ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.7 செந்தமிழ்ச்செல்வம்

தனிப்பாடல்

கற்றதுகைம் மண்ணளவு கல்லாத(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற வேண்டா புலவீர்
எறும்புந்தன் கையால்எண் சாண்

- (பாடல் – 39)

- ஔவையார்

(கலைமடந்தை – கலைமகள்; ஓதுகிறாள் – படிக்கிறாள்; மெத்த – மிகுதியாக; பந்தயம் – போட்டி; புலவீர் – புலவர்களே; சாண் – நீளத்தை அளவிடும் அளவு)

பொருள்

தான் இதுவரை படித்தது கைம்மண்ணளவே; கல்லாதது உலகளவு என நினைத்துக் கலைமகளே இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆதலால், புலவர்களே! மிகுதியாகப் படித்துவிட்டோம் என்னும் செருக்குடன் வீண்பேச்சு பேசாதீர்கள். சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் அளவுடையதே ஆகும்.

பழமொழி

பொறுமை கடலினும் பெரிது.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
  2. புவி மாசுபடுவதைத் தடுப்போம்.
  3. காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. காலநிலை மாற்றம்
  2. இயற்கை வளம்
  3. காடுகள் விழிப்புணர்வு