உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.2 படிப்போம்

கேள்வி என்னும் கலை

கிரீஸ் நாட்டின் இராணுவத்தில் அவர் பணியாற்றினார். சிறப்பாகப் போரிட்டதைப் பாராட்டி அவருக்குப் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, ‘பரிசை என் நண்பருக்கு வழங்குங்கள்; ஏனெனில் அவரின் போர் உத்தியைத்தான் நான் கையாண்டேன்’ என்றார். இத்தகைய பெருந்தன்மை அவரிடம் இயல்பாகவே இருந்தது.

அவரது நெருங்கிய நண்பர்கள் நீங்கள் அரசியலில் ஈடுபட்டால் பெரும்புகழ் பெறலாம் என்று கூறினர். அதற்கு அவர் ‘பணத்தையும், பதவியையும் பெறுவது என் நோக்கமல்ல. மக்களின் மனத்தில் தெளிவினை ஏற்படுத்துவதே என்னுடைய முதன்மையான நோக்கமாகும்‘ என்றார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

தன் நாட்டு மக்கள், அறியாமை நீங்கி நல்லறிவு பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காக ‘உன்னையே நீ அறிவாய்’ என்று எல்லாரிடமும் எடுத்துக் கூறினார். அதனால் கேள்வி கேட்கும் எண்ணத்தை மக்கள் மனத்தில் உருவாக்கினார்.

சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன்; அவனுக்குச் சிந்திக்கும் பண்பு வளர வேண்டும் என்றார். ஆகவே, மக்கள் கூடும் இடங்களில் நம்பிக்கையோடு பேசினார். ‘ஏதென்ஸ் நகர மக்களே! உங்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் மாற்றவே நான் பேசிவருகிறேன். அதற்காக எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணாதீர்கள். இன்னும் என்னிடம் அறியாமை உள்ளது. அதை நான் போக்கவும் முயற்சி செய்கிறேன்‘ என்று பணிவோடு பேசினார்.

அவர் பேச்சு, மக்கள் மனத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது; மக்கள் விழிப்புணர்வு பெறத்தொடங்கினர். அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் எப்பொழுதும் இருந்தது. இதைப் பிடிக்காத சிலர், அவர்மீது பொய்யான குற்றம் சுமத்தினர். அதனால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு அவருடைய நண்பர் ஆலோசனை கூறினார். அதற்கு அவர், ‘அன்பு நண்பரே! ஒருவர் நமக்குத் தீமையே செய்தாலும், நம் கடமை அவருக்கு நன்மை செய்வது மட்டுமே. ஆகவே, அரசின் உத்தரவை எதிர்த்து தப்பிச் செல்வது தவறு’ என்று கூறினார். தண்டனை பெற்ற நிலையிலும் தம் கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார். அவர்தாம் உலகம் அறிந்த சிந்தனையாளர் மாமேதை சாக்ரடீஸ்.

பொருள் அறிவோம்

1. இராணுவம் - நாட்டைக் காக்கும் வீரர் படை
2. உத்தி - தந்திரம்
3. எண்ணம் - சிந்தனை
4. தாக்கம் - விளைவு
5. ஆலோசனை - வழிகாட்டுதல்
6. உத்தரவு - ஆணை

விடை காண்போம்

சாக்ரடீஸ் நண்பரின் கத்தியைக் கையாண்டுதான் சிறப்பாகப் போரிட்டார். எனவே பரிசை நண்பருக்கு வழங்கச் சொன்னார்.

சாக்ரடீஸ் கிரீஸ் நாட்டின் இராணுவத்தில் பணியாற்றினார்

மக்களின் மனத்தில் தெளிவினை ஏற்படுத்துவதே சாக்ரடீஸின் முதன்மையான நோக்கமாகும்.

சாக்ரடீஸ் மீது பொய்யான குற்றம் சுமத்தப்பட்டது

சாக்ரடீஸ் சிறையில் இருக்கும்போது, ‘ஒருவர் நமக்குத் தீமையே செய்தாலும், நம் கடமை அவருக்கு நன்மை செய்வது மட்டுமே’. ஆகவே, அரசின் உத்தரவை எதிர்த்து தப்பிச் செல்வது தவறு என்று கூறினார்.