ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.2 படிப்போம்

ஷெல்லியும் பாரதியும்

உலகில் நாம் காணும் மனிதர்கள், பொருள்கள், இடங்கள் ஆகியவற்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டுப் பார்ப்பது மனித இயல்பு. இவ்வாறு ஒப்பிடும் தன்மை கலை, இலக்கியங்களிலும் உண்டு.

இலக்கியப் படைப்புகள் ஒப்பீடு

ஒரு படைப்பாளியின் படைப்புகளை மற்றொரு படைப்பாளியின் படைப்புகளோடு ஒப்பிட்டுக் காண்பது ஒப்பாய்வு ஆகும். படைப்புகளை ஒப்பிட்டு நிறைகுறைகளை எடுத்துக் கூறுதல் என்பது இதன் நோக்கம் அன்று. ஒவ்வொரு படைப்பின் சிறப்புக் கூறுகளையும் தனித்தன்மைகளையும் வெளிப்படுத்துவதே ஒப்பாய்வின் நோக்கமாகும். அதன் அடிப்படையில், நாம் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களான ஷெல்லி, பாரதி ஆகியோரின் படைப்புகளை ஒப்பிடலாம். இருவரின் படைப்புகள் காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்டவை. புனைவியல் (Romanticism) சார்ந்த கூறுகளில் இவ்விருவரும் கவனம் செலுத்தினர் என்பதை இவர்களின் படைப்புகள் வாயிலாக அறியலாம். ஷெல்லி மற்றும் பாரதியின் இலக்கியப் படைப்புகளில் காணப்படும் ஒற்றுமைகளை இப்பாடப்பகுதியில் காணலாம்.

ஷெல்லியின் மீது பாரதி கொண்டிருந்த பற்று

பாரதியார், ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார். இதனால், ஷெல்லிதாசன் என்று ஒரு புனைபெயரைச் சூடிக்கொண்டார். ஷெல்லியின் பெயரில் சங்கம் ஒன்றை நிறுவினார். அச்சங்கத்தில் இருந்தவர்களுக்கு ஷெல்லியின் கவிதைகளைப் படித்துக் காட்டி, அவர்களை இன்புறச் செய்தார்.

ஷெல்லியின் பிறப்பு

இங்கிலாந்து நாட்டில் வார்ன்ஹாம் என்னும் ஊரில் 1792 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் நாள் ஷெல்லி பிறந்தார். மக்கள் இவரைத் தனித்துவமும் முரண்பாடும் உடைய கவிஞன் எனப் புகழ்ந்தனர்.

ஷெல்லியின் படைப்புகள்

இவர் இளம் வயதிலேயே கவிதை எழுதும் திறன் பெற்று இருந்தார். சுதந்திரத்தின் பாட்டு (Ode to liberty), அராஜகத்தின் முகமூடி (The mask of Anarchy / The Masque of Anarchy), மேல் காற்று (Ode to a wesr wind), இங்கிலாந்து மக்களுக்கான பாட்டு (Songs to the men of England) போன்ற பல கவிதை நூல்களை இவர் இயற்றி உள்ளார்.

பாரதியின் பிறப்பு

இந்தியாவில் உள்ள தமிழகத்தில் எட்டயபுரம் என்னும் ஊரில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள் பாரதியார் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். இவரது கவிதை புனையும் திறனைப் பாராட்டி, எட்டயபுர மன்னர் இவருக்குப் பாரதி என்னும் பட்டத்தைக் கொடுத்தார்.

பாரதியின் படைப்புகள்

இளம் வயதிலேயே இவரும் கவிதைகள் எழுதும் திறன் பெற்றிருந்தார். பாப்பா பாட்டு, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போல்வன இவர் இயற்றிய கவிதை நூல்களாகும்.

மொழி ஆளுமைதிறன்

உலகமக்களின் நலனுக்காக இருவரும் உழைத்தனர். இதற்குத் தங்கள் தாய்மொழியைச் சிறந்த கருவியாகக் கையாண்டனர். சமூகச் சீர்கேடுகளையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் கவிதைகளாக எழுதி வெளியிட்டனர்.

கருத்து ஒற்றுமை

இக்கவிஞர்கள் நாடு, மொழி, பண்பாடு முதலியவற்றால் வேறுபட்டவர்கள். ஆயினும், சமுதாய முன்னேற்றச் சிந்தனைகளில் கருத்து ஒற்றுமை உடையவர்களாக இருந்துள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்குப் படித்து அறிவோம்.

மனிதநேயம்

இக்கவிஞர்கள், மக்களிடத்தில் மனிதநேயக் கருத்துகளைப் பரப்பினர். மனிதர்களை வெறுக்கக் கூடாது; மனிதர்களிடம் உள்ள தீய குணங்களை மட்டுமே வெறுக்க வேண்டும் என்றனர். பின்வரும் கவிதை அடிகளால் இக்கருத்தை அறியலாம்.

I hate thy want of truth and love.
How should I then hate there? (Shelley)
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே!
பகைவனுக்கு அருள்வாய் (பாரதியார்)

பெண் விடுதலை

பெண்களுக்குச் செய்த கொடுமைகளையும், அடிமைத்தனத்தையும் இக்கவிஞர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்களை அக்கொடுமைகளில் இருந்து மீட்கவும் எண்ணியுள்ளனர். இதனைப் பின்வரும் அடிகள் உணர்த்துகின்றன.

Can man be free if woman a slave? பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின் இந்த உலகினிலே வாழ்க்கை இல்லை (பாரதியார்)

சமத்துவப் பண்பு

இக்கவிஞர்கள், ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் குறித்தும் சிந்தித்துள்ளனர். தங்களை மக்களிடத்தில் ஏழைகளின் நண்பர்களாகவே அறிமுகம் செய்துகொண்டனர். அனைத்து மக்களையும் சமமாக மதிக்கவேண்டும். அனைவரும் சமமாக வாழ வேண்டும். அனைவருக்கும் அனைத்து வளங்களும் உரிமைகளும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இவற்றைப் பின்வரு அடிகள் புலப்படுத்துகின்றன

I am the friend of the unfriended poor
Let me not madly stain their righteous
Cause ignore (Shelley)
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவுகொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே (பாரதியார்)

விடுதலை உணர்வு

அடிமைகளாக இருந்த மக்களிடத்தில் இவர்கள் விடுதலை உணர்வை ஊட்டினர். அவர்களை அடிமை வாழ்விலிருந்து மீண்டு எழச் செய்தனர். கீழ்க்காணும் அடிகளால் இவர்களின் விடுதலை வேட்கையை உணரலாம்.

What is freedom? – ye can tell
That which slavery is, too well,
For its very name has grown (Shelley)
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் (பாரதியார்)

இக்கவிஞர்கள், மேற்கண்டவாறு சமூகத்தை நல்வழிப்படுத்தி உள்ளனர். அவர்கள் இயற்றிய கவிதைகளைப் படிப்பதன் மூலம் நாம் அவர்களது உயர்ந்த சிந்தனைகளை அறிய இயலும்.

பொருள் அறிவோம்

1. சங்கம் - அமைப்பு
2. பரப்பினர் - அறிவித்தனர்
3. எதிர்த்தனர் - மறுத்தனர்
4. வேட்கை - விருப்பம்
5. ஒப்பாய்வு - ஒத்துப் பார்த்தல்
6. வியாதி - நோய்

ஷெல்லியும் பாரதியும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் குறித்துச் சிந்தித்தனர். இவர்கள் மக்களிடத்தில் ஏழைகளின் நண்பர்களாகவே அறிமுகம் செய்துகொண்டனர். அனைத்து மக்களையும் சமமாக மதிக்க வேண்டும். அனைவரும் சமமாக வாழ வேண்டும். அனைவருக்கும் அனைத்து வளங்களும் உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று இவ்விரு கவிஞர்களும் சமத்துவப்பண்பு குறித்துத் தம் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஷெல்லி, சுதந்திரத்தின் பாட்டு (Ode to liberty), அராஜகத்தின் முகமூடி ( The mask of Anarchy/ The Masque of Anarchy), மேல்காற்று (Ode to a west wind), இங்கிலாந்து மக்களுக்கான பாட்டு (Songs to the men of England) போன்ற பல கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதி, பாப்பா பாட்டு, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதியார், ஆங்கிலக் கவிஞரான ஷெல்லியின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தார். இவர், ஷெல்லிதாசன் என்று ஒரு புனைபெயரைச் சூடி, ஷெல்லியின் பெயரில் சங்கம் ஒன்றை நிறுவி ஷெல்லியின் மீது வைத்திருந்த தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.

பாரதியும் ஷெல்லியும் நாடு, மொழி, பண்பாடு முதலியவற்றால் வேறுபட்டவர்கள். ஆயினும், மனித நேயம், பெண் விடுதலை போன்ற சமுதாய முன்னேற்றச் சிந்தனைகளில் கருத்து ஒற்றுமை உடையவர்களாக இருந்துள்ளனர்.