ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.3 தெரிந்து கொள்வோம்

வினையெச்சம்

வினையைக்கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம்.

அப்பா : சுற்றுலா எப்படி இருந்தது?
முல்லை : பயனுடையதாக இருந்தது அப்பா.
அப்பா : என்னவெல்லாம் பார்த்தாய்?
முல்லை : மாமல்லபுரத்தின் சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு ஒரே கல்லில் செதுக்கப்பெற்ற சிற்பங்களைப் பார்த்து வியந்தேன்.
அப்பா : பிறகு?
முல்லை : கடற்கரைக் கோவிலைப் பார்க்கச் சென்றேன்.
அப்பா : அப்படியா?
முல்லை : ஆம், அப்பா. பின்னர் கடற்கரை மணலில் நாங்கள் மெல்ல நடந்தோம். அங்குக் கடல்நீரில் கால் நனைத்து விளையாடினோம்.

உரையாடலில் வந்துள்ள கண்டு மகிழ்ந்தேன், பார்த்து வியந்தேன், பார்க்கச் சென்றேன், மெல்ல நடந்தோம், நனைத்து விளையாடினோம் ஆகிய சொற்கள் வினையெச்சங்கள் ஆகும்.

தெரிநிலை வினையெச்சம்


எழிலன் நூலகத்திற்குப் படிக்கச் சென்றான்.

குறிப்பு வினையெச்சம்


பூங்காவில் தாத்தா மெல்ல நடந்தார்.

எதிர்மறை வினையெச்சம்


அலுவலகத்திற்கு நேரமானதால், இராமு உண்ணாமல் சென்றான்.