ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.2 படிப்போம்

தமிழர் கட்டடக் கலை

நம் உள்ளத்தைக் கவர்வது கலை. கலைகள் பலவகை. அவற்றுள் காவியம், ஓவியம், கட்டடம், சிற்பம் முதலானவை குறிப்பிடத்தக்கவை. உலகில் எல்லா இடங்களிலும் இக்கலைகள் பரவியுள்ளன. தமிழ்நாட்டிலும் இக்கலைகள் வேரூன்றி உள்ளன. அவற்றுள் தமிழகக் கட்டடக் கலைக்குத் தனிச் சிறப்பு உண்டு.

இல்லங்கள், மாளிகைகள், கோவில்கள், பொதுக் கட்டடங்கள் எனப் பல கட்டட வடிவங்களை வடிவமைப்பதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். மாடங்கள், முற்றங்கள் உடைய இல்லங்களை உருவாக்கினர். சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கதவுகளை அமைத்தனர். காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைப் பொருத்தினர். கோவில் கோபுரங்களில் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்தனர். வளாகச் சுவர்களில் பல்வேறு கருத்துகளை விளக்கும் சிற்பங்களை வடிவமைத்தனர். கருங்கற்களில் சிற்பங்களைச் செதுக்கி அவற்றிற்கு உயிர் ஊட்டினர்.

தமிழர் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வது தஞ்சைப் பெரிய கோவில். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு ‘இராசராசேஸ்வரம் கோவில்‘ என்று பெயர். தஞ்சையில் மிகப்பெரிய கோவிலாக இது திகழ்வதால், தஞ்சைப் பெரிய கோவில் என்றே தற்போது அனைவராலும் அழைக்கப்படுகிறது.

முதலாம் இராசராசன் என்னும் சோழமன்னன், சிறப்புவாய்ந்த இக்கோவிலைக் கட்டினான். இக்கோவில், பதினைந்து அடுக்கு கொண்டது. இது, 60 மீட்டர் உயரத்தில் கற்கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் 20 டன் எடை கொண்ட பெரிய ‘நந்தி’ சிலை உள்ளது.

தஞ்சைக் கோவிலின் வாயிலின் மேல் ஐந்து நிலை கொண்ட கருங்கல் கோபுரம் உள்ளது. கோபுரத்தில் தெய்வச்சிற்பங்கள், விலங்குகள் போன்ற அனைத்தும் உயிருள்ள சிற்பங்கள்போல அமைந்துள்ளன. சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இவை விளங்குகின்றன.

பாம்பு ஒன்று யானையை விழுங்குவதுபோலச் சிற்பம் ஒன்று உள்ளது. அப்படியானால், அந்தப் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்கும் என்னும் கற்பனை நம் உள்ளத்தில் தோன்றும். கோபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் புராண நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றன.

கோவிலின் கருவறைப் பகுதிக்கு மேலே உள்ள பகுதியைத் திருவிமானம் என்று கூறுவர். அதன் உச்சியில் மிகப்பெரிய உருண்டை வடிவக் கல் உள்ளது. அக்காலத்தில் இவ்வளவு கற்களை அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு சென்றது மிகவும் வியப்பிற்குரியதாகும்.

கோவிலிலுள்ள எழில்மிகு ஓவியங்கள் இயற்கை வண்ணங்களால் ஆனவை. மண்டபத்தின் உள்ளே அரசனது சிற்பம் இருக்க, சுற்றிலும் நடனப்பெண்கள் நளினத்துடன் ஆடும் சிற்பங்கள் உள்ளன. கோவிலின் பக்கவாட்டுச் சுவரில் நாட்டியக் கலையின் ஆடல் வகைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டு கடந்தும், அழியாமல் இருக்கும் இக்கோவில், சிறந்த கட்டடக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மலைகளோ குன்றுகளோ இல்லை. சமவெளிப்பகுதியில் இக்கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது இக்கோவிலின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும்.

ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) 1987 ஆம் ஆண்டு தஞ்சைப் பெரிய கோவிலை ‘உலகப் பாரம்பரியச் சின்னமாக‘ அறிவித்தது.

கி.பி 1010 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டு ஆனதைக் கொண்டாடும் வகையில், இக்கோவிலுக்கு 2010ஆம் ஆண்டில் பெருவிழா நடத்திச் சிறப்பிக்கப்பட்டது.

பொருள் அறிவோம்

1. சமவெளி - மேடு பள்ளம் இல்லாத பரந்த நிலப்பரப்பு
2. வேரூன்றி - நிலைபெற்று
3. இல்லங்கள் - வீடுகள்
4. சித்திரம் - ஓவியம்
5. நளினம் - அழகு பயிற்சிகள்

விடை காண்போம்

கட்டடக் கலையில் இல்லங்கள், மாளிகைகள், கோவில்கள், பொதுக் கட்டடங்கள் எனப் பல உள்ளன.

தஞ்சைப் பெரிய கோவில் முதலாம் இராசராசன் என்னும் சோழ மன்னனால் கட்டப்பட்டது.

தஞ்சைப் பெரிய கோவிலுக்கு ‘இராசராசேசுவரம் கோவில்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சைக் கோவிலின் வாயிலின் மேல் ஐந்து நிலை கொண்ட கருங்கல் கோபுரம் உள்ளது. கோபுரத்தில் தெய்வச்சிற்பங்கள், விலங்குகள் போன்ற அனைத்தும் உயிருள்ள சிற்பங்கள்போல அமைந்துள்ளன. சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்துள்ள கோபுரம் விளங்குகிறது.

கி.பி. 1010 ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில், இந்தக் கோவிலுக்கு 2010ஆம் ஆண்டில் பெருவிழா நடத்திச் சிறப்பிக்கப்பட்டது.