ழகரம்
(முதல் பருவம்)
கல்வி குறித்த சிந்தனைகள் நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. மக்களுக்கு உகந்த கல்விமுறை என ஒவ்வொரு கல்வியாளரும் சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். அவர்களுள் சிலருடைய கல்விச் சிந்தனைகள் இங்கு இடம்பெறுகின்றன.
உலகப் புகழ்பெற்ற கிரேக்கத் தத்துவ ஞானி பிளாட்டோ. இவர் ஏதென்ஸ் நகரில் ஒரு கல்விக்கழகத்தை நிறுவினார். இதுவே உலகின் தொன்மையான பல்கலைக்கழகமாகக் கருதப்படுகிறது. அங்கு இளைஞர்களுக்கு அரசியல், அறிவியல், கணிதம், வானியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பிளாட்டோ தமது கல்விக் கருத்துகளைத் தொகுத்துக் ‘குடியரசு’, ‘சட்டங்கள்‘ என்னும் நூல்களாக வெளியிட்டார். |
|
|
ஜீன் ஜேக்கஸ் ரூசோ சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் பிறந்தார். இவர், இயற்கைக் கோட்பாட்டை வலியுறுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். கல்வியின் நோக்கங்கள், பயிற்றுமுறைகள், கலைத்திட்டக் கூறுகள் முதலியவை இயற்கையின் இயல்புகளுக்கு ஏற்ப அமையவேண்டும் என்பது இவரது கோட்பாடாகும். தமது இயற்கைக் கோட்பாடுகள் குறித்த செய்திகளை ‘எமிலி’ என்னும் நூலில் வெளியிட்டார். குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்விமுறைக்கு இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். குழந்தைகள் சுதந்திரமாக, தாமே கற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். |
ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்தவர் பிரிட்ரிக் வில்ஹெல்ம் ஆகஸ்ட் புரோபெல். இவர், ‘மழலையர் பள்ளி’ (KINDER GARTEN) கல்வி முறையை உருவாக்கினார். விளையாட்டுகள் குழந்தைகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. எனவே, குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் கற்பிப்பதே சிறந்தது எனக் கருதினார். மாணவர்களின் மன உணர்வுகளை மதிக்கவேண்டும் என வலியுறுத்தினார். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாடிக் காட்டும் வகையில் பாடல் தொகுப்பு வெளியிட்டார். |
|
|
அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளர்களுள் முதன்மையானவர் ஜான் டூயி. கல்வி என்பது செய்து கற்றல் (Learning by doing) என்னும் அடிப்படையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பள்ளி நடைமுறைகளைக் கண்டறிந்தார். ‘சூழ்நிலையோடு பொருத்தப்பாட்டை அடைய ஒருவர் பெறும் பயிற்சியே கல்வி‘ என்பது அவரது கொள்கையாகும். நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துவராத கல்வி பயனற்றது. ஆதலால், மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் அமையவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். |
இத்தாலி நாட்டில் பிறந்தவர் மரியா மாண்டிசோரி. இவர் மருத்துவராக இருந்தார். குழந்தை மையக்கல்வி முறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, குழந்தைகளுக்கான கல்விமுறை ஒன்றினை உருவாக்கினார். அம்முறை “மாண்டிசோரி” கல்விமுறை என்றழைக்கப்படுகிறது. குழந்தைகளின் தனித்தன்மைக்கு ஏற்ப, பாடத்திட்டம் இருக்கவேண்டும் என்றார். குழந்தைகளின் புலன் செயல்பாடுகளைத் தூண்டும் வகையில் துணைக்கருவிகளைப் பயன்படுத்தினார். குழந்தை உளவியலை மையமாகக்கொண்ட ‘மாண்டிசோரி கல்வி முறை” இன்றும் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. |
|
|
இந்தியத் தத்துவவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர், ஜே. கிருஷ்ணமூர்த்தி. இவர் இந்தியாவில் பிறந்தவர். கல்வியானது, ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் என்பது, இவரது கூற்றாகும். இவரது கல்விச் சிந்தனைகள், ‘பள்ளிக்குக் கடிதங்கள்‘ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது சிந்தனைகள் சமகாலத்திற்கு மட்டுமன்று, உலகளாவியதும் ஆகும். சுதந்திரம், ஒழுக்கம், புலன்வழிக் கற்றல், அறிவியல் மனப்பபான்மை, படைப்பபாற்றல் சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கியதாகும். கல்வி என்பது, அடிப்படையில் கற்றல் கலையாகும். இதனைப் புத்தகங்களிலிருந்து மட்டும் பெற இயலாது. வாழ்க்கையின் முழு இயக்கத்திலிருந்தும் பெறவேண்டும் என்பது, இவரது கொள்கையாகும். |
| 1. | சிந்தனை | - | எண்ணம் | ||
| 2. | தொன்மை | - | பழைமை | ||
| 3. | நோக்கம் | - | குறிக்கோள் | ||
| 4. | சுதந்திரம் | - | விடுதலை |
பிளாட்டோவின் கல்விக்கழகத்தில் அரசியல், அறிவியல், கணிதம், வானியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
புரோபெல் ‘மழலையர் பள்ளி’ (KINDER GARTEN) கல்வி முறையை அறிமுகம் செய்தார்.
ஜான் டூயி, கல்வி என்பது ‘செய்து கற்றல்’ (Learning by doing) என்னும் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார்.
குழந்தைகளின் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டம் இருத்தல், குழந்தைகளின் புலன் செயல்பாடுகளைத் தூண்டும் வகையில் துணைக்கருவிகளைப் பயன்படுத்துதல் என குழந்தை உளவியலை மையமாகக் கொண்டு “மாண்டிசோரி கல்வி முறை” அமைந்துள்ளது.
கல்வியின் நோக்கங்கள், பயிற்றுமுறைகள், கலைத்திட்டக் கூறுகள் முதலியவை இயற்கையின் இயல்புகளுக்கு ஏற்ப அமையவேண்டும் என்பது ரூசோவின் கோட்பாடாகும்.
சுதந்திரம், ஒழுக்கம், புலன்வழிக் கற்றல், அறிவியல் மனப்பான்மை, படைப்பாற்றல் சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கியது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்விச் சிந்தனைகள். மேலும் கல்வி என்பது, அடிப்படையில் கற்றல் கலையாகும். இதனைப் புத்தகங்களிலிருந்து மட்டும் பெற இயலாது. வாழ்க்கையின் முழு இயக்கத்திலிருந்தும் பெற வேண்டும் என்பது இவரது கொள்கையாகும்.