ழகரம்
(முதல் பருவம்)
தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று நன்னூல். இந்நூலிலுள்ள இலக்கணக் கருத்துகள், பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களாக உள்ளன. இந்நூலானாது, ஆசிரியர், மாணவர் இயல்புகள் பற்றியும் கூறியுள்ளது. ஆசிரியரானவர் கொள்ளவேண்டிய பண்புகள், தள்ளவேண்டிய பண்புகள் எவையெவை என்பதை இந்நூல் வாயிலாக அறிந்துகொள்வோம்.
ஒழுக்கம், மேன்மை, பல நூல்களைக் கற்றறிந்த தெளிவு, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்கும் ஆற்றல், உலகியல் அறிவு, உயர்குணம் ஆகிய பண்புகள் ஆசிரியருக்கு உரியன.
ஆசிரியருக்கு உரிய பண்புகளைப் பட்டியலிட்ட நன்னூல் நிலம், மலை, நிறைகோல், பூ ஆகியவற்றின் பண்புகளோடு ஆசிரியரின் பண்புகளை ஒப்பிட்டு மேலும் தெளிவுபடுத்துகிறது. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
நல்ல நிலமானது பிறரால் அறியப்படாத பெருமையும் வலிமையும் பொறுமையும் கொண்டிருக்கும். உழவர் செய்யும் முயற்சிக்கேற்ப அவர்க்குப் பயன் தரும்.
அதுபோல, நல்ல ஆசிரியர் என்பவர், பிறரால் அறியப்படாத கல்வியறிவு, தன்னைப் பிறர் பேச்சாற்றலில் வெல்ல முடியாத வலிமை, மாணவர் இகழ்ந்ததாலும் அதனைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு, மாணவர் செய்யும் முயற்சிக்கு ஏற்பப் பயன் தருதல் ஆகிய பண்புகளை உடையவராய் இருப்பார்.
நல்ல நிலமானது பிறரால் அறியப்படாத பெருமையும் வலிமையும் பொறுமையும் கொண்டிருக்கும். உழவர் செய்யும் முயற்சிக்கேற்ப அவர்க்குப் பயன் தரும்.
அதுபோல, நல்ல ஆசிரியர் என்பவர், பிறரால் அறியப்படாத கல்வியறிவு, தன்னைப் பிறர் பேச்சாற்றலில் வெல்ல முடியாத வலிமை, மாணவர் இகழ்ந்ததாலும் அதனைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு, மாணவர் செய்யும் முயற்சிக்கு ஏற்பப் பயன் தருதல் ஆகிய பண்புகளை உடையவராய் இருப்பார்.
மலையை யாரும் எளிதில் அளக்கமுடியாது. அசைக்கவும் முடியாது. நெடுந்தொலைவில் உள்ளோரும் காணக்கூடிய உயரமும், மழை பெய்யாது வறண்ட காலத்திலும் நீர்வளம் தரும் கொடையும் மலைக்குரிய இயல்புகள்.
அதுபோல, ஆசிரியர் என்பவர் அளவிலாத நூலறிவும், எப்படிப்பட்ட புலமையுடையவராலும் அசைக்க முடியாத கல்வியறிவும் பெற்றிருப்பார். பொருளற்ற காலத்திலும் மாணவர்க்குக் கல்விப் பொருளைக் கொடுக்கும் கொடைப்பண்பும் அவரிடம் இருக்கும்.
நிறைகோலானது, தான் நிறுக்கும் பொருளின் எடையைத் துல்லியமாகக்காட்டும். இரு தட்டுக்கும் இடையே அளவுகோல் நடுவுநிலையுடன் நிற்கும்.
அதுபோல, தம்மிடம் கேட்பவருக்கு ஐயம் தீர விளக்கம் அளித்தல், இருவர் மாறுபட்டு நிற்கும்போது அவ்விருவருக்கும் இடையே நின்று உண்மையை வெளிப்படுத்தல் ஆகியன ஆசிரியருக்குரிய பண்புகள்.
மங்கல நிகழ்ச்சிகளில் இடம்பிடித்தல், அழகுபடுத்தும் செயல்களில் தான் முதன்மையாக இருத்தல், யாவரும் மகிழ்ந்து தன்னைச் சூடிக்கொள்ள வைத்தல், மென்மைத்தன்மையோடும், மலரும் காலத்திலே பொலிவோடும் இருத்தல் ஆகிய பண்புகள் பூவிற்கு உரியன.
அதுபோல, நற்செயல்களில் பங்கு பெறுதல், தான் இல்லாமல் ஒரு செயல் சிறப்பாகாது என்பதை உணர்தல், கண்டோர் தன்னிடம் மகிழ்ந்து உரையாடுதல், மெல்லிய குணம் கொண்டு, பாடம் கற்பிக்கும் காலத்தில் முகமலர்ச்சி கொண்டிருத்தல் ஆகிய யாவும் நல்ல ஆசிரியருக்கு உரிய தகுதிகளாகும்.
இதுவரை ஆசிரியருக்குரிய தகுதிகளைப் படித்தோம். இனி, ஆசிரியர் தள்ள வேண்டிய இயல்புகளைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
பாடம் சொல்லும் குணமின்மை, இழிவான குணம் இருத்தல், பிறர் தம்மைவிட உயர்கல்வி பெற்றிருப்பின் பொறாமை கொள்ளுதல், பொருள்களின் மீது அளவுக்கதிகமான ஆசை கொள்ளுதல், உண்மையை மறைத்துப் பொய் கூறி வஞ்சித்தல், கேட்போருக்கு அச்சம் உண்டாகும்படி பேசுதல், மாறுபாடான பண்புகளைக் கொண்டிருத்தல் ஆகியவை ஆசிரியர் தள்ள வேண்டிய இயல்புகள் ஆகும்.
மேலும் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு ஆகியவற்றின் குணங்களைக் கொண்டிருப்பவரும் நல்ல ஆசிரியர் அல்லர். கழற்குடம் முதலானவற்றின் பண்புகள் என்ன என்பதைப்பற்றி நன்னூல்வழி அறிவோம்.
கழற்குடமானது, தன்னுள்ளே போடப்பட்ட காய்கள் முன்பின்னாகப் பிறழ்ந்துபோகும்படி கொடுக்கும் தன்மையுடையது.
அதுபோல, தமக்கும் கற்பித்த முறையினாலன்றி முன் கற்பிக்கப்பட்டவற்றையும் பின் கற்பிக்கப்பட்டவற்றையும் அம்முறை பிறழ்ந்துபோகத் தாம் கற்றதை எடுத்துக்கூறும் தன்மையுடைவர் ஆசிரியராகத் தகுதி இல்லாதவர்.
தானே தரும் இயல்புடையது, மடல் விரிந்த பனை. ஆனால், தன்னை நாடி வந்து பறிப்பவர்க்குப் பழங்களைக் கொடுக்காது.
அதுபோல, தாம் விரும்பினால் மட்டுமே பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் இயல்புகொண்டு, தம்மை நாடி வருபவர்க்குக் கற்றுக்கொடுக்க முடியாத தன்மையுடையவர் ஆசிரியர் ஆகமாட்டார்.
பருத்திக்குண்டிகையானது, பஞ்சைச் சிறிது சிறிதாக அடைக்கும்போதும் துன்பத்துடன் ஏற்றுக்கொள்ளும். பிறர் எடுக்க நினைக்கும்போதும் எளிதில் கொடுக்க இயலாத குணம் கொண்டிருக்கும்.
அதுபோலக் கல்வியைக் கற்கும்போதும் வருந்திக்கொண்டே கற்றுக்கொள்ளுதல், அக்கல்வியைப் பிறர்க்கு எளிதில் எடுத்துச்சொல்லாதிருத்தல் ஆகிய குற்றங்களைக் கொண்டவரும் நல்ல ஆசிரியருக்குரிய தகுதியில்லாதவர்.
வளைந்த தென்னையானது தனக்கு நீர் முதலிய உதவிகளைச் செய்து, தன்னை வளர்த்தவர்க்குப் பயன் தராமல் பிறர்க்குத் தன் காய்களைத் தந்துநிற்கும்.
அதுபோல, பொருள் கொடுத்தல் முதலிய பலவகை உதவிகளையும் செய்து தம்மை வழிபடும் மாணவர்க்கு உதவாமல், அத்தகைய பண்பு இல்லாத மாணவர்க்குத் தாம் கற்ற கல்விப் பொருளைத் தந்து உதவும் ஆசிரியர் குற்றமுடையவர். அவர் ஆசிரியருக்கு உரிய தகுதியில்லாதவர் ஆவார் என்று நன்னூல் விரிவாகக் கூறுகிறது.
ஆசிரியர் தமக்கு ஏற்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டாத பண்புகளைத் தள்ளவேண்டும். ஏனெனில், மாணவர்கள் ஒவ்வொருவரும் தமது அறிவு, கல்வி, ஒழுக்கம், பெருமை, நடை, உடை, பாவனை ஆகியவற்றை ஆசிரியரிடமிருந்தே பெறுகிறார்கள். ஆசிரியர்களுக்கு உரிய பண்புநலன்கள் எக்காலத்திற்கும் ஏற்றவை.
| 1. | மேன்மை | - | சிறப்பு | ||
| 2. | உலகியல் அறிவு | - | அனுபவ அறிவு | ||
| 3. | தொலைவு | - | தூரம் | ||
| 4. | நிறைகோல் | - | தராசு | ||
| 5. | ஐயம் | - | தெளிவின்மை | ||
| 6. | பொலிவு | - | அழகு | ||
| 7. | வஞ்சித்தல் | - | ஏமாற்றுதல் | ||
| 8. | பிறழ்தல் | - | மாறுபடுதல் | ||
| 9. | முடத்தெங்கு | - | வளைந்த தென்னை மரம் | ||
| 10. | குணம் | - | பண்பு |
நன்னூல்
சிறந்த குடிப்பிறப்பு, ஒழுக்கம், மேன்மை, பல நூல்களைக் கற்றறிந்த தெளிவு, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைக்கும் ஆற்றல், உலகியல் அறிவு, உயர்குணம் ஆகிய பண்புகள் ஆசிரியருக்குரிய தகுதிகளாக நன்னூல் குறிப்பிடுகிறது.
நல்ல நிலமானது பிறரால் அறியப்படாத பெருமையும் வலிமையும் பொறுமையும் கொண்டிருக்கும். உழவர் செய்யும் முயற்சிக்கேற்ப அவருக்குப் பயன் தரும். அதுபோல, நல்ல ஆசிரியர் என்பவர், பிறரால் அறியப்படாத கல்வியறிவு, தன்னைப் பிறர் பேச்சாற்றலில் வெல்ல முடியாத வலிமை, மாணவர் இகழ்ந்தாலும் அதனைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு, மாணவர் செய்யும் முயற்சிக்கு ஏற்பப் பயன் தருதல் ஆகிய பண்புகளை உடையவராய் இருப்பர்.
நிறைகோலானது, தான் நிறுக்கும் பொருளின் எடையைத் துல்லியமாகக்காட்டும். இரு தட்டுக்கும் இடையே அளவுகோல் நடுநிலையுடன் நிற்கும். அதுபோல, தம்மிடம் கேட்பவருக்கு ஐயம் தீர விளக்கம் அளித்தல், இருவர் மாறுபட்டு நிற்கும்போது அவ்விருவருக்கும் இடையே நின்று உண்மையை வெளிப்படுத்தல் ஆகியன ஆசிரியருக்குரிய பண்புகள்.
5. பாடம் சொல்லும் குணமின்மை, இழிவான குணம் இருத்தல், பிறர் தம்மைவிட உயர்கல்வி பெற்றிருப்பின் பொறாமை கொள்ளுதல், பொருள்களின் மீது அளவுக்கதிகமான ஆசை கொள்ளுதல், உண்மையை மறைத்துப் பொய் கூறி வஞ்சித்தல், கேட்போருக்கு அச்சம் உண்டாகும்படி பேசுதல், மாறுபாடான பண்புகளைக் கொண்டிருத்தல் ஆகியவை ஆசிரியர் ஆகாதவருக்குரிய இயல்புகளாக நன்னூல் குறிப்பிடுகிறது.
6. கழற்குடமானது, தன்னுள்ளே போடப்பட்ட காய்கள் முன்பின்னாகப் பிறழ்ந்துபோகும்படி கொடுக்கும் தன்மையுடையது. அதுபோல, தமக்கும் கற்பித்த முறையினாலன்றி முன் கற்பிக்கப்பட்டவற்றையும் பின் கற்பிக்கப்பட்டவற்றையும் அம்முறை பிறழ்ந்துபோகத் தாம் கற்றதை எடுத்துக்கூறும் தன்மையுடையவர் ஆசிரியராகத் தகுதி இல்லாதவர்.