ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 24
24.2 படிப்போம்

அறநூல்கள்

மக்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய இன்றியமையாத பண்பு, ஒழுக்கம். அவ்வொழுக்க நெறியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதே அறம். தம்மால் இயன்றதைப் பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் அறச்செயல்தான். அறம் என்பது மனத்தூய்மை என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். நமது மனம் எப்போதெல்லாம் தூய்மையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் அறவழியில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நீதி, முறைமை என்பனவும் அறத்தையே குறிக்கின்றன. மக்களுக்கு நீதி புகட்டக்கூடிய நூல்களை அறநூல்கள் என்கிறோம். தமிழில் பதினெட்டு நூல்களைக்கொண்ட தொகுப்பிற்குப் பதினெண்கீழ்க்கணக்கு என்று பெயர். அத்தொகுப்பிலுள்ள பதினெட்டு நூல்களுள் பின்வரும் பதினொரு நூல்கள் அறக்கருத்துகளை எடுத்துக் கூறுகின்றன.

1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது
6. திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8. பழமொழி நானூறு
9. சிறுபஞ்சமூலம்
10. முதுமொழிக்காஞ்சி
11. ஏலாதி

உலகப்பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு அடுத்ததாக எண்ணத்தக்க நூல் நாலடியார். “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி“ என்னும் பழமொழியில் நாலும் இரண்டும் என்பது, நாலடியாரையும் திருக்குறளையும் குறிக்கிறது. மேலும், “பழகு தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில்” என்ற தொடரும் இவற்றின் பெருமையைக் கூறுகிறது. இவ்விரு நூல்களும் மனித வாழ்வுக்குரிய அறக்கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இவற்றைக் கற்பதால் உள்ளம் செம்மைப்படும். இப்பாடப்பகுதியில் நாலடியார் நூலைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.

நாலடியார் என்னும் இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன. இந்நூலானது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளையும் நாற்பது அதிகாரங்களையும் கொண்டது. ‘நாலடி நானூறு‘, ‘வேளாண் வேதம்‘ என்பன இந்நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள். இந்நூலிலுள்ள பாடல்கள் சமண முனிவர்களால் இயற்றப்பட்டன.

நாலடியார், அறக்கருத்துகளைத் தக்க சான்று காட்டி விளக்குகிறது. மிகச் சிறிய ஆலம் விதை, வளர்ந்து ஓங்கித் தழைத்து மிக்க நிழலை உயிரினங்களுக்குத் தந்து உதவுகிறது. அதுபோல, அறம் செய்யும் பொருள் மிகக் குறைவாக இருப்பினும், அது தகுதியுடையவர் கையில் சேர்ந்தால் அதன் பயன் வானத்தைவிட உயர்ந்ததாகும் என அறத்தின் சிறப்பை ஒரு பாடல் விளக்குகிறது.

பெரியோர் நட்பு, பிறைநிலவைப் போன்றது. நாள்தோறும் படிப்படியாக வளரும். சிறியோர் (தகுதியில்லாதவர்) நட்பு முழுநிலவைப் போன்றது. நாள்தோறும் சிறிது சிறிதாகக் குறைந்து, தானே தேய்ந்து போகும் என்னும் பாடல், நட்பின் பெருமையை எடுத்துக் கூறுகிறது.

பாலுடன் கலந்த தண்ணீர் பாலாகவே தோன்றுமே அன்றி, நீரின் நிறத்தை வேறுபடுத்திக் காட்டாது. அதுபோல, நற்பண்புமிக்க பெரியோர்களுடன் சேர்ந்திருக்கும்போது, சிறியோரின் சிறுமைக்குணம் வெளிப்படாது என்னும் கருத்து அமைந்த பாடல், நற்பண்புகளின் சிறப்பை உணர்த்துகிறது.

இவ்வாறு, அறவாழ்வால் வரும் மேன்மையை நாலடியார் மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. இந்நூல், திருக்குறளுக்கு இணையாக கருதப்படுகிறது. இந்நூலின் பெருமையை உணர்ந்த ஜி.யு.போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பொருள் அறிவோம்

1. கடைப்பிடித்தல் - பின்பற்றுதல்
2. நெறி - முறை / வழி
3. புகட்டுதல் - அறிவுறுத்துதல்
4. தழைத்து - செழித்து
5. மேன்மை - உயர்வு
6. ஈடாக - ஒப்பாக / சமமாக

விடை காண்போம்

நாலடி நானூறு, வேளாண் வேதம்

நாலடியார், திருக்குறள்

ஜி.யு. போப்

பெரியோர் நட்பு, பிறை நிலவைப் போன்றது, நாள் தோறும் படிப்படியாக வளரும். சிறியோர் (தகுதியில்லாதவர்) நட்பு முழுநிலவைப் போன்றது. நாள்தோறும் சிறிது சிறிதாகக் குறைந்து, தானே தேய்ந்து போகும் என்னும் கருத்தில் அமைந்த பாடல், நட்பின் பெருமையை எடுத்துக் கூறுகிறது.

மிகச்சிறிய ஆலம் விதை, வளர்ந்து ஓங்கித் வளர்ந்து தழைத்து நிழலை உயிரினங்களுக்குத் தந்து உதவுகிறது. அது போல, அறம் செய்யும் பொருள் மிகக்குறைவாக இருப்பினும், அது தகுதியுடையவர் கையில் சேர்ந்தால் அதன் பயன் வானத்தை விட உயர்ந்ததாகும் என அறத்தின் சிறப்பை நாலடியார் பாடல் விளக்குகிறது.