars) வழங்கும்.

சொற்களைப் படிக்க முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. அதிலுள்ள சொற்களைத் தொட்டால், சொற்களே ஒலிக்கும். இச்செயலியில் நான்கு நிலையில் கதைகள் உள்ளன. அடுத்ததாக விளையாட்டுகள் பகுதி உள்ளது. இதில் இடம் மாறியுள்ள எழுத்துகள், விரைவாகப் படித்தல், பலூன் உடைத்தல் (பலூனில் எழுத்து வரும்) ஆகிய விளையாட்டுகள் உள்ளன. அதிகப் புள்ளிகளைப் பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. மாணவர்கள் படித்தல் திறனில் சிறந்து விளங்க, இச்செயலியைப் பயன்படுத்தலாம்.

சொல்லி அடி

தூய தமிழ்ச்சொற்களை மீட்டு எடுக்கும் முயற்சியினால் உருவானதே ‘சொல்லி அடி’ என்னும் செயலி. இச்செயலியில் நான்கு பிரிவு உண்டு. அவை, விழியோடு விளையாடு, புதையல் சொற்கள், செந்தமிழ் தேடல், இரகசிய சொற்கள் என்பன. அவற்றுள் ஐவகை விளையாட்டுகள் உள்ளன.

இன்று எண்ணற்ற செயலிகள் வெளிவருகின்றன. கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, வாணிகம் எனப் பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு இவை பேருதவி புரிகின்றன. செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன்பு, அவற்றின் நம்பகத்தன்மையை ஆராயவேண்டும். அதன்பிறகே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

பொருள் அறிவோம்

1. ஆர்வம் - ஈடுபாடு
2. எண்ணற்ற - கணக்கற்ற
3. ஐவகை - ஐந்துவகை
4. வாணிகம் - வியாபாரம்

வினாக்களுக்கு ஏற்ற விடையை எழுதுக.

செயலி என்பது ஒரு பயன்பாடு

செயலி என்பதை ஆங்கிலத்தில் App என்பர். Application என்பதன் சுருக்கமே App என்பதாகும்.

கதைப்பகுதி

‘சொல்லி அடி’ செயலி தூய தமிழ்ச்சொற்களை மீட்டு எடுக்கப் பயன்படுகிறது.

ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு, அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும்.