ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 23
23.2 படிப்போம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல்
(சிறுகதை)

நல்லூர் என்னும் சிற்றூரில் பொன்னன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மகன்கள் இருவர். மூத்த மகனின் பெயர் அன்பு. இளைய மகனின் பெயர் அறிவு. ஒருநாள், பொன்னன் கடைக்குச் சென்றான். திரும்பி வரும்போது விளையாட்டுப்பொருள்களை வாங்கிவந்தான். அப்பாவின் கையிலிருக்கும் பையைப் பார்த்தவுடன் அன்பு பாய்ந்தோடி வந்தான். பையை வேகமாக இழுத்தான். அப்போது பையிலிருந்த விளையாட்டுப்பொருள்கள் கீழே விழுந்தன. கண்ணாடியால் ஆன விளையாட்டுப்பொருள் ஒன்று உடைந்து சிதறியது. மரத்தால் ஆன மற்றொரு பொருள் உடையவில்லை. அன்பு, தன்னால்தானே பொருள் உடைந்தது என்று சிறிதும் கவலைப்படாமல், மரத்தாலானபொருளை எடுத்து வைத்துக்கொண்டான்.

பொன்னன், அன்புவின் செயலைக் கண்டான். அப்போது, அங்கு அறிவு வந்தான். அறிவைப் பார்த்த அன்பு, “இதோ பார் அறிவு, அப்பா உனக்காக வாங்கிவந்த விளையாட்டுப் பொருள் கீழே விழுந்து உடைந்துவிட்டது. இதோ, இந்தப் பொருள் என்னுடையது. இதை நான் உனக்குத் தரமாட்டேன்“ என்றான். அண்ணனின் குணத்தை அறிவு நன்கு அறிவான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

பள்ளியில் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. ஓட்டப்போட்டியில் அன்பு கலந்துகொண்டான். ஆசிரியரின் ஊதல் ஒலி கேட்டதும் எல்லாரும் ஓடத் தொடங்கினர். அன்புக்கு முன்னால் மாறன் ஓடிக்கொண்டிருந்தான். அவனைத் தாண்டி ஓட அன்பு முயற்சி செய்தான். ஆனால் முடியவில்லை. சில நொடியில் தனக்கு இரண்டாம் இடம்தான் கிடைக்கப்போகிறது என்பதை ஊகித்த அன்பு திடீரென வேகமெடுத்து மாறனை இடித்துவிட்டு ஓடினான். இதனால் மாறன் சற்றுத் தடுமாறி ஓட முயல்வதற்குள் அன்பு வெற்றிக்கோட்டைத் தொட்டுவிட்டான். அவனுக்குத்தான் முதற்பரிசு கிடைத்தது.

அன்புவிடம் வேண்டாத தீய குணங்கள் இருப்பதை ஆசிரியர் கண்டார். அவனைத் திருத்த முடிவுசெய்தார். மறுநாள் அழகிய சிறு பெட்டியுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர், மாணவர்களிடம் “அழகிய வேலைப்பாடு கொண்ட இந்தப்பெட்டி உங்களுள் ஒருவருக்குத்தான் கிடைக்கும்“ என்றார். மாணவர்கள் உற்சாகத்துடன், “நாங்கள் என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள்“ என்றனர். “மிகவும் எளிது. நீங்கள் செய்த நற்செயல் ஒன்றைக் கூறவேண்டும். அச்செயல் அனைவராலும் பாராட்டப்படவேண்டும். மேலும், நீங்கள் கூறிய செய்தியில் உண்மை இல்லை என்றால் இந்தப் பெட்டி உங்களுக்குக் கிடைக்காது“ என்றார் ஆசிரியர். மாணவர்களும் ஆர்வத்துடன் தாம் செய்த நற்செயலைக் கூறத் தொடங்கினர். ஆசிரியர் ஒவ்வொருவர் கூறியதையும் குறித்து வைத்துக்கொண்டார்.

அன்புவைத் தவிர வகுப்பிலுள்ள அனைவரும் கூறிவிட்டனர். அன்பு என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தான். வகுப்பு அமைதியாக இருந்தது. ஆசிரியர், அன்புவை அழைத்தார். “என்ன அன்பு, நீ ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாய்? வா, வந்து சொல்“ என்றார். அன்பு தயங்கித்தயங்கி நடந்து வந்தான். இப்போது அவனது கண்கள் கலங்கி இருந்தன. அவன் தன் தவற்றை உணர்ந்துவிட்டான் என்பது அவனது செயலில் தெரிந்தது.

அன்பு பேசத் தொடங்கினான், “எல்லாரும் செய்து முடித்த நற்செயல்களைப் பற்றிக் கூறினீர்கள். ஆனால் அப்படிச் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. நான் செய்த தீய செயல்கள் பலருக்குத் துன்பத்தைத்தான் தந்தன. என் செய்கையால் மற்றவர்கள் எந்த அளவிற்கு வருத்தம் அடைந்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆகவே, நான் இனிமேல் நற்செயல்களை மட்டும் செய்யப்போகிறேன். எல்லாரிடத்தும் அன்பு காட்டுவேன். பெரியோரை மதிப்பேன். பொய், பொறாமை ஆகிய தீய குணங்களை நீக்குவேன். என்னுடைய செயல்களால் நற்பண்புமிக்க உங்களுடைய நட்பை இழந்திருக்கிறேன். இனியும் நான் இப்படி இருப்பது நல்லதன்று. எனவே, என்னைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளியுங்கள்” என்றான் அன்பு.

ஆசிரியர், அன்புவின் முதுகில் மெதுவாகத் தட்டி அவனை அரவணைத்தார். “உன் மனத்திலுள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கிவிட்டன. இனி நீ செய்கின்ற ஒவ்வொரு நற்செயலும் உன்னை அடையாளம் காட்டும்“ என்று கூறிய ஆசிரியர், அந்த அழகிய பெட்டியை அன்புவுக்கே பரிசளித்தார். நற்செயல் கூறிய மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிப் பாராட்டினார்.

பொருள் அறிவோம்

1. குணம் - பண்பு
2. ஊகித்தல் - கருதுதல்
3. வேகம் - விரைவு
4. உற்சாகம் - மகிழ்ச்சி
5. அரவணைத்தல் - பாதுகாத்தல்

அன்பு, அறிவு

அன்பு சுயநலம் மிக்கவன். பொய், பொறாமை போன்ற தீயகுணங்களைப் பெற்றிருந்தான்.

பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அன்பு, திடீரென தனக்கு முன்னால் ஓடிய மாறனை இடித்து விட்டு ஓடினான். இதனால் நிலை தடுமாறிய மாறன் ஓட முயல்வதற்குள் அன்பு வெற்றிப் பெற்றான்.

ஆசிரியர் அன்புவின் குணத்தை மாற்ற எண்ணி மாணவர்களிடம் தாங்கள் செய்த நற்செயல்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றார். மேலும் அனைவராலும் பாராட்டும் வகையில் நற்செயல்களைச் செய்த ஒருவருக்கு அழகான பெட்டி பரிசாக வழங்கப்படும் என்றார்.

அன்பு, என்னுடைய தீய செயல்கள் பலருக்குத் துன்பத்தைத் தந்தன. என் செய்கையால் மற்றவர்கள் எந்த அளவிற்கு வருத்தம் அடைந்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்; ஆகவே, இனிமேல் நான் எல்லாரிடத்தும் அன்பு காட்டுவேன்; பெரியோரை மதிப்பேன்; பொய், பொறாமை ஆகிய தீய குணங்களை நீக்குவேன்; எனவே, என்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளியுங்கள் என்றான்.