உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.2 படிப்போம்

சமூக ஊடகமும் இணையப் பாதுகாப்பும்

இணையம் இல்லை எனில், இவ்வுலகம்கூட இயக்கத்தை நிறுத்திவிடுமோ என நாம் கருதும் அளவிற்கு இணையத்தின் பயன்பாடு மிகுந்துள்ளது. இணையத்தால் ஏற்படும் நன்மைகள் மிகுதி. ஆயினும், அறியாமையால் சில எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. எனவே, சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, நாம் எத்தகைய பாதுகாப்பு முறைகளைக் கையாளலாம் என்பதைப் பின்வரும் சூழல்கள் மூலம் அறிந்துகொள்வோம்.

சூழல் – 1
கதிர் : அம்மா! எனக்கு ஓர் உதவி செய்யுங்கள்.
அம்மா : என்ன உதவி கதிர்?
கதிர் : ஒரு கட்டுரை எழுதவேண்டும் அம்மா. உங்களுடைய மடிக்கணினியைக் கொடுங்கள்.
அம்மா : நீயே தட்டச்சு செய்யப்போகிறாயா?
கதிர் : இல்லை, அம்மா. இணையத்தில் கட்டுரைக்கான செய்திகளைத் தேடிய பின்னர்தான் எழுதுவேன்.
அம்மா : ஓ! சரி, சரி. இதோ தருகிறேன். உன் பணி முடிந்தவுடன் மடிக்கணினியைக் கொடுத்துவிட வேண்டும்.

(அம்மா, சிறுவர்களுக்கான பாதுகாப்புச் செயலியை இயக்கியபின், கதிரிடம் தருகிறார்)

சூழல் – 2
இலக்கியா : சுடர்! இந்தப் புகைப்படம் நன்றாக உள்ளதே!
சுடர்விழி : அப்படியா? நன்றி இலக்கியா.
இலக்கியா : நீ ஏன் இதனை முகநூல் (Facebook) சுயவிவரம் (Profile) வைக்கக் கூடாது?
சுடர்விழி : அதனை எடுத்து யாராவது தவறாகப் பயன்படுத்திவிட்டால் என்ன செய்வது?
இலக்கியா : அப்படி இல்லை சுடர். சுயவிவரம் பாதுகாப்பு (Profile Lock) என்னும் வசதி உள்ளது. அதனைச் செய்துவிட்டால், உன் நண்பர்களால் மட்டுமே உன் விவரங்களையும் புகைப்படத்தையும் காண முடியும். மற்றவர்களால் உன் சிறிய அளவிலான புகைப்படத்தை மட்டுமே பார்க்கமுடியும். அதைப் பதிவிறக்கம் செய்யவோ, பெரியதாக்கிப் பார்க்கவோ முடியாது.
சுடர்விழி : அப்படியா? இப்படி ஒரு வசதி உள்ளதா? அதனை இப்போதே செய்துவிடுகிறேன். நன்றி இலக்கியா.
சூழல் – 3
கவின் : அப்பா, என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?
அப்பா : என் செல்பேசியில் ஓர் அழைப்பு வந்தது கவின். எனக்கு `5 இலட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாம். அதனை அனுப்புவதற்கு, என் வங்கிக் கணக்கு எண் (Bank Account No.), கடன் அட்டை எண் (Credit Card No.) நிரந்தரக் கணக்கு அட்டை எண் (PAN CARD No.) ஆகியவற்றை அனுப்புமாறு கேட்டிருந்தனர். அதனை அனுப்ப உள்ளேன்.
கவின் : உங்களுடன் யார் தொடர்பு கொண்டார்கள்?
அப்பா : வங்கியிலிருந்து பேசுவதாகத்தான் கூறினார்கள்.
கவின் : அப்பா! எந்த வங்கியும் நீங்கள் சொல்லும் விவரங்களைச் செல்பேசியில் அழைத்தோ, குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ கேட்காது.
அப்பா : அப்படியா? யார் எனக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள்?
கவின் : உங்களை யாரோ ஏமாற்ற முயற்சி செய்துள்ளனர் அப்பா. இனிமேல் வங்கித் தொடர்புடைய தகவல்கள், அதன் கடவுச்சொல் (Password), ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
அப்பா : சரி, கவின். இனி, நான் கவனமாக இருப்பேன்.

விடை காண்போம்

கதிர் தன் அம்மாவிடம் கட்டுரை எழுதுவதற்காக மடிக்கணினி கேட்டான்.

இணையத்தில் அறியாமையால் சில எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. இதனைத் தடுக்கவே பாதுகாப்புச் செயலி இயக்கப்படுகிறது.

சுடர்விழி, தனது புகைப்படத்தை யாராவது தவறாகப் பயன்படுத்திவிட்டால் என்ன செய்வது? என்று எண்ணி முகநூலில் பதிவிடத் தயங்கினாள்.

சுயவிவரம் பாதுகாப்பு (Profi;e Lock) என்பது நண்பர்கள் மட்டுமே முகநூலில் ஒருவரின் விவரங்களையும் புகைப்படத்தையும் காணமுடியும். மற்றவர்களால் சுயவிவரத்தில் (profile) உள்ள சிறிய அளவிலான புகைப்படத்தை மட்டுமே பார்க்கமுடியும். அதைப் பதிவிறக்கம் செய்யவோ, பெரிதாக்கிப் பார்க்கவோ முடியாது.

கடவுச்சொல் பயனரின் அடையாளத்தை அங்கீகரிக்கிறது. பயனரின் தரவு மற்றும் தகவலுக்கான பாதுகாப்பை கடவுச்சொல் உறுதி செய்கிறது.