ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 23
23.5 கேட்டல் கருத்தறிதல்

உயர் அலுவலர் தந்த பரிசு

ஓர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த உயர் அலுவலர் ஒருவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். எந்த ஊழியராவது தவறு செய்துவிட்டால், கடுமையாகத் திட்டுவார். அதனால், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மனவருத்தம் கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில், முருகனுக்கு அங்கு வேலை கிடைத்தது. அன்று அவன் தட்டச்சு செய்த தாளில் தவறு நேர்ந்துவிட்டது. அந்த உயர்அலுவலர், முருகனை அழைத்தார். அவன் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டி, வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார். முருகன் எதுவும் பேசாமல், தன் இருக்கைக்குச் சென்றான். தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். இதுபோல், அடிக்கடி நடந்தது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள், முருகனிடம் சென்றார்கள். “என்னப்பா, அந்த உயர்அலுவலர் இப்படிக் கடுமையாகத் திட்டுகிறாரே, உனக்கு வருத்தமாக இல்லையா?“ என்று கேட்டனர். அதற்கு முருகன், “நான் இங்கு வேலையில் சேரவரும்போது ஒரு காட்சியைக் கண்டேன். ஓர் ஆண், ஒரு பெண்ணுக்குப் பரிசுப்பொருள் கொடுக்க, அதனை அவள் வாங்க மறுக்கிறாள். அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறான். அவள் வாங்கவேயில்லை. அப்படியானால், அந்தப் பரிசுப்பொருள் யாருக்குச் சொந்தம்?“ என்று கேட்டான். “அந்த ஆணுக்குத்தான் சொந்தம்“ என்றனர் மற்ற ஊழியர்கள். “அதேதான். நம் உயர்அலுவலர், அவருடைய கடுமையான கோபத்தையும் மூர்க்கத்தனத்தையும் எப்படியாவது என்மீது திணிக்கப் பார்க்கிறார். நான் அதை வாங்கிக் கொள்ளவில்லை. மேலும், நான் செய்த தவற்றைக் கண்டறிந்து திருத்தம் செய்வதோடு, அடுத்த வேலையில் கவனம் செலுத்துவதில் என் நேரத்தைச் செலவிடுகிறேன்“ என்றான் முருகன்.

வினாக்கள்

கடுமையான கோபம், மூர்க்கத்தனம்

முருகன் தட்டச்சு செய்யும் போது தவறு செய்து விட்டார்.

முருகனிடம் மற்ற ஊழியர்கள், “என்னப்பா, அந்த உயர் அலுவலர் இப்படிக் கடுமையாகத் திட்டுகிறாரே, உனக்கு வருத்தமாக இல்லையா?” என்று கேட்டனர்.

முருகன், உயர்அலுவலர், அவருடைய கடுமையான கோபத்தையும் மூர்க்கத்தனத்தையும் எப்படியாவது என் மீது திணிக்கப் பார்க்கிறார். நான் அதை வாங்கிக் கொள்ளவில்லை. மேலும், நான் செய்த தவற்றைக் கண்டறிந்து திருத்தம் செய்வதோடு, அடுத்த வேலையில் கவனம் செலுத்துவதில் என் நேரத்தைச் செலவிடுகிறேன் என்று ஊழியர்களுக்குப் பதிலளித்தார்.

வேலையை முழுமனதோடு பிழையில்லாமல் செய்யும் போது பணி நிறைவு ஏற்படும்.