ழகரம்
(முதல் பருவம்)
குறிப்பு : கி.பி.2147 ஆம் ஆண்டில் நிகழும் கதை. செவ்வாய்க் கோள்குடியேற்றத்தில் பணிசெய்யும் ஒரு ரோபோ, தான் பணி செய்யும்போது இறந்துவிட்டதாகக் கனவு காண்கிறது. அந்தப் பின்னணியில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கப்பட்ட வடிவமே இக்கற்பனைச் சிறுகதை. இதனை எழுதியவர் சுஜாதா. இவர், அறிவியல் புனைகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
கண்களைத் திறக்க முயற்சி செய்தேன், முடியவில்லை. யாரோ இறுக்கமாக அழுத்திப் பிடித்ததுபோல் இருந்தது. பலம் கொண்டு மெதுவாகத் திறந்து பார்த்தேன். குளிரூட்டப்பட்ட ஒரு கண்ணாடிப் பேழைக்குள் நான் கிடத்தப்பட்டிருந்தேன்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ புறநகரிலுள்ள என் வீட்டின் பெரிய வரவேற்பறை அது. நேர்த்தியாக உடை அணிந்து பலர் நின்று கொண்டிருந்தார்கள். பக்கவாட்டில் தலை திருப்பிப் பார்த்தேன். மனைவி ஜோஷ்னாவும் மகள் காவ்யாவும் அழுதுகொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்கு இந்தக் கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தி இருக்கிறார்கள்?
நான் அவர்களை நோக்கி உரக்கக் கத்தினேன். "ஜோஷ்னா...ஜோஷ்னா..." "காவ்யா... காவ்யா..." அவர்கள் என் முகத்தைப் பார்த்து அழுதுகொண்டிருந்தார்களே தவிர... என் அசைவோ, குரலோ அவர்களுக்குக் கேட்கவே இல்லை. என்ன ஆயிற்று எனக்கு? கடைசியாக நிகழ்ந்ததை மெதுவாக மனத்திரைக்குக் கொண்டு வந்தேன்.
நான் அமெரிக்கா நாசா விண்வெளி நிறுவனத்தில் நுண்ணுயிரிப் பொறியியல் துறையின் தலைமை ஆராய்ச்சி மருத்துவர். தற்போதைய செயல்திட்டம் - மார்ஸ் ஓரியன் ஆர்கானிக் பயோ கேப்சூல்-ஹியூமன் காலனி X5. புவியிலிருந்து செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியிருக்கும் விண்வெளி ஆய்வு மையத்தில், இயற்கை விவசாயம் வளர்க்கும் நுண்ணுயிரிப் பொறியியல் குழுமத்தின் டெக்னாலஜி டைரக்டர் நான்.
நேற்று செய்த வேலை நினைவில் நிழலாடியது. மார்ஸ் தாவர ஆய்வு மையத்தின் பழுதடைந்த பயோ கேப்சூலை நானும் ஜேம்ஸ் டிராவிஸும் அண்டத்தில் மிதந்து சரிசெய்து கொண்டிருந்தோம். பணி வெற்றிகரமாக முடியும்போதுதான் அது நிகழ்ந்தது. ஒரு பிரகாச ஒளி எங்களுக்குப் பின்னே வெடித்துச் சிதறியது. எங்கள் இருவராலும் கமாண்ட் கேப்சூலுக்கு உள்ளே வர இயலவில்லை. வெடித்த ஒளிப்பிழம்பில் ஒரு சிறிய ஒளிக்கீற்றாய் எங்கள் உடல் குபுகுபுவெனப் பற்றி எரிய, அணு நொடியில் இருவரும் தொடர்பற்று, பிரபஞ்சத்தில் துகள்களாய்க் கரைந்தோம்.
இதுதான் என் கடைசி நினைவு. இப்போது புரிந்தது. நான் இறந்துவிட்டேன்.. சில நொடிகள் இருக்கும்... கண்ணாடிப் பேழையை யாரோ தட்டுவது போல் இருந்தது. நான் சிலிர்த்து மேல் நோக்கினேன். கருப்பு நிற சூட்டில் இருந்தார் ஒருவர். அவரது கருப்பு நிற சூட்டின் மார்புப் பகுதியில், கணினித்திரை ஓடிக்கொண்டிருக்க, கண் கண்ணாடிக்கு வெளியே நீர்த்திரையாய் கணினி எழுத்துகள் பச்சை நிறத்தில் நகர்ந்துகொண்டிருந்தன.
“நான் எமன். உங்களை அழைத்துச்செல்ல வந்திருக்கிறேன்“ என்றார். நான் அவரைப் பின்தொடர ஆரம்பித்தேன். லேசர் ஒளிக்கதிர் போல் சிவப்பு நிறத்தில் ஏதோவொன்று என்னை அவருடன் பிணைத்திருந்தது. வீட்டு வாசலில் நின்றிருந்த இராணுவ வாகனத்தில் நான் பின்புறம் அமர, அவர் முன்னே அமர்ந்தார். கதவு தானே அடைத்துக்கொள்ள, வாகனம் திடீரென அசுரவேகம் எடுத்துக் காற்றில் கரைந்தது.
அடுத்த நொடி, வெள்ளைப் படலமென இருந்த ஒரு கோளின் ஏதோ ஒரு பகுதியில் அந்த வாகனம் நேராகத் தரை இறங்கியது. சில நொடியில், குறுக்காக வெட்டிய முட்டை வடிவில் ஒரு வாகனம் சப்தமின்றி நிற்க, இருவரும் தானாக உள்ளே அமர்த்தப்பட்டோம். உள்ளே எவருமில்லை. வாகனத்தின் பக்கவாட்டுச் சுவரெங்கும் ஒலியற்ற டிஜிட்டல் சமிக்ஞைகள். எமன் என் ஆட்காட்டி விரலை ஒரு பச்சை நிற ஒயருடன் பிணைக்க, வாகனம் தானாகக் கதவடைத்து, சப்தமின்றிக் கிளம்பியது. அடுத்த சில நொடிகளில், அந்த வாகனத்தின் உட்புறம் முழுவதும் கணினித் திரையாக மாறி இருந்தது. அதில் என் பால்யம் முதல், கடந்த நொடிவரை வாழ்ந்தது திரைப்படம்போல் ஓடியது.
எமன் அமைதியாக ஒரு டிஜிட்டல் தகட்டில் குறிப்பெடுக்க, திரை மறைந்தது. வாகனம் மௌனமாக நின்றது. கதவுகள் தானாகத் திறந்துகொண்டன, சில நொடியில், எனக்கும் எமனுக்கும் நடுவில் பாதரசமாய் ஒரு புதிய உருவம் கண்டேன். பயத்தின் உச்சத்தில் என் இருதயம் இரைச்சலிட, கால்கள் நடுங்கின. எமன் டிஜிட்டல் தகட்டை அதன் தலையின் பின்புறம் செருகினார். அடுத்த நொடி எதிரே இருந்த பெரிய திரையில் அவர்கள் உரையாடல் எந்திரமொழியில் ஓடத்துவங்கியது. பாதரசம் டிஜிட்டலில் பேசியது, ”இவனின் கடந்த வாழ்க்கைக் குறிப்பை நம் கிரக மொழிக்கு மாற்ற முடியவில்லை." "பூமியில் உள்ளவன், அறிவியலில் நமக்கு மேல் போய்விட்டான்." "இவனை இப்போது தண்டிக்க முடியாது. திரும்ப அனுப்பிவிடு." BUT.. "YOU HAVE BEEN TERMINATED FOR MAINTAINING AN INCOMPETENT SYSTEM" - என்றது. எமன் அலற... பாதரசம் கரைந்தது. கூடவே, எமனும் சிறுசிறு துகள்களாய்க் கரைந்தார். என் உடல் மெதுவாக அதிரத்தொடங்க, சிறு புகையாய் நானும் மறைந்தேன். மின் அணு வருடம் #2147 | MARS SPACE MISSION COMMAND CENTER | ALASKA BASE CAMP. USA |
என் உடல் குப்பென வியர்த்திருந்தது. கட்டிலிலிருந்து போர்வையை விலக்கினேன். அப்போ... கண்டது கனவா? நெஞ்சு படபடத்தது. அறையின் மேல் கூரையைப் பார்த்தேன். நேரம் 4.13 AM | வெளி வெப்பம் - 47˚F என லேசர் ஒளியில் பிரதிபலிக்க, கண்ணாடிக் கதவுக்கு வெளியே கடும் பனி பொழிந்து கொண்டிருந்தது. "You woke up so early today" என்ற சமிக்ஞை மின்னி மின்னி மறைந்தது. என் கழுத்தின் பக்கவாட்டில் பிணைத்திருத்த "Virtual Brain Scanner" இலிருந்து பதிவிறக்கம் செய்துமுடித்த சப்தம், பீப்..பீப் ஒலியோடு மெலிதாகக் கேட்டது. கட்டிலிலிருந்து எழுந்து, எதிரிலிருந்த "DATA CENTER" அறையின் கணினி மேசை நோக்கினேன். நேற்று இரவு கழற்றிக் கணினியுடன் பிணைத்துவைத்த என் கபாலத்தின் கண்களில் பச்சைநிறம் காட்டியது.
"DATA CENTER" அறையின் கணினி மேசை நோக்கி நடந்தேன். கபாலம் பிணைத்திருந்த அகன்ற திரையில் "DATA ARCHIVE COMPLETED. REPLICATION SERVER UPLOAD IN PROGRESS.." எனக் காட்ட, கண்ட கனவு வெள்ளோட்டமாய் ஓடிக்கொண்டிருந்தது. "Virtual Brain Scanner" ஐ அணைத்தேன். ஒயர்களுடன் பிணைத்த கரத்தில் கபாலத்தைக் கரம்பற்றித் தலையற்ற உடலுடன் கண்ணாடி நோக்கி நடந்தேன்
| 1. | பேழை | - | பெட்டி | ||
| 2. | அண்டம், பிரபஞ்சம் | - | உலகம் | ||
| 3. | சப்தம் | - | ஒலி | ||
| 4. | பால்யம் | - | இளமைக்காலம் | ||
| 5. | கபாலம் | - | மண்டை ஓடு | ||
| 6. | கரம் | - | கை | ||
| 7. | பிணைத்திருந்தது | - | சேர்த்திருந்தது | ||
| 8. | பலம் | - | வலிமை | ||
| 9. | மௌனம் | - | அமைதி | ||
| 10. | பயம் | - | அச்சம் | ||
| 11. | மார்ஸ் கிரகம் | - | செவ்வாய்க்கோள் | ||
| 12. | சமிக்ஞை | - | குறிப்பு | ||
| 13. | நோக்கு | - | பார் | ||
| 14. | பொழிதல் | - | பெய்தல் | ||
| 15. | இரைச்சல் | - | சத்தம் |
கி.பி. 2147
எந்திர மனிதர்கள்
நுண்ணுயிரி பொறியியல் துறையின் ஆராய்ச்சி மருத்துவர், மார்ஸ் தாவர ஆய்வு மையத்தின் பழுதடைந்த பயோ கேப்சூலைச் சரி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒளிப்பிழம்பில் உடல் பற்றி எரிந்து இறந்து விட்டார். அதனால் அவர் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தார்.
எமன்
பாதரசம், ஆராய்ச்சி மருத்துவரின் கடந்த வாழ்க்கைக் குறிப்பை நம் கிரக மொழிக்கு மாற்ற முடியவில்லை. பூமியில் உள்ளவன், அறிவியலில் நமக்கு மேல் போய் விட்டான். இவனை இப்போது தண்டிக்கமுடியாது. அதனால் திரும்ப அனுப்பிவிடு எனக் கூறியது.
எதிர்காலத்தில் எந்திர மனிதர்களின் ஆதிக்கம் மிகுந்து இருக்கும். கணினியின் மூலமாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். இத்தகைய எந்திர உலகத்தில் மனிதன் எந்திரமாகவே வாழ்ந்து கொண்டிருப்பான்.