ழகரம்
(முதல் பருவம்)
நாம் வாழும் பூமி, பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு உறைவிடம். இப்பூமியைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது நம் கடமை. இதனையே இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். இவர்கள், இயற்கையை விரும்புபவர்கள்; இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள். இயற்கையை நேசிப்பவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி இங்கு அறிந்துகொள்வோம்.
”இயற்கைத் தாத்தா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர், நம்மாழ்வார். இவர், தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தார். இயற்கையின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். வேளாண்மையில் இயற்கை முறைக்கு முதன்மை அளித்தார். இந்திய மரபுவிதைகளை மீட்டெடுத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். வேம்பு, மஞ்சள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களுக்குக் காப்புரிமை பெற்றுக்கொடுத்தார். குடும்பம், லிசா, வானகம் போன்ற சூழலியல் அமைப்புகளை உருவாக்கினார். இயற்கை, மரபு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். இவர், சுற்றுச்சூழல், வேளாண்மை தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ளார். |
|
|
கென்ய நாட்டைச் சேர்ந்தவர், வான்காரி மாத்தாய். இவர், ”பசுமைப் பட்டை” இயக்கத்தைத் தொடங்கி, ஆப்பிரிக்கக் காடுகளை மீட்டெடுத்தார். இவரை ’மரங்களின் தாய்’ என அழைத்தனர். காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை ஒழிக்க, ஓர் அமைப்பைத் தொடங்கினார். பெண்களின் உதவியுடன் முப்பது ஆண்டில், மூன்றுகோடி மரம் நட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்துவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் இவரே ஆவார். |
அமெரிக்கக் கடல் உயிரியலாளர்; எழுத்தாளர்; சூழலியலாளர் எனப் பன்முகம் கொண்டவர், ரேச்சல் லூயிஸ் கார்சன். இவர் எழுதிய ‘மெளன வசந்தம்’ என்னும் நூல் மிகவும் புகழ்பெற்றது. இந்நூல், அமெரிக்காவின் தேசிய பூச்சிக்கொல்லிக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏராளமான மக்களைச் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக மாற்றிய பெருமை இந்நூலுக்கு உண்டு. இந்நூல் பூச்சிக்கொல்லி வேதிப் பொருள்களுக்குத் தடைவிதிக்க வழிவகுத்தது. இவர் பல நூல்களை எழுதியுள்ளார். Under the Sea Wind , The Sea Around Us, The Edge of the Sea என்னும் நூல்கள் கடற்கரையிலிருந்து கடலின் ஆழம்வரை வாழும் உயிரினங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களாகும். இவருக்கு அமெரிக்காவின் ’சுதந்திர விருது’ வழங்கப்பட்டுள்ளது. |
|
|
ஷிகோகு என்ற ஜப்பானியத் தீவைச் சேர்ந்தவர், மசானபு ஃபுகோகா. பழங்குடியினரின் வேளாண் முறையை வலியுறுத்திய இவர், இயற்கை வேளாண்மைக்கு இயந்திரங்கள், வேதியியல் பொருள்கள் முதலியன தேவையில்லை என்றார். இந்த வேளாண்முறைக்கு “இயற்கை உழவு முறை” எனப் பெயரிட்டார். இவர் எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்னும் நூல் உலகப் புகழ்பெற்றது. இவருக்கு ஆசியாவின் நோபல் பரிசான ’இராமன் மகசேசே விருது’ , ’பூமிசபை விருது’ ஆகியன வழங்கப்பட்டுள்ளன. |
சுற்றுச்சூழல் வளங்கள், மக்களின் முறையற்ற செயல்பாடுகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல சீர்கேடுகள் ஏற்படுகின்றன. அவற்றைச் சரிசெய்ய, சூழலியலாளர்கள் தம் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளனர். நாமும் அவர்களைப்போல இயற்கையை நேசிப்போம். சூழலியல் கேடுகளிலிருந்து இயற்கையை மீட்டெடுப்போம்.
| 1. | உறைவிடம் | - | இருப்பிடம் | ||
| 2. | விவசாயம் | - | வேளாண்மை | ||
| 3. | வேம்பு | - | வேப்பமரம் | ||
| 4. | மரபு விதைகள் | - | மண்ணிற்கு ஏற்ற நாட்டு விதைகள் | ||
| 5. | தீவு | - | நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி | ||
| 6. | வனம் | - | காடு | ||
| 7. | தாக்கம் | - | பாதிப்பு |
இயந்திரங்கள், வேதியியல் பொருள்கள் போன்றவற்றின் உதவியில்லாமல் இயற்கையாகச் செய்யப்படும் வேளாண்முறையை ’இயற்கை உழவு முறை’ என்பர்.
நம்மாழ்வார், வேம்பு, மஞ்சள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களுக்குக் காப்புரிமை பெற்றுக்கொடுத்தார்.
வான்காரி மாத்தாய், “பசுமைப் பட்டை” என்ற இயக்கத்தைத் தொடங்கி, ஆப்பிரிக்க காடுகளை மீட்டெடுத்தார். ‘மரங்களின் தாய்’ என்று அழைக்கப்பட்ட இவர் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட வறுமையை ஒழிக்க, ஓர் அமைப்பைத் தொடங்கி பெண்களின் உதவியுடன் முப்பது ஆண்டில், மூன்று கோடி மரம் நட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்துவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.
ரேச்சல் லூயிஸ் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ என்னும் நூல் மிகவும் புகழ்பெற்றது. இந்நூல், அமெரிக்காவின் தேசிய பூச்சிக்கொல்லிக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏராளமான மக்களைச் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக மாற்றிய பெருமை இந்நூலுக்கு உண்டு. இந்நூல் பூச்சிக்கொல்லி வேதிப் பொருள்களுக்குத் தடைவிதிக்க வழிவகுத்தது.
நம்மாழ்வார், வேளாண்மையில் இயற்கை முறைக்கு முதன்மை அளித்தவர். இந்திய மரபுவிதைகளை மீட்டெடுத்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். குடும்பம், லிசா, வானகம் போன்ற சூழலியல் அமைப்புகளை உருவாக்கி இயற்கை, மரபு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்.
ராஜேந்திர சிங், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை சார்ந்த முயற்சிகளில் முன்னோடியாக இருந்தார். நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், ”இந்தியாவின் நீர்மனிதன்” என்று அழைக்கப்பட்டார்.