ழகரம்
(முதல் பருவம்)
மனிதன் பேசுவது இயற்கை மொழி. இம்மொழியைத் தான் வாழும் சூழலிலிருந்து பெறுகிறான். இதனைக்கொண்டு, தன் தேவைகளை நிறைவு செய்கிறான். இதன் அடிப்படையில் மொழிகற்றல், திறம்படக் கையாளுதல் ஆகியவை உற்றுநோக்கப்படுகின்றன. இவற்றை அறிந்துகொண்டு கணினிக்கு அளிக்கும் வழிமுறைகள் ஆராயப்படுகின்றன. இதனையே இயற்கை மொழி ஆய்வு எனக் கூறுகிறோம்.
ஒரு மொழியிலுள்ள மொழிக்கூறுகளை எளிமையாகப் புரிந்துகொள்ளவும் அம்மொழிக்கூறுகளைச் செயற்கையாக உருவாக்கவும் இயற்கை மொழி ஆய்வு உதவுகிறது. இதன் வாயிலாக, செயற்கை மொழித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரிய மொழித் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்படுகின்றன.
தானாகச் செய்துமுடிக்கின்ற ஒரு கருவியை உருவாக்குவதே இயற்கை மொழி ஆய்வின் நோக்கமாகும். அதாவது மனிதன் செய்வதுபோலத் தானே பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளும் கணினியியல் மாதிரிகளை உருவாக்குதலாகும். இத்தகைய கணினியியல் மாதிரிகள் மனிதர்களுக்கும் கணினிக்கும் இடையே இருக்கின்ற தொடர்பியல் தடைகளை நீக்குகின்றன.
மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழிகள் இயற்கை மொழியிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, கணினியில் பயன்படுத்தும் நிரலாக்க மொழிகளான C, C++, JAVA, Perl, Python போன்றவை செயற்கை மொழிகளாகும்.
இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ நூலையோ கணினி மூலம் மொழிபெயர்ப்பது இயந்திர மொழிபெயர்ப்பு ஆகும். இது கணினி மொழியியலின் ஒரு பிரிவாகும். மூல நூலின் பொருளைக் கணினி மொழிக்கு மாற்றி, பின்னர் இலக்கு மொழியில் அதனை மீண்டும் மொழிபெயர்ப்பதே இயந்திர மொழிபெயர்ப்பாகும். மூலமொழிப் பனுவலைக் கணினி மொழிக்கு மாற்ற, அந்த மொழியின் கூறுகள் அனைத்தையும் அதாவது இலக்கணம், பொருண்மை, தொடர், மரபுத்தொடர் முதலானவற்றைப் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும். அத்துடன் அம்மொழியின் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்திருக்கவேண்டும்.
இன்றைய சூழலில் மொழியியல் ஆய்வுகள், கணினி அறிவியலுக்கு மிகவும் தேவைப்படுகின்றன. கணினியானது மொழியின் அமைப்பை ஒலியனியல், உருபனியல், தொடரியல், பொருண்மையியல் என்ற நிலைகளில் ஆய்வதற்கு உதவுகிறது. மேலும், மொழிக்கருவிகள் உருவாக்குவதற்கும் பயன்படுகின்றது. அகராதி தயாரிக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தி மிக எளிதாக அகராதிகள் தயாரிக்கப்படுகின்றன.
கணினியின் உதவியால் மொழி கற்பது தற்போது இனிய அனுபவமாக மாறியுள்ளது. கற்றல் மென்பொருள்களைப் பயன்படுத்திக் குழந்தைகள் விளையாடிக்கொண்டே ஆர்வத்துடன் மொழியைக் கற்கின்றனர். உரைப்பகுதியைப் பேச்சாகவும் பேச்சை உரையாகவும் மாற்றும் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கணினியின் பயன்பாட்டால் மொழிபெயர்ப்பு எளிய வேலையாக மாறியுள்ளது. வருங்காலத்தில் செல்பேசியில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் அதனை எதிர்முனையில் இருப்பவர் தமிழில் கேட்க முடியும். நாளைய உலகம் கணினியின் கையில் என்பது உறுதி செய்யப்படுகிறது.
| 1. | சூழல் | - | சுற்றுப்புறம் | ||
| 2. | நிறைவு | - | முழுமை | ||
| 3. | திறம்பட | - | மிகச்சிறப்பாக | ||
| 4. | கையாளுதல் | - | மேற்கொள்ளுதல் | ||
| 5. | பனுவல் | - | நூல் |
மனிதன் பேசும் மொழியில் மொழி கற்றல், திறம்படக் கையாளுதல் ஆகியவற்றை அறிந்து கொண்டு கணினிக்கு அளிக்கும் வழிமுறைகளை ஆராய்வதே இயற்கை மொழி ஆய்வு எனப்படும்.
மனிதர்கள் பேசுவது இயற்கை மொழி.
கணினியில் பயன்படுத்தும் நிரலாக்க மொழிகளான C, C++, JAVA, Perl, Python போன்றவை செயற்கை மொழிகளாகும்.
மனிதனைப் போலவே தானாகப் பேசி எழுதி படிப்பதைத் தானாகச் செய்து முடிக்கின்ற ஒரு கருவியை உருவாக்குவதே இயற்கைமொழி ஆய்வின் நோக்கமாகும்.
இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ நூலையோ கணினி மூலம் மொழிபெயர்ப்பது இயந்திர மொழிபெயர்ப்பு ஆகும்.
மொழி கற்பது தற்போது இனிய அனுபவமாக மாறியுள்ளது. மொழிபெயர்ப்பு எளிய வேலையாக மாறியுள்ளது. கற்றல் மென்பொருள்களைப் பயன்படுத்திக் குழந்தைகள் விளையாடிக்கொண்டே ஆர்வத்துடன் மொழியைக் கற்கின்றனர்.