ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.2 படிப்போம்

உறவின் மேன்மை

28, வள்ளலார் தெரு,
சென்னை – 1.

அன்புள்ள செழியா,

நானும் அப்பாவும் இங்கு நலமாக உள்ளோம். நீயும் மருமகளும் நலமா என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

அக்காவின் குழந்தைகளுக்குக் காதணி விழா நடைபெற உள்ளது. தாய்மாமனாகிய நீ முன்னின்று விழாவினை நடத்தவேண்டும். உன் மடியில் அக்காவின் குழந்தைகளை அமர்த்தி அவர்களுக்குக் காதணி அணிவிக்கவேண்டும்.

இது வெறும் விழாவோ சடங்கோ அன்று. இது நமது உறவுகளை வலுப்படுத்தவும் இளம்தலைமுறையினர் நமது பண்பாட்டை உணர்ந்துகொள்ளவும் நடத்தப்படும் விழாவாகும்.

உறவுகளோடு மனம்விட்டுப் பேசவும் இன்பதுன்பங்களைப் பரிமாறிக்கொள்ளவும் குடும்ப விழாக்கள் வாய்ப்பைத் தருகின்றன. உறவுமுறைப் பெயர்களை அறிமுகம் செய்கின்றன. வயதில் மூத்தோர் கூறும் அனுபவமிக்க நிகழ்வுகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. குழந்தைகள் ஒன்றுக்கொன்று விளையாடி மகிழவும் உறவுகளின் மேன்மையைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பை உருவாக்குகின்றன.

ஆகையால், இந்தவிழா நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் என நம்புகிறோம். எனவே, அமெரிக்காவிலிருந்து ஒரு மாதமாவது விடுப்பு எடுத்துக்கொண்டு நீ இங்கு வரவேண்டும். உன் மகனோடு நாங்கள் கொஞ்சி விளையாடவேண்டும். இங்கிருக்கும் வயல்வரப்பு, பசுஞ்சோலை, ஆற்றங்கரை, சந்தை என அனைத்து இடங்களையும் உன் மகனுக்குச் சுற்றிக்காட்டுகிறோம். மகிழுந்தில் பயணம் செய்யும் உன் மகனுக்கு மண்தரையில் மாட்டுவண்டிப் பயணத்தை இனிமையாக்குகிறோம். இங்கிருக்கும் உறவுகளோடு பாண்டியாட்டம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் ஆடி மகிழட்டும், அன்பும் பண்பும் மிக்க அறிவுரைக்கதைகளைத் தாத்தாவிடமும் இனிமையான குழந்தைப்பாடல்களைப் பாட்டியிடமும் கேட்டு மகிழட்டும். புதிய சூழல் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், காதணி விழாவிற்கு மறக்காமல் உன் குடும்பத்துடன் இங்கு வா. உன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உறைமேல் முகவரி
பெறுநர்
ஜெ.செழியன்,,
65, கிரான்பரி சாலை,
நியூ ஜெர்ஸி – 08512
65, கிரான்பரி சாலை,
அமெரிக்கா.

இப்படிக்கு,
உன் அன்புள்ள அம்மா,
பாரதி.

காதணிக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்கள்
கடுக்கன்
குண்டலம்
தோடு
பொன்தோடு
மணித்தோடு
தொங்கல்
மாட்டல்
அலுக்குத்து
செவிப்பூ

பொருள் அறிவோம்

1. மேன்மை - மகத்துவம்
2. ஆவல் - விருப்பம்
3. காதணி விழா - குழந்தைகளுக்குக் காது குத்தும் விழா
4. மூத்தோர் - முதியவர்
5. சடங்கு - வழிவழியாகப் பின்பற்றப்படும் நிகழ்வு

விடை காண்போம்

கடிதத்தினை அம்மா பாரதி, மகன் செழியனுக்கு எழுதியுள்ளார்.

அம்மா, அப்பா, அக்கா, தாய்மாமன், மகன், மருமகள், தாத்தா, பாட்டி, பேரன்.

குடும்ப விழாக்கள், உறவுகளை வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினர் நமது பண்பாட்டை உணர்ந்து கொள்ளவும் நடத்தப்படுகின்றன. மேலும் உறவுகளோடு மனம் விட்டுப் பேசி இன்பதுன்பங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பைக் குடும்ப விழாக்கள் தருகின்றன.

செழியனின் அம்மா, தன் பேரனுக்கு வயல்வரப்பு, பசுஞ்சோலை, ஆற்றங்கரை, சந்தை என அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்டுவதாகக் கூறினார்.

வயல்வரப்பு, பசுஞ்சோலை, ஆற்றங்கரை, சந்தை. மண்தரையில் மாட்டுவண்டிப் பயணம், உறவுகளோடு பாண்டியாட்டம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் ஆடி மகிழ்தல், உறவினர்களோடு மனம்விட்டுப் பேசுதல் என இயற்கையோடு இணைந்த வாழ்வாகக் கிராமத்துச்சூழல் இருக்கும் எனக் கடிதம் குறிப்பிடுகிறது.