ழகரம்
(முதல் பருவம்)
சூழலியல் ஆர்வலர் திரு.அருளனுடன் ஒரு நேர்காணல். நிகழ்த்துபவர்கள் உதயா: கதிர்.
| உதயா | : | வணக்கம். நாங்கள் பள்ளி மாணவர்கள். இன்று ஏப்ரல் 22 புவிநாள்; உங்களோடு சூழலியல் குறித்துப் பேசவந்தோம். | |
| அருளன் | : | வணக்கம். உங்களை மாதிரி இளைஞர்கள் சூழலியல் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. இந்தக் காலத்தில் இது தேவை. | |
| உதயா | : | புவிநாளைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? | |
| அருளன் | : | நிலம், நீர், காற்று எல்லாம் இயற்கை நமக்கு அளித்த கொடைகள். இவற்றை மாசடையாமல் பாதுகாப்பதே நமது கடமை. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே புவிநாள். | |
| கதிர் | : | நிலம், நீர், காற்று எல்லாம் எவ்வாறு மாசடைகின்றன? | |
| அருளன் | : | எல்லாக் கழிவுகளையும் கொட்டி மண்வளத்தைக் கெடுக்கிறோம். நம் தேவைகளுக்காக நீர்நிலைகள், காடுகள் முதலியவற்றை ஆக்கிரமிப்பு செய்கிறோம். குப்பைகள், நெகிழிப்பைகள் போன்றவற்றை எரிக்கிறோம். மிகுதியான வெடிபொருள்களை வெடிக்கிறோம். புகை வடிகட்டி இல்லாமல், தொழிற்சாலைகளை இயக்குகிறோம். பொதுப் தனிமனிதரின் மிகுதியான ஊர்தி பயன்பாட்டால் காற்று மாசுபடுகிறது. இதனால், பூமியின் வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. | |
| உதயா | : | புவி வெப்பம் அடைவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன? | |
| அருளன் | : | ஒன்றா? இரண்டா? நிறைய பாதிப்புகளைச் சந்திக்கிறோம். காலநிலை மாற்றம், பெருமழை, வறட்சி, காட்டுத்தீ இவையெல்லாம் உருவாகின்றன. காலநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுகின்றன. உருகிய பனியானது, ஆறுகளின் வழியே கடலில் அதிக அளவில் சேர்கிறது. கடல் மட்டம் உயர்கிறது. இதனால், கரையோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும். | |
| உதயா | : | நாம் அன்றாட வாழ்வில் குளிர்பதனப் பெட்டியைப் பயன்படுத்துவதால் நன்மை விளையுமா? | |
| அருளன் | : | நன்மை இல்லை. அதிலிருந்து குளோரோ புளோரோ கார்பன் என்னும் நச்சுக்காற்று வெளிவருகிறது. இந்த நச்சுக் காற்று ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. இதனால், உயிரினங்களுக்குத் தீங்கு ஏற்படுகிறது. | |
| கதிர் | : | இந்த இடர்ப்பாட்டிலிருந்து பூமியை எப்படிக் காப்பாற்றலாம்? | |
| அருளன் | : | பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நாம் பார்த்துக்கொண்டாலே போதும். அப்படி இருந்தால், பூமி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இதற்கு, உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் | |
| உதயா | : | அப்படியா? | |
| அருளன் | : | ஆமாம். மேலும், காற்றில் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்சைடு) கலப்பதைக் குறைக்கவேண்டும். நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இயற்கை மூலங்களிலிருந்து மின்உற்பத்தி செய்யவேண்டும். | |
| உதயா | : | நன்கு புரிந்துகொண்டோம். | |
| கதிர் | : | மரங்களை வளர்ப்பதால் புவி வெப்பமயமாதல் குறையுமா? | |
| அருளன் | : | ஆம். கட்டாயம் குறையும். தாவரங்களும் நம்மைப் போல் சுவாசிக்கின்றன. கரியமிலவாயுவை உள்ளே இழுத்துக்கொண்டு உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) வெளிவிடுகின்றன. எனவே, நாம் அதிமாக மரங்களை வளர்க்க வேண்டும். | |
| இருவரும் | : | புவியை எவ்வாறு காப்பது என்பது பற்றி நன்றாக எடுத்துச் சொன்னீர்கள். அவை அனைத்தும் எங்களுக்குப் பயனுள்ளவையாக இருந்தன. இவற்றை நாங்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களையும் பின்பற்றச் செய்வோம். மிக்க நன்றி. | |
| அருளன் | : | நல்லது. மீண்டும் சந்திப்போம். |
| 1. | தொந்தரவு | - | துன்பம் | ||
| 2. | புவி | - | பூமி | ||
| 3. | ஆக்கிரமிப்பு | - | கையகப்படுத்துதல் | ||
| 4. | பாதிப்பு | - | விளைவு |
கழிவுகளைக் கொட்டி மண்வளத்தைக் கெடுத்தல், நீர்நிலைகள், காடுகள் முதலியவற்றை ஆக்கிரமிப்பு செய்தல், குப்பைகள், நெகிழிப்பைகள் போன்றவற்றை எரித்தல், மிகுதியான வெடிபொருள்களை வெடித்தல், புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், மிகுதியான ஊர்தியைப் பயன்படுத்துதல் போன்றன மனிதர்களால் புவிக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகும்.
மரங்கள் கரியமிலவாயுவை (கார்பன்டை ஆக்ஸைடு) உள்ளே இழுத்துக்கொண்டு உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) வெளிவிடுகின்றன.
புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீங்குகளாவன: காலநிலை மாற்றம், பெருமழை, வறட்சி, காட்டுத்தீ என இவையெல்லாம் புவி வெப்பமடைதலால் உருவாகின்றன. மேலும் காலநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுகின்றன. உருகிய பனியானது, ஆறுகளின் வழியே கடலில் அதிக அளவில் சேர்கிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து கரையோர நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படுகிறது.
புவிநாள் ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்படுகிறது.
குப்பைகள், நெகிழிப்பைகள் போன்றவற்றை எரித்தல், வெடிபொருள்களை வெடித்தல், புகை வடிகட்டி இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், மிகுதியான ஊர்தியைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் காற்று மாசுபடுகிறது.