உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.5 கேட்டல் கருத்தறிதல்

அறிவே ஆயுதம்

ஒரு குளத்தில் மீன்கள் மூன்று வாழ்ந்து வந்தன. முதல் மீனின் பெயர் வருமுன் காப்பான். இரண்டாவது மீனின் பெயர் வரும்போது காப்பான். மூன்றாவது மீனின் பெயர் ‘வந்தபின் காப்பான்’. ஒருநாள், அந்தக் குளத்தைச் சிலர் பார்வையிட்டனர். அதில் மீன்கள் இருப்பதைக் கண்டனர். நாளை வலையுடன் வந்து மீன் பிடிக்கலாம் என்று கூறியவாறே திரும்பிச் சென்றனர். அவர்கள் கூறியதை மீன்கள் கேட்டன. வருமுன் காப்பான், மற்ற மீன்களிடம் நாம் இப்போதே இங்கிருந்து வேறு நீர்நிலைக்குச் சென்றுவிடுவோம் என்று கூறியது. ஆனால், வரும்போது காப்பான், அப்படி ஒன்றும் அவசரமில்லை. அவர்கள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றது. வந்தபின் காப்போனோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைதியாக இருந்தது. மற்ற இரண்டும் தன் பேச்சைக் கேட்காததால், வருமுன் காப்பான் மட்டும் அங்கிருந்து வேறு நீர்நிலைக்குச் சென்றுவிட்டது. மறுநாள் அங்கு வந்தவர்கள் வலையைக் குளத்தினுள் வீசினர். மற்ற இரண்டு மீனும் வலையில் சிக்கிக்கொண்டன. அப்போது, வரும்போது காப்பான் வலையில் அசையாமல் இருந்தது. அதனைக் கண்டவர்கள் அஃது இறந்துவிட்டதெனக் கருதி, தரையில் தூக்கிப் போட்டனர். ஆனால், வரும்போது காப்போனோ மெதுவாக நழுவி, மீண்டும் குளத்தினுள் மறைந்துவிட்டது. பாவம். வந்தபின் காப்பான் மட்டும் தப்பிக்க வழிதெரியாமல் வலையில் சிக்கியது.

வினாக்கள்

வருமுன் காப்பான் ; வரும்போது காப்பான் ; வந்தபின் காப்பான்

குளத்தைப் பார்வையிட்டவர்கள், நாளை வலையுடன் வந்து மீன் பிடிக்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

வருமுன் காப்பான், மற்ற மீன்களிடம் நாம் இப்போதே இங்கிருந்து வேறு நீர்நிலைக்குச் சென்றுவிடுவோம் என்று கூறியது.

வரும்போது காப்பான் வலையில் அசையாமல் இருந்தது. அதனைக் கண்டவர்கள் அஃது இறந்துவிட்டதெனக் கருதி தரையில் தூக்கிப் போட்டனர். வரும்போது காப்போனோ மெதுவாக நழுவி, மீண்டும் குளத்தினுள் மறைந்துவிட்டது.

வருமுன் காப்பான் மீனின் செயல் பிடித்திருந்தது. எதையும் வருமுன்னே காப்பதே சிறந்தது. வந்தபின் அதைச் செயல்படுத்தினால், அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.